வட சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் Erdos நகரில் Yijinhuoluo மாவட்டம் அமைந்துள்ளது. புகழ் பெற்ற Chinggis Khaanவின் கல்லறை அங்கு கட்டியமைக்கப்பட்டதால், Yijinhuoluo மாவட்டம் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரபலமாகியுள்ளது. உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டங்கள் நடைபெற்ற வேளையில், எமது செய்தியாளர்கள் Yijinhuoluo மாவட்டத்தில் பயணம் மேற்கொண்ட போது, அங்கு மங்கோலிய இன துவக்கப் பள்ளியை எதேச்சையாக கண்டுபிடித்தனர்.
 அன்று, பரந்த Erdos புள்வெளியில் அங்குமிங்குமாக ஆடுமாடுகள் மேய்ந்தன. அங்கு பச்சைப் பசேல் என்ற புல்வெளி, நீல வானம், வெள்ளை மேகக் கூட்டங்கள் ஆகிய இயற்கை காட்சிகளால் ஈர்க்கப்பட்ட செய்தியாளர்கள் மங்கோலிய இனத் தனித்தன்மை வாய்ந்த வெள்ளை கட்டிடத்தைத் திடீரென கண்டனர். Yijinhuoluo மாவட்டத்தின் மங்கோலிய இன துவக்கப் பள்ளி இதுவாகும். இப்பள்ளியின் விசாலமான, ஒளி நிறைந்த, தூய்மையும் நேர்த்தியுமான தோற்றத்தை செய்தியாளர்கள் கற்பனை செய்திருக்கவில்லை. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, இப்பள்ளி மாணவர்கள் பாடிய பாடலாகும். இரண்டு மங்கோலிய கூடாரங்களுக்குள் மாணவர்கள் எங்களை வழி நடத்தினர். இந்த மாணவர்கள், உள்ளூர் ஆயர்களின் குழந்தைகள் ஆவர். அவர்களில், பெரும்பாலானோர் பள்ளியில் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, Yijinhuoluo மாவட்ட அரசு, கட்டாயக் கல்வியின் அடிப்படையில், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. பள்ளியில் தங்களது இன்பமான வாழ்க்கை பற்றி குறிப்பிடுகையில், தாம் மிகவும் விரும்பும் இடம் பள்ளி என்று மாணவர்கள் கூறினர். அவர்களில் ஒருவர் சீன மொழியில் அவர்களின் பள்ளி வாழ்க்கை பற்றி விவரித்தார்.

"எங்கள் வகுப்பில் 15 மாணவர்கள் உள்ளனர். சில சமயங்களில், சீன மொழியில் கற்றுக்கொள்கின்றோம். சில சமயங்களில், மங்கோலிய மொழியில் கற்றுக்கொள்கின்றோம். அறிவியல், ஓவியம், இசை, மங்கோலிய மொழி, சீன மொழி, விளையாட்டு ஆகிய பாடங்களைக் கற்றுக்கொள்கின்றோம். இங்கு உணவு மற்றும் உறைவிட வசதிகள் நன்றாகவுள்ளன" என்றனர். Asima எனும் மாணவி, சீன மொழியிலும், மங்கோலிய மொழியிலும், சீனக் கவிதைகளை தனித்தனியாக பாடினார். ஆசிரியர்கள் செவ்வனே சொல்லிக்கொடுப்பதால், தாம் கற்றுக்கொள்ளப் பாடுபடுவதாக அவர் கூறினார். தாய் மொழியான மங்கோலிய இன மொழியைப் பேசுவது போல், அவர் சீன மொழியை நன்றாக பேசுகின்றார். மாணவர்களின் கல்வி பற்றி இப்பள்ளியின் ஆசிரியர் Gaowa செய்தியாளரிடம் கூறியதாவது: "விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குழந்தைகளைப் பொறுத்த வரை, இத்தகைய நல்ல நிலையில் கற்றுக்கொண்டு, வாழ்வது என்பது, ஓர் அரிய வாய்ப்பு. தற்போது, மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு நீக்கியுள்ளது. இதனால், பல வறிய மாணவர்கள், பள்ளியில் கல்வி பயிலும் கனவு நனவாகியுள்ளது. தற்போது, இப்பள்ளியில் சிறந்த படிப்புச் சூழ்நிலை உருவாகியுள்ளது" என்றார், அவர்.

