காலநிலை மாற்றத்தைப் பயன்தரும் முறையில் சமாளிக்க, சீனா வகுக்கின்ற "எரி பொருள் சட்டத்தில்", பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது, மிக முக்கிய பணியாக வைக்கப்பட்டுள்ளது. 140 சட்ட விதிகளில், எரியாற்றலின் சிக்கனப் பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரியாற்றல் மற்றும் புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றலின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு ஆகியவை தொடர்பான விதிகள், 20க்கு மேற்பட்டவை. காலநிலை மாற்றத்தை பயன்தரும் முறையில் சமாளிக்கும் பொருட்டு, பல்வேறு நிலை அரசுகள், எரியாற்றல் சிக்கனப் பயன்பாடு தொடர்பான உற்பத்தி, வாழ்க்கை மற்றும் நுகர்வு முறையை நடைமுறைப்படுத்தி, எரியாற்றல் நுகர்வு கட்டமைப்பை மேம்படுத்தி, எரியாற்றல் பயனை உயர்த்த வேண்டும் என்றும், பாரம்பரிய எரியாற்றலுக்கு பதிலாக, புதிய எரியாற்றலை வளர்த்து, புதை படிவ எரியாற்றலுக்கு பதிலாக, புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றலை வளர்க்க வேண்டும் என்றும் இச்சட்ட வரைவு கோருகிறது. எரியாற்றலை சிக்கனமாகப் பயன்படுத்தி, பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதை ஆதரிக்க, இவ்வாண்டு சீன நடுவண் நிதி அமைச்சகம் 2350 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், நாடு முழுவதிலும் உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்புக்குத் தேவைப்படும் எரியாற்றல் நுகர்வு தொடர்ந்து குறைந்து வருகிறது.
|