பன்னாட்டு நிறுவனங்கள், சீனாவுடனான நீண்ட நெடுநோக்கு ஒத்துழைப்புறவை உருவாக்குவதை சீனா வரவேற்பதாக சீன வணிக அமைச்சரின் உதவியாளர் Chong Quan கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில், சீன-நாடு கடந்த குழும நிறுவனங்களின் வட்ட மேசை கூட்டத்தின் துவக்க விழாவில் அவர் இவ்வாறு கூறினார். பன்னாட்டு நிறுவனங்களுடன் சீனா ஒத்துழைப்பை ஆழமாக்கும் போக்கில், சீனாவின் வட்டார வளர்ச்சி மற்றும் கட்டுமானத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, தொழில் நுட்பப் புத்தாக்கம், உற்பத்தி பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சீனாவுடன் ஒத்துழைப்பு வலுப்படுத்த வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் கூறினார். தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பை நிறைவேற்றுவதில், பன்னாட்டு நிறுவனங்கள், மாதிரி பங்கினை மேலும் வெளிக்கொணர வேண்டும் என்று Chong Quan விருப்பம் தெரிவித்தார். கடந்த ஆண்டு வரை, சீனாவில் உண்மையில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை, 75 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. உலகளவிலான 500 முன்னணி தொழில் நிறுவனங்களில், 480 தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்துள்ளன. சீனாவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறுவியுள்ள ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனங்களின் எண்ணிக்கை, ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று தெரிய வருகிறது.
|