வயது முதிர்ந்தோர்க்கு உதவும் தன்னார்வ பெண் தொண்டர்கள்:
தென் சீனாவின் குவாங்துங் மாவட்டத்திலுள்ள ஷென்ஸன் நகரில் தன்னார்வ பெண் தொண்டர்கள், சமூகத்திலுள்ள வயது முதிர்ந்தோர்க்கு உதவும் தொண்டர் குழுவை உருவாக்கியுள்ளனர். ஷென்ஸன் நகர் பௌஅன் மாவட்டத்திலுள்ள பல திருமணமான பணக்காரா பெண்கள், தங்கள் ஓய்வு நேரங்களில் அருகில் வசிக்கின்ற வயது முதிர்ந்தோர், கைம்பெண்கள், மனைவியை இழந்தவர்கள் ஆகியோர்களுக்கு உதவி செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்களை சென்று சந்தித்து அளவளாவுவதோடு, வீட்டு வேலைகளிலும் உதவுகின்றனர். தற்போது இந்த தன்னார்வ தொண்டர் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை 90 லிருந்து 140 ஆக உயர்ந்துள்ளது.
"இவ்வாறு வயதானவர்களை சந்திக்க அல்லது அவர்களுக்கு தொண்டு செய்ய செல்லும் போது இந்த தொண்டர் குழவினர் அவர்களுக்கான சீருடை அணிந்து செல்கின்றனர் என்று இத்தன்னார்வ பெண் தொண்டர் அமைப்பின் தலைவர் சென் சியாவ்லி தெரிவித்தார். இந்த குழு உறுப்பினர்கள் அருகில் வசிகின்ற முதியோர்களுக்கு துவைப்பது, சமைப்பது, தகவல்கள் அளிப்பது, தலை வாருதல் மற்றும் கை நகங்களை வெட்டுவது போன்ற வேலைகளில் உதவுகின்றனர். நீண்டகாலம் உயர்தர வாழ்க்கையில் பழக்கப்பட்டாலும் வேலைக்காரர்களை போல எல்லா வேலைகளையும் செய்ய தயாராக இருக்கும் இப்பெண்களின் சேவை மனப்பான்மையை பாராட்டுகிறேன். வசதியான வாழ்வுக்கு பின்னர் பொருளுள்ள வாழ்வு அவர்களுக்கு தேவைப்படுகிறது என்று சென் சியாவ்லி தெரிவித்தார். இந்த தன்னார்வ தொண்டர் குழுவின் அர்ப்பணமும், சளையாத சேவையும் அங்குள்ள
சமூக வாழ்க்கையே மாற்றியுள்ளது. முன்பு அச்சமூக மக்கள் பிறரோடு பழகாதவர்களாக இருந்தனர். தற்போது அந்த சமூகமே உயிராற்றலோடு உள்ளது. மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் அடுத்தவர்களுக்கு உதவ விரும்புகின்றனர் என்று சென் சியாவ்லி கூறினார்.

மாணவன் சுன் குய்சி
எயிட்ஸ் அனாதைகளுக்கு 20,000 யுவான் நன்கொடை அளித்த சிறுவன்:
வடகிழக்கு சீனாவின் முக்கிய நகரான கார்பினில் 12 வயதான பள்ளி சிறுவன், தான் தேடி சேர்த்த 1,60,000 நெகிழி குளிர்பான புட்டிகளை விற்று அதனால் கிடைத்த 20,000 யுவானை கென்னானில் உள்ள எயிட்ஸ் பாதிக்கப்பட்ட அனாதைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளான். சியாவ் ஹ_ங் இடைநிலை பள்ளியை சேர்ந்த மாணவன் சுன் குய்சி சீன தொழில் நுட்ப மற்றும் வணிக அமைப்பின் உதவியோடு நடத்தப்படும் சீன சிவப்பு ரிப்பன் அனாதை இல்லத்தை கேள்விப்பட்டபோது இரண்டாண்டுகளுக்கு முன்பே பணம் சேமிக்க தொடங்கியுள்ளான். அப்போது தான் கென்னானில் ஷாங்சாய் பகுதியில் முறையில்லாத இரத்த மாற்றம் மற்றும் இரத்ததானத்தால் HIV பரவிய பல மக்களுக்கு இந்த அனாதை இல்லம் கட்டுமானப்பணி தொடங்கியிருந்தது.
முதலில் சுன் குய்சி தனது 222 யுவான் சேமிப்பை அனாதை இல்லத்திற்கு வழங்கினான். 2005 மே திங்கள் சீன சிவப்பு ரிப்பன் இல்ல திறப்பு விழாவிற்கு சுன் அழைக்கப்பட்டான். அப்போது 4000 யுவானுக்கு மேற்பட்ட அவனுடைய சேமிப்பை நன்கொடையாக வழங்கினான். நெகிழி குளிர்;பான புட்டிகளை தேடி சேர்த்து விற்றல், பதின்வயது நாளேடுகள் மற்றும் இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகள் வழி கிடைத்த சேமிப்பே அந்த தொகையாகும். இவ்வாறு புட்டிகளை சேகரித்து விற்று 800 புத்தகங்கள் மற்றும் பண அன்பளிப்பபை சுன் வழங்கியுள்ளான்.
"எயிட்ஸ் அனாதைகளுக்கு அன்பு காட்ட விரும்புகிறேன். இப்படி எல்லோரும் அன்பு காட்டினால் அவர்கள் தனிமையை உணரமாட்டார்கள்" என்று சுன் கூறினான். இவனுடைய பெற்றோர் மாதத்திற்கு 2,000 யுவான் சம்பாதிக்கின்றனர். இவனுடைய தாயார் அவன் உடல் நலனில் அக்கறை கொண்டு அதிக நேரம் புட்டிகள் சேகரிப்பதற்கு செலவழிக்க வேண்டாம் என்றும் அவனுக்கென்று சிலவற்றை வாங்கி கொள்ளவும் அறிவுறுத்தினார். "எனக்கும் விளையாடுவதற்கு விளையாட்டு தட்டுகள் மற்றும் காலுறைகள் அகியவை வாங்க ஆசைதான். அவை என்னுடைய தேவைகளல்ல. ஆனால் இந்த பணம் எயிட்ஸ் அனாதைகளுக்கு உணவுக்கும் கல்விக்கும் பயன்படும்" என்று பதிலளித்துள்ளான். நவம்பர் 30 ஆம் நாள் சுன் குய்சி நாட்டின் எயிட்ஸ் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு வழங்கியுள்ள பங்களிப்புக்காக தேசிய விருது பெற்றுள்ளான் என்பது குறிப்பிடதக்கது.

