தியன் தான் பூங்கா மன்னர்கள் செர்க்கத்தை வணங்கும் ஓர் ஆலயமாகும். வடக்கேயுள்ள அமைப்பு, "நல்ல அறுவடைக்கான பிரார்த்தனை மண்டபம்" ஆகும். அதற்குத் தெற்கே, பேரரச சுவர்க்கக் கவிதை மாடமும் வட்ட முடிப் பலிபீடமும் இருக்கின்றன. மேலிருந்து பார்த்தால் பூங்காச் சுவரின் தெற்குப் பகுதி சதுரமாகவும், வடக்குப் பகுதி அரை வட்டமாகவும் தோன்றுகின்றன. செர்க்கம் வட்டமானது, பூமி சதுரமானது என்ற பழங்கால நம்பிக்கை, இதில் பிரதிபலிப்பதைக் காணலாம். பிரதான வாயிலில் நுழைந்ததும் பிரார்த்தனை மண்டபத்தின் காம்பீரியம், வருவோர் அனைவரையும் வசீகரிக்கிறது. மூன்று தட்டுத் தாழ்வாரம் கூம்பு வடிவான கூரை, உச்சியில் ஒரு தங்க முடி ஆகியவற்றை உடைய அது, ஒரு உன்னதமான, வட்ட வடிவான அமைப்பு ஆகும். அதன் மண்டப அமைப்பு மிகவும் நுட்பமானது. உயரமாக அமைந்துள்ள நடைபாதை, நம்மை தெற்கிலுள்ள பேரரச செர்க்கக் கவிதை மாடத்துக்கு இட்டுச் செல்கிறது. மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட இச்சிறிய அமைப்பானது, பிரார்த்தனை மண்டபத்துக்கு மிக இணையாக அமைந்துள்ளது. பிரார்த்தனை மண்டபத்தைப் போலவே, இதுவும் கூம்பு வடிவமான கூரையையும் உச்சியிலே தங்க முடியையும் உடையது. அதன் அலங்கார பூச்சு வேலைகள் இன்றும் புத்தம் புதியவை போலக் காட்சியளிக்கின்றன. இந்தச் செர்க்கக் கவிதை மாடத்தைச் சுற்றி பெரிதான செங்கல் சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இச்சுவர், "எதிரொலிச் சுவர்" எனப்படுகின்றது. ஏனென்றால் சுவர் அருகே எந்த இடத்தில் நின்று ஒருவர் பேசினாலும் அவ்வோசை, சுவர் நீளத்துக்குத் தெளிவாகக் கேட்கக் கூடியதாய் ஒலிக்கிறது. இந்த எதிரொலிச் சுவருக்குத் தெற்கில், ஒரு வாசலும் மூன்று தட்டு வெண் கல் படித்தலங்களையுடைய வட்ட முடிப் பலிபீடமும் உள்ளது. அதைச் சுற்றியுள்ள இரண்டு சுவர்களில் உள் சுவர் வட்டமாகவும் புறச்சுவர் சதுரமாகவும் உள்ளன. செர்க்க ஆலயப் பூங்காவுக்குள் பேரரச செர்க்க மண்டபம், தெய்வீக சமையலறை, கசாப்பு மணிமண்டபம் விதானம், 72 பிரிவு நீண்ட நடைபாதை போன்ற பண்டைய கட்டிடக் கலை அமைப்புகளும் இருக்கின்றன. விசாலமான இட வசதியுள்ள இப்பூங்காவில், நூற்றுக்கணக்கான பழைய பைன், சைப்பிறஸ் மரங்கள் இன்றும் காணப்படுகின்றன. பேரரசர்கள் அங்கு வழிபாட்டுக்கு வரும் போது அவர்களின் ஆயிரக்கணக்கான பரிவாரங்களும் கூட வருவது வழக்கம் என்றும், அவர்கள் வருகை, ஒரு கண்கொள்ளாக் காட்சி என்றும் கூறப்படுகிறது. இத்தகைய அழகு மீகு, கலைநயம் மீகு நீங்கள் தற்போது சுற்றுலாப் பயணமாகத் தியன் தான் பூங்காவைப் பார்க்கச் சென்றால் அதனைப் பார்வையிட கீழ்காணும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நுழைவுச் சீட்டு விலை: அதிக பயணிகள் உள்ள சுற்றுலாக் காலம் : 35 யுவான், பயணிகள் குறைவான காலம் : 30 யுவான் (மாணவர்களின் நுழைவுச் சீட்டு விலை:அரை விலை) பூங்கா திறக்கப்படும் நேரம் : காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை
|