• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-17 16:00:02    
தேயிலையும் சீனாவும்

cri

வீட்டுக்கு விருந்தினர் வந்து விட்டால் குடும்பத் தலைவரின் அதிகாரம் தூள் பறக்கும். சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்து, "இந்தோ! உன் அண்ணாச்சி வந்திருக்காக பாரு டீ போட்டுக் கொண்டுவா!" என்று உரத்த குரலில் கட்டளையிடுவார். சற்று நேரத்தில் சமையலறையில் இருந்து கொதிக்கக் கொதிக்க ஆவி பறக்கும் தேனீரை ஆற்றியபடியே குடும்பத்தலைவி வந்து உபசரிப்பாள். 'டீ குடிங்க அண்ணே! வீட்டுல மதினி சுகமா இருக்காங்களா?' என்று பரிவோடு விசாரிப்பாள். ஆக, தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் விருந்தோம்பலின் சின்னமாக தேனீர் ஆகிவிட்டது.
ஜப்பானிலோ, தேனீர் தயாரித்து அருந்துவதையே ஒரு சடங்காகச் செய்கிறார்கள். அவசர அவசரமான புற உலகின் பதற்றங்களில் இருந்து ஒதுங்கி, அக அமைதியை நாட, ஒரு குழுவாகச் சுற்றி அமர்கிறார்கள். பெண்கள் மிகவும் நளினமான அசைவுகளுடன், மிக மிக மெதுவாக இயங்கியபடியே தேனீர் தயாரித்துப் பரிமாறுகிறார்கள். விருந்தினரும் சுடச்சுட வாயில் ஊற்றிக் கொள்ளாமல், ஆற அமர ரசித்து ரசித்து தேனீர் குடிக்கின்றனர்; கவலைகளை மறக்கின்றனர். இதை tea ceremony என்பார்கள்.


இன்றைக்கு உலகின் பெரும்பாலான பகுதிகளில் தேனீர் பிரபலமாகி விட்டது. 51 நாடுகளில் தேயிலை பயிரிடப்படுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தேயிலை தோன்றியது எங்கே தெரியுமா? சீனாவில். அதிலும் குறிப்பாக, சீனாவின் யுன்னான் மாநிலத்தில் உள்ள ச்சிஷுவாங்பன்னா (Xi Shuang Ban Na) என்ற ஊரில், அந்த ஊரில் இன்றைக்கும் ஒரு பெரிய தேயிலை மரம் உள்ளது. அதன் உயரம் 14.7 மீட்டர். சுற்றளவு 2.9 மீட்டர். சீனர்கள் தேனீரை 'ச்சா' என்கிறார்கள். நம் ஊர் 'சாயா' அல்லது 'சாய்' இந்தச் சொல்லில் இருந்து தோன்றியது தான். ஆங்கிலத்தில் 'டீ' என்கிறார்கள். இந்த'டீ' என்ற சொல்லும் சீனாவில் தான் தோன்றியது. தாங் வம்சத்திற்கு முன்பு தேயிலை என்பதற்கு சீனச் சொல் எதுவும் இல்லை. தாங் வம்ச காலத்தில் தான் யாரோ ஒருவர் இந்த இலைக்கு ஒரு பெயர் வைத்தார். சீனாவில் பேசப்படும், சியாமன் பகுதியின் அமோய் கிளை மொழியில் 'டீ' என்பது போன்ற ஒரு சொல் உச்சரிப்பு இருக்கிறது. அதே வேளையில் 'ச்சா' என்ற சொல் மாண்டரின் சீனத்தில் உருவெடுத்தது. இன்றைக்கு ரஷ்யாவிலும், அரபு நாடுகளிலும் 'ச்சா' என்றே தேயிலையை அழைக்கின்றனர்.

 
கி. பி. 804ஆம் ஆண்டில் Zui Chang என்ற ஒரு ஜப்பானியத் துறவி புத்தமதம் பற்றி கற்பதற்காக சீனாவுக்கு வந்தாராம். அவர் தாயகம் திரும்பிய போது தம்மோடு சில தேயிலை விதைகளையும் எடுத்துச் சென்று ஜப்பானில் நட்டார். இவ்வாறாக ஜப்பானில் தேயிலை ஆழ வேரூன்றியது. இன்றைக்கு சீனாவுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் இடையே நட்புறவின் சின்னமாக தேயிலை ஆகிவிட்டது.

 
ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு தேனீர் தயாரிக்கும் முறை மாறுபடுகிறது. தமிழ் நாட்டில் பெரும்பாலும் டஸ்ட்டீ எனப்படும் பதப்படுத்தப்பட்ட தேயிலைத் தூளைத் தான் பயன்படுத்துகிறோம். 'லீஃப் டீ' என்னும் இலைத் தேனீரைப் பயன்படுத்துவது இல்லை. கொதிக்கிற நீரில் தேயிலைத்தூளைப் போட்டு, இறுத்து வடிகட்டி, பாலும் சர்க்கரையும் கலந்து குடிக்கிறோம். இதுவே சேட்டன் கடைக்குப் போனால், டீத்தூளை வடிப்பானில் போட்டு, கொதி நீரை பாய்லரில் இருந்து பிடித்து, காய்ச்சிய பாலும், சர்க்கரையும் கலந்து, குவளையில் இருந்து கண்ணாடித் தம்ளருக்கு இழுத்து இழுத்து ஆற்றி, நுரைக்க நுரைக்க தேனீர் தருவார். இதை 'ஒரு மீட்டர் சாய்' என்பார்கள். மலேசியாவிலும் இதே போல்தான் தேனீர் தயாரிப்பதாகவும், இதை 'தேத்தாரை' என்று அழைப்பதாகவும் மலேசிய நண்பர் கூறினார். 'தாரை' என்றால் ஊற்றுதல் என்று பொருள். வட இந்தியாவிலோ, முதலில் தண்ணீர், கொதிக்கவைத்து, அதில் இஞ்சியோ, ஏலக்காயோ தட்டிப் போட்டு, நன்கு கொதித்து மணம் பரவும் போது ஸ்டைலாக சிறிது தேயிலையை அள்ளிப் போட்டு, அது ஒரு கொதி கொதித்தும், சர்க்கரை அளவாகப் போட்டு. பிறகு பால்விட்டு, எல்லாம் சேர்ந்து நன்றாகப் பல தடவை கொதித்த பிறகு, வடிகட்டி, கோப்பையில் ஊற்றி தருவார்கள். ஊதிஊதித்தான் குடிக்கணும். அவ்வளவு சூடு.