• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-10 11:48:22    
தாய் நலனே சேய் நலன்

cri

"தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை" என்பார்கள். "அன்னை ஓர் ஆலையம்" என்று தாயை கோவிலாக போற்றும் வழக்கம் என்றுமே இருந்து வருகிறது. தாய் தான் குடும்பத்தை அரவணைத்து செல்பவராக உலா வருகிறார். தந்தை இல்லாத குடும்பத்தை நினைத்து பார்த்தாலும் தாய் இல்லாத கும்பத்தை நினைத்து பார்க்க முடியாது. தாய் தந்தையையின் அரவணைப்போடு வளரும் குழந்தையும், அவர்களின் இணைந்த திட்டத்தின்படி அமையும் குடும்பமும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இல்லறத்தின் நிறைவாக குழந்தைகள் பாவிக்கப்படுகின்றனர். குழந்தைகளே குடும்பத்தின் மகிழ்ச்சி. எவ்வளவு தான் கடினமான வேலைகளை செய்து களைத்து வந்தாலும் குழந்தையின் மழலை சொல் குடும்ப தலைவருக்கு புத்துணர்ச்சியை தரும். தனது குழந்தை தன்னை அப்பா.. என முதன்முதலில் அழைத்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் இரண்டு மூன்று நாள் அலுவலகத்திற்கே செல்லாத தந்தையர்கள் நம்மிடம் உண்டு.

"தாய் இல்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நானில்லை"

என்று தாயின் பெருமையை போற்றாத நாவில்லை. காரணம் குழந்தைகளை பராமரிப்பதன் பெரும் பொறுப்பு தாயை சென்றடைகிறது என்றால் மிகையாகாது. குழந்தைளை கவனித்து வளர்ப்பது பற்றிய நுணுக்கமும், பொறுமையும், கனிவும் தாயை போல் எவரிடமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு குழந்தையை பராமரிக்கும் தாய் அதற்கு மருந்தூட்ட, தான் மருந்துகளை சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளார். குழந்தையை பராமரிக்கும் தாயின் உடல் நலமும் மிக மிக முக்கியமாகும்.

எனவே மகப்பேறு காலங்களில் பெண்களின் உடல் நலத்தில் அதிக அக்கறை என்பது மிக அவசியமானது. நலமான தாய் தான் நலமான குழந்தையை இச்சமுதாயத்திற்கு தர முடியும். அப்படிப்பட்ட தாயின் நலனை முன்னேற்ற நிறுவனங்களும், அரசுகளும் இன்னும் பல புதிய தனிச்சலுகைகளை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் ஆங்காங்கு எழுப்பப்படுகின்றன. சீனா, உலகின் 20 விழுக்காட்டு பெண்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி சீன தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நலமுடன் பாலூட்ட அதிக மகபேறு விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென்று பிரபல குழந்தை மருத்துவரும், சீன மருத்துவ அமைப்பின் கீழுள்ள குழந்தைகள் நலக்குழுவின் தலைவருமான Ding Zongyi பரிந்துரைக்கிறார். "தற்போது சீனா, உலக சுகாதார அமைப்பின் வழிமுறைகளை பின்பற்றுகிறது. உலக அளவில் அதிக பாலூட்டும் தாய்மார்களை கொண்டிருக்கிறது. ஆனால் அது கொண்டிருக்கும் இன்றைய கோட்பாடுகள் புதிய தாய்மார்களுக்கு போதுமான அக்கறையை உறுதி செய்யவில்லை" என்று Ding Zongyi கூறுகிறார்.

குழந்தைகளுக்கு ஊட்டப்படும் தொடக்ககால உணவு மிக முக்கியமானது. அது தாய்பாலை தவிர வேறில்லை. குழந்தைகள் எல்லா ஊட்டசத்துகளையும் பெற்று, நலமுடன் வளர்வதற்கு சிறந்த வழி தாய்பால் மட்டுமே என்பதால், முதல் ஆறு மாதங்கள் குழந்தைகளுக்கு அதிகமாகவே தாய் பாலூட்ட உலக சுகதார அமைப்பு வலியுறுத்துகிறது.

பெண்களின் மகப்பேறு சம்பந்தப்பட்ட காலங்களில் அவர்களுடைய வேலையிலிருந்து விடுப்பு பெற சட்டப்படி அனுமதி உள்ளது. சீன சட்டப்படி 90 நாட்களுக்கு குறையாத மகப்பேற்று விடுமுறையும், 15 நாட்களுக்கு மேலாகாத பிரசவத்துக்கு முன்னான விடுமுறையும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் முதிய வயதில் மகப்பேறு, பிரசவம் நடைபெற்ற முறைகள் மற்றும் அறுவை சிகிச்சை என்றால் அதற்கான ஓய்வு ஆகிய பல்வேறு சூழல்களின் அடிப்படையில் 30 முதல் 40 நாட்கள் வரை மேலும் விடுமுறை அளிக்கப்பட அனுமதியுள்ளது.

