"ஹா... ஹா... இரண்டு சோப்புக் கட்டிகள்.." திடீரென தாவோ துங் வெடிச் சிரிப்பு சிரித்தார். செவிப்பறை கிழிந்து விடும் போல் இருந்தது. "சோப்பு வாங்கறது. ஹோ, ஹோ."
"தாவோ துங்... தாவோ துங்... இவ்வளவு பெரிசா சத்தம் போடாதீங்க" அரண்டு போன ஸு மின் அவரைப் பிடித்து வலுக்கினார்.
"நல்லாத் தேய்க்கணும். ஹோ... ஹோ..."
"தாவோ துங்." ஸு மின் கண்டிப்பான குரலில் அதட்டினார். "நாம தீவிரமான விஷயங்களை பேசிக்கிட்டு இருக்கோம். ஏன் இப்படிக் கத்துறீங்க. எல்லாரையும் செவிடாக்குவீங்க போலிருக்கே. நான் சொல்றதைக் கேளுங்க. நாம ரெண்டு தலைப்புக்களையும் பயன்படுத்துவோம். நேரடியா பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்புவோம். அப்படிதான் நாளைக்கு வெளியிட முடியும். நீங்க ரெண்டு பேரும் அதக்கொண்டு போயி கொடுத்துடுங்க."
"சரி, சரி. கட்டாயம். கொண்டு போய் சேர்த்துடுவோம்." வெய் யுவான் உடனே ஒப்புக் கொண்டார்.
"ஹா... ஹா..." கோபத்துடன் அதட்டல் போட்டார் ஸு மின்.
தாவோ துங் சிரிப்பை நிறுத்தினார். விளக்கத்தை அவர்கள் எழுதி முடித்த பிறகு வெய் யுவான் படி எடுத்தார். தாவோ துங்குடன் பத்திரிகை அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்ரார். மெழுகுவர்த்தியை எடுத்துச் சென்று அவர்களை வழியனுப்பிய ஸு மின், கொஞ்சம் பயத்துடனே கூடத்தை நோக்கி நடந்தார். சிறிது தயங்கிய பிறகு, கூடத்தைக் கடந்தார். உள்ளே போன போது, மேஜை மீது வைக்கப் பட்டிருந்த சிறிய, பச்சை நிற, நீள வட்ட கோப்பு பாக்கெட் மீது பார்வை விழுந்தது. அதன் பொன்னிற எழுத்துக்கள் சுற்றிலும் அழகிய வடிவத்துடன் விளக்கொளியில் மின்னின.
மேஜைக்கு அடுத்த முனையில் தரையில் அமர்ந்தபடி ஸியூவும், சாவோவும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஸுவே செங் சற்றுத்தள்ளி அமர்ந்து அகராதியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். கடைசியாக, விளக்குக்கு அப்பால் விழுந்த நிழலில் உயரமான நாற்காலியில் தனது மனைவி இருப்பதைப் பார்த்தார் ஸு மின்.
அவளுடைய ஜடம் போன்ற முகத்தில் கோபமோ, மகிழ்ச்சியோ தெரியவில்லை. அவள் எதையுமே பார்க்கவில்லை.
"நல்லாத் தேச்சுக் குளுப்பாட்டுறது. சே! எவ்வளவு அருவருப்பு."
தனக்குப் பின்னால் ஸியூவின் மெதுவான குரலைக் கேட்டார். திரும்பிப் பார்த்தார். ஆனால் அவள் அசையவில்லை. சாவோ மட்டும் யாரையோ பார்த்து வெட்கப்படுவது போல இரண்டு சிறிய கைகளாலும் தனது முகத்தை மூடிக் கொண்டிருந்தாள்.
தன்னால் இங்கு இருக்க முடியாது என்பதை உணர்ந்தவராக, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, முற்றத்திற்குப் போய் முன்னும் பின்னுமாக நடந்தார். சத்தம் எழுப்பாமல் நடக்க மறந்து விட்டார். கோழியும் குஞ்சுகளும் மீண்டும் கீச்சிட்டன. உடனே சற்று விலகி நடந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு, கூடத்தில் இருந்த விளக்கு படுக்கை அறைக்குச் சென்றது. தைக்கப்படாத வெள்ளைச் சல்லாத்துணி போல நிலவொளி பூமியின் மீது படர்ந்திருந்தது. பிரகாசமான மேகங்களுக்கு இடையில் பெரிய நிலா, வெண்பளிங்குத் தட்டாக காட்சியளித்தது. அவர் சோர்வாக உணரவில்லை. பரிவான மகளைப் போல, தாமும் தனியனாகி விட்டதாக உணர்ந்தார். அன்றிரவு மிகவும் தாமதமாகத் தூங்கினார்.
மறுநாள் காலையில், சோப்பு தனது பிறவிப் பயனை அடைந்தது. வழக்கத்தைவிட தாமதமாகக் கண் விழித்த ஸு மின் தனது மனைவி வாஷ்பேஸின் பக்கம் குனிந்தபடி கழுத்தைத் தேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். பெரிய நண்டுகள் விடும் குமிழ்களைப் போல அவளுடைய காதுப்பக்கங்கலில் நுரை நிறைந்திருந்தது. இந்த நுரைக்கும் தேன்கூட்டைத் தேய்க்கும் போது உண்டாகும் சிறுசிறு நுரைக் குமிழ்களுக்கும் இடையில் சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் போல் தெரிந்தது. அதன் பிறகு அவளுடைய மனைவியிடம் இருந்து ஆவில் போன்று இனந்தெரியாத வாசனை வீசியது. அடுத்து ஆறு மாதங்கலுக்குப் பிறகு திடீரென இந்த வாசனை மறைந்து ஒரு புதிய வாசனை வீசத் தொடங்கியது. அதை முகர்ந்தவர்கள் அனைவரும் ஏதோ சந்தன வாசனை போல் இருப்பதாகக் கூறினார்கள்.
|