கலை: வணக்கம் நேயர்களே. நிகழ்ச்சிகளை பற்றிய உங்கள் கருத்துக்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக. க்ளீட்டஸ்: முதல் கடிதமாக இலங்கை கினிகத்தேனை நேயர் வி. துரைராஜா எழுதிய கடிதம் இடம்பெறுகிறது. இலங்கை சீன நாடுகளுக்கிடையிலான ஐம்பதாண்டு காலதூதாண்மை உறவைக் கொண்டாடும் வகையில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசத்தலைவர் ராஜபக்ஷே அவர்களுடன் பிரதிநிதிக்குழு கடந்த பிப்ரவரி திங்களில் சீனாவில் பயணம் மேற்கொண்டது இலங்கை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும். இப்பயணத்தின் மூலம் இலங்கை சீன நாட்டு மக்களுக்கிடை நட்புறவு மேலும் சிறந்து வளர நல்லதொரு வாய்ப்பு அமையும் என்று நம்பலாம். இருதரப்புகளுக்கிடை அரசியல் மற்றும் வர்த்தக உறவும் வலுப்பெறும் என்பதில் ஐயமில்லை. இரு தரப்பு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பொன்விழாவை முன்னிட்டு குட்டி யானையொன்றை லின்குவான் விகாரைக்கு இலங்கை அரசுத் தலைவர் வழங்கியது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். சீன இலங்கை நட்புறவு மேலும் வலுப்பெற வாழ்த்துக்கள் என்று எழுதியுள்ளார்.
கலை: அடுத்து விழுப்புரம் எஸ். சேகர் சீனாவின் வளர்ச்சி பற்றிய செய்தித்தொகுப்பை கேட்ட பின் எழுதிய கடிதம். சீனாவின் வளர்ச்சி பல நாடுகளின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. சீனாவின் வர்த்தக பரிவர்த்தனை 110 நாடுகளுக்கு பெரும் முன்னேற்றத்தை தருவதாக அறிந்தேன். மேலும் வளர்ச்சியடையாத 44 நாடுகளுக்கு கடன் நிலுவையை தள்ளுபடி செய்வதாக அறிவித்தமை பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். க்ளீட்டஸ்: தொடர்ந்து, சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சி குறித்து பாத்திக்காரன்பட்டி மீனாட்சி பாலன் எழுதிய கடிதம். சீனாவின் வரலாற்றை பற்றி விளக்கமாக கேட்டு வருகிறோம். போற்றி பாதுகாக்க வசதியாய் சீனத் தமிழ் ஏட்டினில் இதை தொகுத்து வழங்கினால் பாதுகாப்பது நேயர்களுக்கு எளிதாக அமையும். காலத்தின் அடிச்சுவடுகள் கி. மு முன்னதான காலத்திலிருந்து வழங்கி பெருமைபடுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார். கலை: நல்ல ஆலோசனை, நிச்சயம் இதை குறித்து வைத்துக்கொள்வோம். அடுத்து காத்தான்குடி எச். எம். முகமது ஹாரிஸ் எழுதிய கடிதம். கடலில் அரிதாகக் கிடைக்கும் முத்துக்கள் போன்று அரிதான விடயங்களை அள்ளி வழங்குகிறீர்கள். மேலும் சீனாவின் மலைகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள் எல்லாம் கம்பீரமாக தோற்றமளிக்கின்றன. மட்டுமல்லாது மிகச் சிறப்புமிக்க சீனப் பெருஞ்சுவரும் பார்ப்பதற்கு அழகானது என்று குறிப்பிட்டுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடர் பற்றி மீனாட்சிப்பாளையம் கா. அருண் எழுதிய கடிதம். சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட சீன அரசாங்க பணியறிக்கையில் நான் முக்கியத்துவம் கொடுத்து கவனித்தது, சீனாவில் கடந்த ஓராண்டில் விவசாயிகளின் நலன்கள் பேணிக்காக்கப்பட்டுள்ளன, வரும் ஆண்டிலும் விவசாயிகளின் ஆண்டு வருமானம் அதிகரிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன என்பதைத்தான். இதை முக்கியமாக கவனிக்க காரணம், நானும் ஒரு விவசாயி என்பதாலேயே. விவசாயம்தாம் ஒரு நாட்டின் முதுகெலும்பு. சீன அரசு முழுமையாக உணர்ந்து விவசாயிகளின் நலன்கள் பேணிக்காக்கப்பட பணியறிக்கையில் வழி வகை செய்திருப்பது பாராட்டுக்குரியது. விவசாயி என்ற முறையில் நானும் இதற்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று எழுதியுள்ளார். கலை: அடுத்து சின்ன தாராபுரம் இரா. செல்லமுத்து எழுதிய கடிதம். சீன இசை நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது. நாள்தோறும் ஒலிபரப்பாகும் செய்தித்தொகுப்புகள் பல செய்திகளை அறியத்தருகின்றன. தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் கற்பிக்கும் முறையை முன்பு போலவே சிறப்பாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். க்ளீட்டஸ்: வசந்தவிழாக் கொண்டாட்டம் தொடர்பான செய்தி குறித்து விழுப்புரம் எஸ். பாண்டியராஜன் எழுதிய கடிதம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 12 லட்சத்து 70 ஆயிரம் பேர் வசந்த விழா சுற்றுலா காலத்தில் பெய்சிங் நகர பூங்காவுக்கு வந்து சென்றனர் என்ற செய்தி கேட்டேன். இது பெய்சிங் நகரச் சுற்றுலா வளர்ச்சியையும், சீன மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதையும் காட்டுகிறது. இங்கிருந்தபடியே பெய்சிங் நகர பூங்காக்களையும், பெருஞ்சுவரையும் வசந்த விழாக் காலத்தில் கண்டு களித்தேன் என்று எழுதியுள்ளார்.
கலை: அடுத்து இலங்கை காத்தான்குடி ஏ. எம். எஃப். சியாமா எழுதிய கடிதம். சீன வான்லியின் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு வருகிறேன். அதில் எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளாக சீனச் செய்திகள், நட்புப்பாலம், மலர்ச்சோலை, நேயர்கடிதம் போன்றவை சிறப்பாக உள்ளன. எனக்கு சீனாவின் இயற்கைக்காட்சிகள், செய்தித்தாள் ஆகியவற்றிலும் ஆர்வமுண்டு என்று எழுதியுள்ளார். அன்பு சியாமா, உங்கள் கடிதத்தில் நீங்கள் கேட்டபடி உங்கள் தோழிக்கும் எமது நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளை அனுப்பியுள்ளோம்.
|