இத்துவக்கப் பள்ளியிலிருந்து புறப்பட்ட பின், எமது செய்தியாளர்கள், இம்மாவட்டத்தின் இடைநிலைப்பள்ளி ஒன்றுக்குச் சென்றனர். இப்பள்ளியில் கல்வி பயிலும் மங்கோலிய இன மாணவிகள் இருவர் செய்தியாளருக்குப் பேட்டியளித்தனர். கடந்த சில ஆண்டுகளாக, உள் மங்கோலியா வேகமாக வளர்ந்து வருகின்றது என்றும், தங்களது குடும்பங்கள் மேலும் செல்வமடைந்துள்ளன என்றும் அவர்கள் கூறினர். மாணவர்களின் கல்விக் கட்டணம் விலக்கப்பட்டுள்ளது என்றும், தவிர, உள்ளூர் அரசு, மாணவர்களுக்கு உதவிக் தொகையை வழங்கியுள்ளது என்றும் அவர்கள் கூறினர். தற்போது, பல மாணவர்கள், செல்லிடபேசியையும் மின்னாற்றல் மிதி வண்டியையும் வைத்துள்ளனர். தவிர, இப்பள்ளியில் மாணவர் அனைவரும் கற்றுக்கொள்வதில் கணிணியைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார். Yijinhuoluo மாவட்டத் தலைவர் Hao Yong Yao செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் பொருளாதாரம் வேகமாக வளர்வதுடன், கல்வி ரீதியில், Yijinhuoluo மாவட்ட அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியுதவி மென்மேலும் அதிகரித்துள்ளது என்றார். "தேசிய இனக் கல்விக்கு நிதியுதவி வழங்குவதில் மாவட்ட அரசு மிகவும் கவனம் செலுத்துகின்றது. 2004ஆம் ஆண்டு முதல் இது வரை, கல்வித் துறையில், சுமார் 12 கோடி யுவானை மாவட்ட அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. குறிப்பாக, சிறுபான்மைத் தேசிய கல்விக்கு, பெரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மைத் தேசிய இனத் தன்னாட்சி மாவட்டமாக, Yijinhuoluo மாவட்டம், தேசிய இனப் பண்பாட்டைப் பரவல் செய்து, தேசிய இனக் கல்வியை வளர்ப்பதில் மிகவும் கவனம் செலுத்துகின்றது.

எங்கள் வரையறைக்கிணங்க, குழந்தை காப்பகம் முதல், இடைநிலைப்பள்ளி கூடம் வரை, சிறுபான்மைத் தேசிய இன மாணவர்கள், இலவசமாக கல்வி பயிலலாம். சிறுபான்மைத் தேசிய இன ஆசிரியர்கள் அரசு உதவித்தொகையை பெறலாம். தவிர, திங்கள்தோறும், ஒரு பகுதி உதவித்தொகையை அவர்களுக்கு வழங்குகின்றோம். உயர் கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் சிறுபான்மைத் தேசிய இன மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்குகின்றோம்" என்றார், அவர். நேயர்களே, உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மாவட்டங்களில் Yijinhuoluo மாவட்டம் ஒன்றாகும். இருந்த போதிலும், மங்கோலிய இன இளைஞர்களின் ஊடாக, உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஒளிவீசும் எதிர்காலத்தை செய்தியாளர்கள் கண்டறிந்தனர். இம்மாவட்டத்தை விட்டு புறப்பட்ட போது, இனிமையான பாடல்களை மாணவர்களுடன் கூட்டாகப் பாடி, அவர்களின் இன்பமான வாழ்க்கையை செய்தியாளர்கள் பகிர்த்து கொண்டனர்.
|