• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Saturday    Apr 5th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-22 17:32:43    
சிறப்புப் பரிசு பெற்ற நேயர்களின் சி ச்சுவான் பயணம்

cri

அண்மையில் சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள சி ச்சுவான் மாநிலம், சில வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்றது. அவர்கள், எமது வானொலி நிலையம், சி ச்சுவான் மாநிலத்தின் சுற்றுலா பணியகத்துடன் ஒத்துழைத்து நடத்திய ராட்சத பாண்டாவின் ஊரான சி ச்சுவான் மாநிலம் என்ற பொது அறிவு போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற 10 நேயர்களாவர். சில திங்களுக்கு முன், தத்தமது நாடுகளில் எமது வானொலி நிலையம் மூலம் சி ச்சுவான் மாநிலம் பற்றிய நிகழ்ச்சிகளை அவர்கள் கேட்டனர். இப்போது, சி ச்சுவான் மாநிலத்தின் அழகான காட்சிகளைக் கண்டு களித்து, இம்மாநிலத்தின் ஆழமான பண்பாட்டு அம்சங்களை அவர்கள் உணர்ந்துள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில், இந்த 10 நேயர்களின் சி ச்சுவான் சுற்றுப் பயணத்தை மீளாய்வு செய்வோம்.

இந்த 10 நேயர்கள், அமெரிக்கா, இந்தியா, மங்கோலியா, வியட்நாம், ஜெர்மனி, இத்தாலி, மொராக்கோ, ஈரான், ரஷியா, ருமேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். எமது தமிழ் நேயர் என்.பாலகுமாரை பொறுத்த வரை, இந்தப் பயணம் துவங்கியது முதல் அனைத்து நிகழ்வுகளும் அவரது மனதில் ஆழப்பதிந்துள்ளன. ஏனென்றால், சென் து நகர் சென்றடைந்த முதல் நாள் அவருடைய பிறந்த நாளாகும்.

சென் து சுற்றுலாத் துறையின் துணைத் தலைவர் பாலகுமாருக்கு சிறப்பாக பிறந்த நாள் விருந்து அளித்தார். 11 நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடியதை தான் என்றுமே மறக்க முடியாது என்று பாலகுமார் கூறினார்.
சி ச்சுவான் மாநிலம் சென்றடைந்ததும், இந்த நேயர்கள் இடைவிடாமல் படம் பிடிக்கத் துவங்கினர். அவர்களுடன் சேர்ந்து சென்ற எமது செய்தியாளர்கள் கேட்டதெல்லாம், சி ச்சுவான் மாநிலம் பற்றிய அவர்களின் பாராட்டுகளே. மொராக்கோ நேயர் Idriss Bououdina அழகான, உற்சாகத்துடன் கூடிய இளைஞர் ஆவார். அவர் கூறியதாவது—

"சி ச்சுவான் வந்ததும், வேறு ஏந்த இடத்திலும் உணர முடியாத ஈர்ப்பு ஆற்றலை உணரலாம். இயற்கை அற்புதங்கள் என்றாலும் சரி, சுற்றுலா தலங்களின் அழகு என்றாலும் சரி, அவை எனக்கு வியப்பு தருகின்றன. இந்த உணர்வு, கனவில் கண்ட இடங்கள் கண்களுக்கு முன் நிழலாடுவதைப் போன்று, மிகவும் அற்புதமானது" என்றார் அவர்.

ஏ மேய் மலைக்குச் சென்ற வழியில், பல்வேறு நாட்டு நேயர்கள் மகிழ்ந்து, தத்தமது நாட்டு பாடல்களை பாடினர். பாலகுமாரும் பாரதியர் கவிதையைப் பாடினார்.

சீனாவின் முதலாவது மலை என்ற புகழைப் பெற்ற ஏ மேய் மலையில், பரிசு பெற்ற இந்த நேயர்கள், கண்களில் நிறைந்த பச்சைப் பசேல் என நிறத்தால் கவரப்பட்டனர். ஏ மேய் மலையில், 5000க்கு அதிகமான தாவர வகைகள் உள்ளன. ஐரோப்பா முழுவதிலும் உள்ள தாவர வகைகளின் மொத்த எண்ணிக்கைக்கு இது சமம். இங்குள்ள தாவரங்கள் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. மலைப் பாதையில், நேயர்கள் மென்மேலும் உயரமாக ஏறி, மிகவும் உயரமான இடத்தைச் சென்றடைந்தனர். ஏ மேய் மலையில் கோயில்கள் அதிகம். 48 மீட்டர் உயரமுடைய பொன் நிற புத்தர் சிலை, இவற்றில் முக்கியமாகும்.

அமைதியான தோற்றமுடைய இந்தப் பொன் நிற புத்தர் சிலையின் கீழ் நின்றால், அனைவரின் மனதிலும் பக்தி உணர்வு ஏற்படுகிறது.

