• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-26 09:16:40    
ஒரு ரஷிய இனக் குடும்பம் பற்றி

cri

வட மேற்கு சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் Yi Ning நகரில், ஒரு பெரிய வீடு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப் பெரிய வீட்டில், 6 ரஷிய குடும்பங்கள் வாழ்கின்றன. இன்றைய நிகழ்ச்சியில், இத்தோட்டத்தில் வாழும் மக்கள் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

76 வயதான Nina அம்மையார், இத்தோட்டத்தின் உரிமையாளர். கடந்த 40 ஆண்டுகளாக, அவர் இங்கு வாழ்ந்து வருகின்றார். சுமார் 30 பேர் இடம்பெறும் 6 குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. Nina அம்மையாரின் குடும்பத்தைத் தவிர, அவரது 5 குழந்தைகளின் குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன.

Nina அம்மையார், ரஷிய இனத்தைச் சேர்ந்தவர். ரஷிய இன மக்கள், 18வது நூற்றாண்டின் இறுதியில், சார் ரஷியாவிலிருந்து சீனாவின் சிங்கியாங் பிரதேசத்துக்குள் குடிபுகுந்த ரஷிய நாட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். காலப்போக்கில், ரஷிய இனம், சீனாவில் சிறுபான்மைத் தேசிய இனமாக மாறியுள்ளது. Nina அம்மையாரின் பெற்றோர் 70 ஆண்டுகளுக்கு முன் சிங்கியாங்கில் குடிபுகுந்தனர். Nina அம்மையார் திருமணம் செய்த பின், 16 குழந்தைகளை பெற்றார்.

"தற்போது, எனக்கு 8 மகன்களும், 4 மகள்களும் உயிருடன் இருக்கின்றனர். மருமகள்கள் இருக்கின்றனர். தற்போது, நாங்கள் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றோம். குழந்தைகள் வளர்ந்து விட்டனர்" என்றார், அவர்.
அவரது குழந்தைகளில், சிலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். சிலர், சீனாவின் இதர நகரங்களில், ரஷிய மொழி பெயர்ப்பாளராக பணி புரிகின்றனர்.

Nina அம்மையாருடைய இளைய மாப்பிள்ளை Nicola, Yi Ning நகரில் உள்ள ரஷிய இன பள்ளியின் வேந்தர் ஆவார். இப்பள்ளி, இந்நகரில் உள்ள ஒரே ஒரு ரஷிய இனப் பள்ளியாகும். சிங்கியாங்கில் சீன மொழி, ரஷிய மொழி ஆகிய இரு மொழிகளில் பாடம் கற்றுத் தரும் ஒரே பள்ளி இதுவாகும். 1985ம் ஆண்டு இப்பள்ளி நிறுவப்பட்டது. தற்போது, சுமார் 130 மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். தேசிய கல்வி திட்டப்பணியின் படி, சீன மொழி, கணிதம், நுண்கலை, விளையாட்டு உள்ளிட்ட பாடங்களை இப்பள்ளி ஏற்பாடு செய்து, குழந்தைகளுக்கு சிறந்த இரட்டை மொழிச் சூழலை வழங்கியுள்ளது.

"1997ஆம் ஆண்டு கல்வி வாரியத் தலைவர்கள் இப்பள்ளியில் சோதனை பயணம் மேற்கொண்டனர். அவர்களது கருத்துக்கள், ரஷிய இன பொது மக்களின் கருத்துக்கள் ஆகியவற்றுக்கிணங்க, இப்பள்ளியில் இரண்டு மொழிகளில் பாடம் சொல்லிக்கொடுப்பதென தீர்மானித்தோம். இப்போது, ரஷிய மொழிப் பாடம், முக்கிய பாடமாகும். வாரந்தோறும், 5-7 வகுப்புகள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன" என்றார் அவர்.
Alexander, Nina அம்மையாரின் 4வது மகன் ஆவார். அவருடைய மூன்று குழந்தைகள், ரஷிய இனப் பள்ளியில் கல்வி பயில்கின்றனர். 48 வயதான Alexander, Yi Ning நகரில் முதற்தர accordion இசைக் கருவி பழுதுபார்ப்பாளராவார். தவிர, அவர் இந்நகரில் மிக தலைச்சிறந்த accordion கலைஞராவார். நாள்தோறும் அவர் பணியில் ஈடுபடுவதற்கு முன், accordionஐ இசைக்கின்றார்.

"என் பெற்றோரிடமிருந்து, இசையைக் கற்றுக்கொண்டேன். தாயாருக்கு, trigon வாசிக்கத்தெரியும். தந்தையாருக்கு, guitar மற்றும் accordion வாசிக்கத் தெரியும். சிறு வயதிலிருந்தே நான் accordionஐ விரும்புகின்றேன்" என்றார், அவர்.

