அண்மையில் சீன வானொலியில் பணியாற்றும் பல்வேறு மொழி நிபுணர்களை பெய்த்தேஹெ என்ற கடலோர நகருக்கு சுற்றுலாவாக அழைத்துச் சென்றனர். பெருஞ்சுவரின் கிழக்கு முனை கட்டப்பட்ட போஹாய் கடற்கரை அருகில் இருப்பதாக அறிந்து அதைக் காணச் சென்றோம். அதற்குமாக அருகிலே ஷன்னஹ சுவான் கனவாய் இருப்பதாகச் சொன்னார்கள்.

இங்கே சென்ற போது, கணவாய்க்குத் தென் கிழக்கே கடலில் இரண்டு பெரிய பாறைகள் நின்றன. நாரைகளும், கொக்குகளும் அவற்றைச் சுற்றிச் சுற்றிப் பறந்த படி ஒலமிட்டன. இந்தக் காட்சி எனக்கு விநோதமாக இருந்தது. வழிகாட்டியாக வந்த சீனப் பெண்ணிடம், கேட்டேன். அதைப் பற்றி அவள் சொன்ன கதை மிகவும் உருக்கமாக இருந்தது.

பெருஞ்சுவரின் கட்டுமான வேலைகள் தொடங்கிய காலம் அது. ஒரு கிராமத்தில் மெங் என்றொரு குடும்பமும் ஜியாங் என்றொரு குடும்பமும் நீண்டகாலமாக நட்போடு அருகருகே வாழ்ந்து வந்தன. ஒரு தடவை அந்த இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு மெலன் விதையை நட்டன. ஓராண்டில் அந்தக் கொடி படர்ந்து ஒரு பெரிய மெலன் பழம் விளைந்தது. அதைப் பகிர்ந்து கொள்வதற்காக இரண்டாக வெட்டிய போது உள்ளே பெரிய கண்களுடன் அழகான ஒரு பெண் குழந்தை காணப்பட்டது. இரண்டு குடும்பங்களுக்கும் பொதுவான அந்தக் குழந்தைக்கு 'மெங் ஜியாங் து' என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்தனர்.

பருவத்திற்கு வந்ததும் பொருத்தமான ஒரு மாப்பிள்ளையைத் தேடினர். வான் ச்சி லியாங் என்ற அழகிய இளைஞனைத் தேர்ந்தெடுத்து நிச்சயித்தனர். ஆனால் மண நாளுக்கு முன்பே பெருஞ்சுவர் கட்டும் வேலைக்கு இளைஞர்களைத் திரட்ட மன்னரின் படை கிராமத்திற்குள் நுழைந்தது. வான் ச்சி லியாங் அவர்களின் பார்வையில் இருந்து தப்பித்து, தனக்குக் குறிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு வந்தான். உடனே அன்றிரவே மணமுடித்து வைத்தனர். மறு நாள் பொழுது புலர்வதற்கு முன்பே மணமகனை படைவீரர்கள் இழுத்துச் சென்று விட்டனர். போகும் போது "நாமிருவரும் ஓர் இரவு மட்டுமே கணவன்-மனைவியாக வாழ்ந்திருக்கிறோம். நமது காதல் கடலைப் போல் ஆழமானது. இனி திரும்பி வருவேனர் என்று தெரியாது. உன்னைப் பார்த்துக் கொள்" என்று கூறி விட்டு வான் ச்சி லியாங் சென்றான்.

அவனைத் தேற்றுவதற்காகத் தனது தலையில் குத்தியிருந்த ஒரு மரகதக்கல் கொண்டை ஊசியை எடுத்து இரண்டாக உடைத்தாள் மெங் ஜியாங் னு. "இந்த மரகதம் போன்று என் இதயம் தூய் மையமானது" என்று கூறி ஒரு பாதியை அவனிடம் கொடுத்தாள். "என் நினைவாக இதை வைத்துக் கொள் மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள்.

|