நேயர்களின் பாராட்டும் வியப்பும் இதனுடன் நின்றுவிடவில்லை. ஏ மேய் மலையிலிருந்து இறங்கி, மேற்கு நோக்கி 30 கிலோமீட்டர் தொலைவில் சென்றால், உலகில் மிகப் பெரிய புத்தர் சிலையான லே சான் புத்தர் சிலை காணப்படலாம். அங்கே, நேயர்கள் மேலும் பெரும் வியப்புக்குள்ளாகினர்.

லே சான் புத்தர் சிலை, கி.பி. 700வது ஆண்டுகளில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக நிறுவப்பட்டது. 70 மீட்டருக்கு மேற்பட்ட இந்தச் சிலை, மலைகளை குடைந்து செதுக்கப்பட்டது. அதன் தலை மலை சிகரத்தின் உயரத்தில் உள்ளது. கால்கள் ஆற்றில் உள்ளன. கைகள் முழங்கால்களின் மேல் இருக்க, கண்கள் ஆற்று நீரை பார்க்கின்றன. ஆற்று வெள்ளம் கரை புரண்டோடக் கூடாது என்று எச்சரிப்பது போல் தோன்றுகிறது.

ஏ மேய் மலையின் காட்சிகள் இந்த நேயர்களை மயங்கச் செய்து, புத்தர் சிலை உள்ளடக்கிய மத நம்பிக்கையாளரின் பயபக்தி அவர்களை மனம் உருகச் செய்தது என்றால், சான் சிங் துய் இடம், ஜின் சா அருங்காட்சியகம் உள்ளிட்ட, சீன நாட்டின் பண்டைக்காலப் பண்பாட்டு சிதிலங்கள், அவர்களுக்கு வியப்பையும் ஏற்படுத்துகின்றன.

சான் சிங் துய் இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 6000க்கும் அதிகமான தொல் பொருட்களில் பெரும்பாலானவை தேசிய கருவூலங்களாகும். அவை கீழை நாடு மற்றும் சி ச்சுவான் மாநிலத்தின் பண்டைக்காலப் பண்பாட்டுத் தனிச்சிறப்பு உடையவை. இத்தாலிய நேயர் Luca Bresciani கூறியதாவது—

"இந்த அருங்காட்சியகத்திலுள்ள அனைத்து தொல் பொருட்களும் மிகவும் அழகானவை. மதிப்பு மிக்கவை. 3000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த சீன மக்கள் புத்திக்கூர்மை மிக்கவர்கள். அவர்கள் இவ்வளவு நேர்த்தியான வேலைப்பாடுடைய பொருட்களைத் தயாரிக்கலாம். இந்தத் தொல் பொருட்கள் உலகளவில் காண்பதற்கு அரியவை" என்றார் அவர்.

சி ச்சுவான் மாநில சுற்றுலா பணியகம் நேயர்களுக்கு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் அதிகமாகவும் நெருக்கமாகவும் இருந்தன. இயற்கை காட்சிகள் மற்றும் சிதிலங்களைப் பார்வையிட்ட பின், நேயர்களின் மனம் அழகான ராட்சத பண்டாவினால் கவர்ந்திழுக்கப்பட்டது.

செங் து ராட்சத பண்டா இனப் பெருக்கத் தளத்துக்குள் நுழைந்ததும், ராட்சத பண்டா பற்றிய நேயர்களின் விவாதமும், விளக்கம் தருபவரிடத்திலான கேள்விகளும் எழுந்தன. பாதுகாப்பு வேலிக்கு வெளியே ராட்சத பண்டாவுடன் படம் பிடிப்பது தவிர, இந்த அழகான விலங்கை நேரில் கையால் தொட அவர்கள் அனைவரும் விரும்பினர். ராட்சத பண்டாவின் அருகில் உட்கார்ந்து படம் பிடிக்க இத்தளத்துக்கான பொறுப்பாளர் நேயர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கினார். ருமேனிய நேயர் கூறியதாவது—

"தொலைவிலிருந்து பார்த்தால், ராட்சத பண்டா அழகான, வேடிக்கையான ஒரு வகை காட்டு விலங்கு ஆகும். அதற்கு அருகில் வந்து நின்றால், அதன் நாடித் துடிப்பை உணர்ந்து, அதன் மிதமான, ஈரம் படர்ந்த கண்களை தெளிவாகப் பார்க்கலாம்" என்றார் அவர்.

சில நாட்கள் மட்டுமே நீடித்த சி ச்சுவான் பயணத்தில், நேயர்கள் அனைவரும் பல பயன்களைப் பெற்றுள்ளனர். ஈரான் நேயர் Mohammad கூறியதாவது—

"ஈரானுக்குத் திரும்பிய பின், சீன வானொலி ஈரான் நேயர் மன்றத்தின் தலைவரான நான் எடுத்த படங்கள் மற்றும் பதிவு செய்த எழுத்துக்கள் மூலம் எமது நேயர்களுக்கு இந்த அருமையான சி ச்சுவான் பயணத்தை அறிமுகப்படுத்துவேன். அவர்களும் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்வேன்" என்றார் அவர்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040