சிறப்பு கலைக் குழுவில் Alexander சேரவில்லை என்ற போதிலும், பெய்சிங், உருமுச்சி முதலிய நகரங்களில் அவர் அரங்கேற்றியுள்ளார். ஓய்வு நேரத்தில், இசையமைக்க அவர் விரும்புகின்றார். தந்தையின் இத்திறமையைப் பற்றி Alexanderன் மகள் Rita பாராட்டு தெரிவித்தார். அவள் கூறியதாவது:

"என் தந்தை, திறமை மிக்கவர் என கருதுகின்றேன். accordionஐப் பழுதுபார்க்க, அதிகமானோர் இங்கு வருகின்றனர். ஓய்வு நேரத்தில், அவர் பாடல் வரிகளை எழுதி, அவற்றுக்கு இசையமைக்கின்றார். அவர் இசையமைத்தவற்றில், 'Yili ஆறு trilogy'என்ற இசை, என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. தற்போது, வீட்டில் இந்த இசையை அவர் அடிக்கடி இசைக்கின்றார். இந்த இசை இனிமையானது" என்றார், அவர்.

Alexander இசையை, உயிராகக் கொள்கின்றார் என்று உள்ளுர்வாசிகள் சிலர் கூறினர். இது பற்றி Alexander கூறியதாவது:

"15 வயது முதல், accordion இசைக்கருவியை பழுதுபார்த்து வருகின்றேன். முன்பு என் தந்தை, accordion பழுதுபார்த்தார். அவரிடமிருந்து இத்தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டேன்" என்றார், அவர்.

1990ஆம் ஆண்டு, accordion பழுதுபார்க்கும் கடையை அவர் திறந்து வைத்தார். இதற்கு முன், அவர் சிங்கியாங்கின் Ta Cheng, Altai, உருமுச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் accordion பழுதுபார்த்து வந்தார். இதனால், சிங்கியாங் முழுவதிலும், accordion பழுதுபார்ப்பதில் அவர் புகழ் பெற்றவர்.

அவரின் கடைக்கு அருகில், அவரின் தங்கை Dina நடத்தும் ரொட்டிக் கடை உள்ளது. இந்நகரில், ரஷிய ரொட்டிகளை தயாரிக்கும் ஒரே கடை இதுவாகும். பாரம்பரிய, சிறந்த தயாரிப்பு நுட்பத்தில், யாரையும் Dinaவுடன் ஒப்பிட முடியாது. Dina, Nina அம்மையாரின் மூத்த மகள் ஆவார். முன்னதாக ஆடை கடையையும், கைவினைப் பொருட்கள் கடையையும் அவர் வைத்திருந்தார். இக்கடைகளின் அலுவல் நன்றாக இல்லை. பின்னர், தனது தாயிடமிருந்து கற்றுக்கொண்ட இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு, ரொட்டிக் கடையைத் திறக்கத் தீர்மானித்தார். தற்போது விற்பனையும், வியாபாரமும் நன்றாக உள்ளது.

காலையில், அழகான அடுக்குகளில் பல்வகை ரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இக்கடைக்கு அடிக்கடி வந்து, ரொட்டிகளை வாங்குகின்றனர். வாடிக்கையாளர்கள், ஒரு முறைக்கு ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ ரொட்டிகளை பொதுவாக வாங்குகின்றனர்.

Nina அம்மையாரின் மூத்த மருமகளின் பெயர் Lima. Nina அம்மையாரின் மூத்த மகனின் மனைவியான Lima, கணவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த பின் மீண்டும் திருமணம் செய்த போதிலும், இப்பெரிய வீட்டிலிருந்து விலக அவர் விரும்பவில்லை.

"நான் மீண்டும் திருமணம் செய்தேன். இங்கிருந்து சென்று விட்டேன். ஆனால், இப் பெரிய வீட்டில் என் வீடு இருக்கின்றது. எனது பிள்ளைகள், தந்தை, தாய் மற்றும் தம்பிகள் இங்கு வாழ்கின்றனர். நாள்தோறும் இங்கு வந்து பார்க்கின்றேன்" என்றார், அவர்.

இப்பெரிய வீட்டில் வாழும் மக்கள், இப்பெரிய வீட்டின் மீது அன்புணர்வு கொண்டுள்ளனர். Lima குடும்பத்தினர்களிடமிருந்து பிரிந்து செல்ல விரும்பவில்லை. நாள்தோறும், அவர் ரொட்டி கடைக்கு வந்து, Dinaவுக்கு உதவி செய்கிறார். இந்த வீட்டில், சகோதரர்கள் சுமூகமாக பழகிக் கொள்கின்றனர். அவர்கள், இப்பெரிய வீட்டின் மீது ஆழ்ந்த பற்று கொண்டுள்ளனர்.

அமைதியான தோட்டம், Nina அம்மையார் குடும்பத்தின் வரலாற்றை விளக்கிக்கூறுவது போல் உள்ளது. இங்குள்ள இயற்கைச் சூழலை நேசிப்பதால், இக்குடும்பம் இங்கு தொடர்ந்து வாழும் என்று Nina அம்மையார் கூறினார்.