ச்சு தேசத்தில் ஒரு நிலப்பிரபு இருந்தார். அவர் ஏராளமாக பணம் செலவு செய்து தம்முடைய மூதாதையர்களுக்குத் திவசம் கொடுத்து, படையலிட்டார். வந்தவர்களுக்கு பெரிய விருந்து கொடுத்தார். கடைசியில் ஒரே ஒரு மதுப்புட்டி மட்டுமே மிஞ்சியது. விசுவாசமாக வேலை செய்த ஏவலர்களிடம் அதைக் கொடுத்து, "ம, நீங்க குடிச்சி சந்தோஷமா இருங்க" என்றார்.
இருப்பதோ ஒரே மதுப்புட்டி ஏவலர்களோ நிறையப் பேர். ஒருவர்தான் குடிக்க முடியும். ஆகவே அவர்கள் தங்களுக்கிடையே ஒரு பந்தயம் போட்டனர்.
"தரையிலே பாம்புப் படம் வரைவோம். யார் முதலிலே வரைஞ்சு முடிக்கிறாங்களோ அவங்களுக்குத் தான் இந்த மது" என்று ஒருவன் சொன்னான். எல்லோரும் ஆளுக்கு ஒரு கரித்துண்டை கையில் எடுத்துக் கொண்டு பாம்புப் படம் வரைய முற்பட்டனர்.
சீக்கிரமாக படம் போட்டு முடித்த ஒருவன் மதுப்புட்டியை தன்கையில் எடுத்துக் கொண்டான். பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை மதுப்புட்டியை இடது கையில் மாற்றிப் பிடித்தபடியே, "இந்த பாம்புக்கு கால்கள் வரையறேன்" என்று திரும்பவும் வரையத் தொடங்கினான். அதற்குள் பாம்புப் படம் போட்டு முடித்த இன்னொருவன், "எனக்குத்தான் மது" என்று புட்டியைத் தட்டிப்பறித்தான். முதல் ஆள் திகைத்து நின்ற போது இவன் சாந்தமாகச் சொன்னான், "முட்டாளே, பாம்புக்கு ஏதுடா கால்?"
எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்வதுதான் வீரனுக்கு அழகு.
|