நாம் சீனர்கள் அளிக்கும் விருந்துக்குச் சென்றால், நம்மால் குச்சிகளை பயன்படுத்தி சாப்பிட முடியவில்லை என்ற ரகசியம் வெளிப்படும். அப்போது நாம் விழித்து நின்றால் உடனே நமக்கு கரண்டியை கையில் தந்து தங்களது குச்சிகளைக் கொண்டே நமக்கு உணவை எடுத்து நமது தட்டில் வைத்து விடுவார்கள். இது அவரது விருந்தோம்பலை மரியாதையை, கண்ணியமான நடத்தையை காட்டுகிறது. நாம் நமது கண்ணியத்தை வெளிப்படுத்துவது எப்படி?

அவர்கள் நம் தட்டில் வைத்ததை, அது எதுவாயிருந்தாலும் எடுத்து சாப்பிட்டு ஆஹா சுவையாக இருக்கிறது என்று சொல்வதுதான். ஒரு வேளை அந்த உணவு வகை பிடிக்கவில்லை என்றால் நன்றி என்று கூறி அந்த உணவை அப்படியே விட்டு விடுவதும், நலம். மேலும், நீங்கள் குச்சிகளைக் கொண்டு சாப்பிடத் தெரிந்தவர் என்றால், உங்கள் குச்சிகளை நீங்கள் சாப்பிடும் குழிப்பாத்திரம் அல்லது குவிளையில் உள்ள சோற்றில் நேராக குத்திவைக்கக்கூடாது. அப்பாத்திரத்தில் குச்சிகளை நேராக குத்திவைக்காமல் படுத்தார்போல் வைக்கலாம். அல்லது கீழே அருகில் வைக்கலாம். சரி, நமது சோற்று பாத்திரத்தில் நேராக குத்திவைத்தால் என்ன? அது விருந்து அளிக்கும் நபரையோ அல்லது அங்கே உள்ள மூத்த நபரையோ அவமரியாதை செய்வது போல். காரணம், ஒருவர் இறந்த பின், அவரது நினைவகத்தில், கல்லறையில் இப்படித்தான், ஒரு குவளையில் மண்ணையோ அரிசியையோ நிரப்பி அதில் ஊதுபத்திகளை சொருகிவைப்பார்கள். ஆக, விருந்தில் உங்கள் பாத்திரத்தில் சாப்ஸ்டிக்ஸ் குச்சிகளை நீங்கள் சொருகிவைத்தால் இது கல்லரையில் வைக்கும் ஊதுவத்தி போல் காட்சியளிக்கும் மேலும் விருந்தளிப்பவர் இறக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கு சமமாகும். ஆக குச்சிகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாகவே, சீனர்கள் தேநீரை அதிகம் குடிக்கின்றனர். பசுந்தேயிலை நீர் விதவிதமான பூக்களை பதப்படுத்தி அவற்றைக் கலந்த தேனீர் என்று உணவருந்தும் போதும், தேநீரை சீனர்கள் பயன்படுத்துகின்றனர். ஆக சீனர்கள் விருந்துக்கு அழைத்து நீங்கள் செல்லும் போது, மேசையில் உள்ள தேனீர் பாத்திரத்தின் வாய், எவரையும் நோக்கி இல்லாததை கவனிக்கலாம். அதாவது பீங்கான் தேனீர் பாத்திரத்தின் தேனீர் வரும் மெல்லிய குழாய் பகுதி எவரையும் பார்ப்பதாக வைக்கப்படாது. அப்படி அமர்ந்திருக்கும் எவரையாவது நோக்கி தேனீர் பாத்திரத்தின் வாய் அமைந்தால் அது அவருக்கு அவமரியாதையாக கருதப்படும். எனவே பொதுவாகவே யாரும் அமராத திசையில் தான் தேனீர் பாத்திரத்தின் வாய் பகுதி அமையும். கைகளில் அல்லது கரண்டியில் சாப்பிடும் போது, ஒட்டியிருக்கும் சோற்று பருக்கைகளையோ வேறு உணவுப் பொருளையோ நாம் உதறிவிட்டு மீண்டும் எடுத்து சாப்பிடுவோம். இதை நம்மூரில் கூட உதறிவிட்டு சாப்பிடுகிறாயே யாரை உதறித்தள்ளப்போகிறாய் என்று சொல்வதுண்டு.

சீனர்கள், தங்கள் குச்சிகளை பயன்படுத்தி சாப்பிடும் போது அதே போல் குச்சியைக் கொண்டு, தங்கள் பாத்திரத்தில் தட்ட மாட்டார்கள். காரணம், அது விருந்தளிப்பவருக்கு அல்லது உணவை தயாரித்தவருக்கு அவமரியாதை செய்வதாக கருதப்படும். மேலும், பிச்சை எடுக்க நபர்கள்தான் இப்படி பாத்திரத்தில் தட்டி ஒலி எழுப்புபவர்கள் அல்லது உணவகங்களில் நீங்கள் கோரிய உணவு வரத் தாமதமானால் அப்போது நீங்கள் பாத்திரத்தை தட்டி ஒலி எழுப்பலாம். அதையே ஒரு வீட்டில் நீங்கள் செய்தால் அது வீட்டின் குடும்பத்து மூத்தவருக்கும் உணவு தயாரித்த நபருக்கும் நீங்கள் அவமரியாத செய்ததாக பொருள்படும்.
|