• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-20 13:01:05    
உணவுகளும், அடையாளங்களும்

cri

ஏற்கனவே, நூடுல்ஸ், முட்டை மற்றும் மீனின் அடையாளங்கள் அல்லது சீனப் பண்பாட்டில் அவை அடையாளப்படுத்தும் அம்சங்களை பற்றி அறிந்தோம். இனி வேறு சில உணவுப் பொருட்களையும், அவற்றின் அர்த்தங்கள், அவை அடையாளப்படுத்தும் அம்சங்களையும் பற்றி உங்களுக்கு அறியத்தருகிறோம். சீனப் பண்பாட்டில், பழங்கதைகளில் டிராகன் பிஃனிக்ஸ் பறவை இரண்டுமே பரவலாக காணப்படும் அம்சங்களாகும். உண்மையில் இவ்விரண்டுமே உலகில் எங்கும் பார்க்க முடியாதவை. கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாய விலங்கினங்கள் இவை. ஆனால் இவற்றுக்கு சீனாவில் தரப்படும் முக்கியத்துவம் இன்றும் பெரிதும் மாறி விடவில்லை எனலாம்.


இந்த பீஃனிக்ஸ் பறவையையும், டிராகனையும் அடையாளப்படுத்தும் கோழி, சீன உணவில், சீனப் பண்பாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக சீன திருமண விருந்தின் போது, பீஃனிக்ஸ் பறவையை அடையாளப்படுத்தும் கோழியின் கால்களும், டிராகனை அடையாளப்படுத்தும் இறால் வகைகளும் பரிமாறப்படுவதுண்டு.
சீனப் புத்தாண்டின் போதும், கோழிக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. நல்ல திருமணம், குடும்பங்களின் ஒன்று சேரல், இவற்றை கோழி அடையாளப்படுத்துகிறது. விருந்தின் போது முழுக் கோழியை பரிமாறுவது, குடும்ப ஒற்றுமையை வலியுறுத்துகிறது. கோழியை வறுத்து, பொறித்து, குழம்பு செய்து என்று பல வகைகளாக ருசி பார்த்த நமக்கு, சாப்பிடும் பொருளில் ஒரு உள் அர்த்தத்தை வைத்து, அது இதை அடையாளப்படுத்துகிறது, அதை அடையாளப்படுத்துகிறது என்று கேட்கும் போது வியப்பாகத் தான் இருக்கிறது.
மனிதர்கள், மொழி, இனம், மதம் பழக்க வழக்கம், புவிசார்ந்த எல்லைகள் என வேறுபட்டு கிடந்தாலும், ஒரு சிலவற்றுக்கென அடையாளங்கள் அர்த்தங்கள் சிறப்பான குறியீடுகளை வைத்து, அதை பலப்பல ஆண்டுகள் போற்றி, மதித்து, பின்பற்றி வருவதில் ஒன்று போலத்தான் செயல்படுகிறார்கள். இதுவும் மனித இயல்புதான் போல்.


சரி, விதையெள்ளது போட்டால் சுரையொன்றா முளைக்கும் என்பார்கள். பொதுவாக விதைகள் என்பவை, பன்மடங்கு பலனை, செழிப்பை, வளத்தை குறிக்கின்றன.
சீனப் பண்பாட்டிலும் விதைகள், அதிகம் குழந்தைகள் பிறக்கும் வாழ்த்தை, மகப்பேற்றை குறிக்கின்றன. தர்பூசனி விதை, தாமரை விதை என பல்வேறு விதைகள் சீனர்களால் கொறிக்கப்படுகின்றன. சீனப் புத்தாண்டின் போது பல்வேறு வகைகளில் காணப்படும் இனிப்புகள், கேக் முதலியவற்றில் நாம் இந்த விதைகளை பார்க்கலாம்.
சீனத் தலைநகர் பெய்சிங்கில் இருந்து கொண்டு வாத்திறைச்சி பற்றி ஏதும் கூறாவிட்டால். எப்படி? பெய்சிங் வாத்திறைச்சி, மிகவும் பிரபலமானது. சீனாவுக்கு வருகை தந்த எமது நேயர்களுக்கு இது பற்றிய நேரடி அனுபவமும் இருக்கும்.
சீனாவில் வாத்து, நம்பிக்கையை, நம்பகத்தன்மையை குறிப்பதாக கருதப்படுகிறது. சீனாவில் திருமண விருந்துக்குச் சென்றால் அங்கே நிச்சயம் ஒரு முழு வாத்து தீயில் வாட்டி, பளபளவென மின்னிக்கொண்டிப்பதை பார்க்கலாம். வாத்திறைச்சியை அழகாக ஒரு மெல்லிய ரொட்டியில் சுருட்டி சாப்பிடுவதை பார்க்க மிக அழகாகத்தான் இருக்கும். மேலும் திருமண விருந்துகளில், செந்நிறத்தில் சில உணவு வகைகள் காணப்படும். அது இனிப்போ அல்லது வேறு ஏதேனும் உணவு பொருளோ, செந்நிறம் என்பது மகிழ்ச்சியின் அடையாளம் என்பதால், திருமண விருந்தில் அந்நிறம் அதிகம் காணப்படலாம்.
மீன், கோழி, முட்டை, வாத்து, விதைகள், இலை தவிர வேறு சில பழங்கள், சிற்றுண்டி வகைகள், குறிப்பிட்ட ஒரு விழா அல்லது முக்கிய நாட்களில், நல்வாழ்த்தையும், நம்பிக்கையையும் அடையாளப்படுத்துவதாக பரிமாறப்படுவதுண்டு, அருந்தப்படுவதுண்டு. ஆரஞ்சு பழம், வேர்க்கடலை, கடல் பாசி முதலியவை, இவற்றில் அடக்கம்.


சாப்பிடும் சில உணவுப் பொருட்களுக்கான அர்த்தங்களையும், அவை உணர்த்தும் பண்புகளையும் பற்றி சில தகவல்கள் உங்களோடு பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. சாப்பாடு ஆயிற்று, அடுத்து என்ன, வெற்றிலை பாக்குதானே?