இசையால் வாழ்வு பெற்ற கோமா நோயாளி:
சேஜியாங்; மாநிலத்தில் ஷாவ்சிங்கில் கோமா என்ற நினைவிழந்த நிலையிலிருந்த நோயாளி இசையை கேட்டு நலமடைந்துள்ளார். லி என்ற இளைஞர் ஆகஸ்ட் திங்கள் ஏற்பட்ட கார் விபத்தில் கடுமையாக காயமடைந்ததோடு, நினைவிழந்து கோமா நிலையில் இருந்தார். ஓவ்வொரு நாளும் லியை பாரம்பரிய இசைகோர்வையான சிம்பொனி பாடல்களை கேட்க செய்த மருத்துவர்கள், மூளை வரிமம் செய்தபோது அவர் இசையை உணர்வதை கண்டுபிடித்தனர். மெதுவாக மூட்டுகளில் உணர்வு பெற்ற லி, விரிவான மறுவாழ்வு சிகிச்சை மூலம் இப்போது பேசவும் நடக்கவும் செய்கிறார்.
இரட்டையர் எப்படி பிறக்கின்றனர் என விளக்க ஆய்வு:

இரட்டையர்கள்
ஜியங்சு மாநிலத்திலுள்ள குவ்ஜியபியன் கிராமம் 150 குடும்பங்களோடு மொத்தமாக 500 பேரை கொண்டது. கடந்த 10 ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்ட 11 இணைகளில் 6 தம்பதியர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இத்தகைய அதிக இரட்டையர் பிறப்புக்கு நீர் வினியோகம் காரணமாக சொல்லப்படுகிறது. நிபுணர்கள் இது பற்றிய ஆய்வுகளில் இறங்கியுள்ளனர்.
புதையுண்டிருந்த டைனோசர் தோலுடன் கண்டுபிடிப்பு:
புதையுண்டிருந்த டைனோசர் தோலோடு வட டகோடாவில் கண்டுபிடிக்கப் பட்டது என தொல்லியல் ஆய்வாளர்களை குறிப்பிட்டு ஊடகங்கள் செவ்வாய் அன்று செய்தி வெளிட்டுள்ளன. புதைந்திருந்த டைனோசர் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னான பலவற்றை வெளியிடுவதோடு, இதற்கு முன் அளவிட கடினமான தசை பெருக்கத்தை கணக்கிட்டு அதன் மொத்த உடல் தசையளவை அறிவியலாளர்கள் அறிய வழி செய்ய உள்ளது. "இது தோல் பதிவு தடம் அல்ல. புதைக்கப்பட்ட தோலாகும். இம்மிருகம் தன்மேல் கோடுகளை கொண்டிருந்தது என்பதை புதையுண்டிருந்த தோல் தெளிவாக உணர்த்துகிறது" என்று மான்செஸ்டர் பல்கலைக்கழக தொல்லியலாளர் ஃபில் மேன்னிங் தெரிவித்தார்.

இதன் எடை 10,000 பவுண்ட் ஆகும். இதில் தலைப்பகுதி இருக்கிறா என்பதை அறிய வரிமம் தேவைப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தாவரங்களை உண்ணும் டைனேசரான, ஹேட்ரோசர் என்றும், இது 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என்றும், இரண்டு காலால் நடந்து, மணிக்கு 45 கிலோமீட்டர் வேகமாக ஓடக்கூடியதாய் இருந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|