இவை போதுமானது அல்ல என விளக்கும் Ding Zongyi, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை நிறைவேற்ற புதிய தாய்மார்களுக்கு 6 திங்கள் மகப்பேறு கால விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்கள் செய்யும் வேலை, தாய்பாலின் தரத்தை பாதிக்கும் என்று சைனா டெய்லி நாளேட்டிற்கு பேட்டியளித்தபோது கூறினார். நலமான, மகிழ்ச்சியான தாய் மிகவும் சத்தான பாலை தனது குழந்தைக்கு ஊட்ட முடியும். எனவே அவருடைய நலன் பேணும் அனைத்து செயல்களும் ஆதரிக்கப்பட வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் வேலை செய்தால், ஒவ்வொரு நாளும் ஏற்படும் களைப்பு, விரக்தி, பதட்டம், மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவை குழந்தையின் தார்மீக உணவான தாய்பாலை பாதிப்பது நிச்சயம். இப்படிப்பட்ட நெருக்கடிகளில் தவிக்கும் பல தாய்மார்கள் தங்களையும் சரியாக பேணி பராமரித்து கொள்ளாமல்;, தனது குழந்தைகளுக்கு கொடுக்க போதுமான தாய்பால் சுரக்கமல் அவதிப்படுவதும் உண்டு.

வேலை செய்கின்ற தாய்மார்கள் பாலூட்டுவதில் அதிக சிரமத்தை மேற்கொள்கின்றனர். தாய் வேலை செய்வதால் பிஞ்சு குழந்தை காலையிலிருந்து மாலை வரை தாயிடமிருந்து பிரிக்கப்படுகிறது. தாயை பிரிந்த குழந்தை அவரை நினைத்தே ஏங்கி தவித்திருக்க, வேலைக்கு சென்ற தாய், குழந்தையை நினைத்தே ஏங்கி கொண்டிருப்பார். வேலையிலும் தனது முழுக்கவனத்தையும் செலுத்த முடியாமல் துன்பப்படுவார். அடுத்ததாக குடும்பத்தோடு வெளியே செல்கின்றபோது குழந்தைக்கு பாலூட்ட பல நடைமுறை பிரச்சனைகளை தாய் தான் சந்திக்க வேண்டியுள்ளது. குழந்தைக்கு பாலூட்ட மறைமுக இடம் தேடி பரபரப்பின்றி அமைதியாக குழந்தையை பேணுவது என்பது பயணக் நேரங்களில் கடினமானது. அப்படியானால் ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் எப்படி குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுவது?

இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்ட Ding Zongyi, இந்நிலைமைகள் மாற்றப்படுவதற்கு சில ஆலோசனைகள் வழங்குகிறார். மகப்பேறு கால விடுமுறை ஒழுங்குகள் மாற்றப்படுவதற்கு முன்னால் தொழில் நிர்வாகங்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு வாகன போக்குவரத்து ஏற்பாடு செய்ய முதலாளிகளை தூண்டுவதோடு, பாலூட்டுவதற்காக தனிஅறை ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். இவை அனைத்தும் புதிய தாய்மார்களின் நலனுக்காகவே. இத்தகைய முயற்சிகள் பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதிய அளவில் பாலூட்டுவதை ஊக்கப்படுத்தும். Ding யின் இக்கருத்துக்கள் தாயாக போகின்ற பெண்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Ding யினுடைய பல தோழிகள் அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டுமென்பதற்காக தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதை நிறுத்திவிட்டனர். அவர்களிடன் குழந்தைகளுக்கு அதிகமாக பாலூட்ட வலியுறுத்திய பின்னரும் பணி அழுத்தத்தால் அவ்வாறு செய்தனர்" என்று Ding தெரிவித்தார்.

ஷாங்காயிலுள்ள 19 மாத பெண் குழந்தையின் தாயான Renee Wang "இவ்வாறு வேலை செய்துகொண்டு குழந்தைக்கு பாலூட்டுவது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவமில்லாதவர்கள் கற்பனை செய்யவே முடியாது" என்று கூறியுள்ளார். Shenxhen னில் உள்ள பொதுத்துறைப்பணியாளர் Yang Min "பெண்களுக்கு 6 திங்கள் மகப்பேறு கால விடுமுறை என்பது மிகவும் உகந்தது" என்றார். "தாய் பாலூட்டுவது குழந்தைக்கும் தாய்க்கும் நல்லது. எனது குழந்தைக்கு அது விரும்பும் வரை தாய் பாலூட்ட முடியும் என நான் நம்புகிறேன்" என்று டிசம்பர் கடைசியில் பிரசவத்திற்காக காத்திருக்கும் தாய் ஒருவர் கூறியுள்ளார்.

தாய் பாலூட்டவது என்பது குழந்தைக்கு தேவைப்படும் ஊட்டசத்தை வெறுமனே வழங்குவது அல்ல. மாறாக தாய் தனது இரத்தத்தையே வழங்குவது. அத்தோடு பாசம், நேசம், பண்பு, பாதுகாப்பு, வீரம் ஆகிய உணர்வுகள் அனைத்தையும் ஒருசேர வழங்குவதாகும். எனவே குழந்தையின் இக்கால வாழ்க்கை பகுதி மிக முக்கியமானது. இதை தாயின்றி வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை பெருளுள்ள அளவில் நிறைவேற்ற போதுமான அவகாசம் தாய்மார்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் தானே.

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காத உலகில்லையே"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040