• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-05 15:26:00    
பெருஞ்சுவரின் பெருமை

cri

"பெருஞ்சுவரைப் பார்க்காத பிறவியும் ஒரு பிறவியா?" என்று சீனர்கள் சொல்கிறார்கள். மனிதனாய்ப் பிறந்து விட்ட ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு தடவையாவது பெருஞ்சுவர் ஏறி நடந்திருக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் முழுமையற்ற மனிதனாம். சரி, அரை குறை மனிதன் என்ற அவப்பெயர் எனக்கு வந்து விடக் கூடாதே என்பதற்காக, சீனப் பெருஞ்சுவரைக் காணச் சென்றேன். கூடவே சகோதரி வாணி (சீனத் தமிழ் ஒலிபரப்பாளர்) விளக்கமளித்தபடி வந்தார்.


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட சீனாவில் இருந்த ஹுன் இனத்துப் பழங்குடிகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, தென் சீனாவில் இருந்த சின், ச்சாவ், யான் என்னும் மூன்று தேசங்களின் மன்னர்கள் தங்களது எல்லைகளில் தனித்தனியாக நெடுஞ்சுவர்களைக் கட்டினார்கள். ஆனால், அவை இணைக்கப்படாமல் இருந்தன. அது ஏழு தேசங்கள் போரிட்டுக் கொண்டிருந்த வரலாற்றுக் கால கட்டம் வரலாற்றில் போரிடும் தேசங்கள் காலம் என்றே அது அழைக்கப்படுகிறது. ச்சின் தேசத்தின் முதல் பேரரசர் கி. மு. 215ஆம் ஆண்டில் மற்ற ஆறு தேசங்களைத் தோற்கடித்து, ஒரே சீனாவாக உருவாக்கினார். அப்போது அவருடைய ராணுவத்தில் மெங் தியன் என்னும் தளபதியின் கீழ் மூன்று லட்சம் படைவீரர்கள் இருந்தனர். போரில் வெற்றி பெற்றதும் அந்த மூன்று லட்சம் படைவீரர்களையும் நெடுஞ்சுவர்களை இணைக்கும் படி பேரரசர் கட்டளையிட்டார். உதவிக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டனர். பத்தாண்டுகள் அரும்பாடுபட்டு, தனித்தனியாக இருந்த மூன்று நெடுஞ்சுவர்களை இணைத்து, பெருஞ்சுவரை உருவாக்கினார்கள். இது வரலாற்று நூலில், "சின் பெருஞ்சுவர்" என்றே குறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆட்சி புரிந்த வம்சங்கள் அவ்வப்போது பெருஞ்சுவரைச் செப்பனிட்டு நீட்டித்தன. கடைசியாக 1500ஆம் ஆண்டில் மிங் வமிச பேரரசால் இப்போதைய பெருஞ்சுவர் இறுதிவடிவம் பெற்றது.


பிரம்பாண்டமான மலைப்பாம்பு ஒன்று வளைந்து நெளிந்து ஊர்ந்து செல்வது போல கண்கொள்ளாக் காட்சி. காணக் கண்கோடி போதாது. கிழக்கே, ஷன்னஹசுவான் என்ற இடத்தில் கிழக்குச் சீனக் கடற்கரையில் இருந்து தொடங்கி, மேற்கே உள்மங்கோலியா, ஷாங்ச்சி, ஹங்ளி, நிங்சியா ஆகிய மாநிலங்களின் வழியாகக் கடந்து, கன்சு (Gan Su) மாநிலத்தின் ஜியாயு சுவான் என்ற இடத்தில் முடியும் இந்த டிராகன் பெருஞ்சுவரின் நீளம் 6300 கிலோமீட்டர். (சீன மொழியில் இதன் நீளத்தை 12,700 லி என்கிறார்கள்) ஒரு லி என்பது பொதுவாக இதை 10,000 லி பெருஞ்சுவர் என்றே அழைக்கின்றனர்.
இந்தப் பெருஞ்சுவரைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பாறைகளையும், செங்கற்களையும் கொண்டு, பூமி முழுவதையுமே சுற்றி, இரண்டரை மீட்டர் உயரத்திலும், ஒரு மீட்டர் அகலத்திலும் ஒருமகாப் பெருஞ்சுவரைக் கட்டிவிடலாம் என்கிறார்கள். அப்படியும் நிறையக் கட்டுமானப் பொருட்கள் மிச்சம் இருக்குமாம். காடு, மலை மேடேறி, கடலும் நதியும் கடந்து, பாலைநிலம் வழியே ஊடுருவிப் பரவும் இந்தப் பெருஞ்சுவர், அந்தந்த இடங்களின் புவியமைப்புக்கு ஏற்ப வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ளது. கடலோரங்களில் பாறைகளும் மன்ற இடங்களில் செங்கற்களும் வெளிச்சுவர் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெருஞ்சுவரின் மேலே, இருபுறங்களிலும் குட்டையான கைப்பிடிச் சுவர்கள் உள்ளன. அவற்றிலே படைவீரர்கள் ஒளிந்திருந்து, எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு வசதியாகச் சிறு சிறு துளைகள். 130 மீட்டர் இடைவெளிவிட்டு, பல கொத்தளங்கள்.

அவற்றின் உச்சியில் ராணுவத் தாவல்களை அனுப்புவதற்கு உதவியாகப் பல கண்காணிப்புக் கோபுரங்கள், போர்க் காலங்களில் எதிரிகள் தட்டுப்பட்டு விட்டால், உடனே மற்றவர்களை எச்சரிப்பதற்காக, இந்தக் கோபுரங்களின் உச்சியில் பகல் நேரத்தில் நரிகளின் சாணம் எரிக்கப்பட்டு, அடர்த்தியான புகை எழுப்பப்பட்டது. இரவு நேரத்தில் விறகுகள் எரிக்கப்பட்டு, வெளிச்ச அறிகுறிகள் காட்டப்பட்டன. புகையையும், வெளிச்சத்தையும் தூரத்தில் இருந்து பார்ப்போர் எதிரியின் வருகையைப் புரிந்து கொள்வார்கள்.இவ்வளவு பெரிய பிரம்பாண்டமான பெருஞ்சுவரைக் கட்டுவது லேசான வேலையல்ல. நடுக்கும் குளிரிலும், கடுக்கும் கோடையிலும் மணலையும் புழுதியையும் விசிறியடிக்கும் பாலையிலும், அயராது உழைத்து அலுத்துக்களைத்து ஆயிரக்கணக்கான வீரர்களும், தொழிலாளர்களும் பெருஞ்சுவரின் அடிவாரத்திலேயே உயிர் விட்டுள்ளனர்.