கலை: வணக்கம் நேயர்களே. நேயர் நேரம் நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பள்ளி செல்லும் உங்கள் குழந்தைகள் காலாண்டு தேர்வு முடித்தபின் கிடைக்கும் விடுமுறையில் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இங்கே சீனாவிலும் இப்போது தேசிய நாள் விடுமுறைக்காலம். விடுமுறை என்றாலே மகிழ்ச்சிதான், கொண்டாட்டம்தான் அல்லவா? சரி, விடுமுறை நினைவுகளை தள்ளிவைத்து, நிகழ்ச்சிக்கு செல்வோம்.
க்ளீட்டஸ்: நிகழ்ச்சியின் முதல் கடிதம் திருச்சி மணக்கால் இரா அன்பழகன் எழுதியது. சீனத் தமிழொலி இதழ் சீரும் சிறப்புமாக இருப்பதை கண்டு மகிழ்ந்தேன். பல்வேறு செய்திகளை தாங்கி வரும் இந்த இதழ், நேயர்களுக்கு புதிய தகவல்களை வழங்குகிறது.நன்றிகள். கலை: அடுத்து சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி பற்றி இலங்கை காத்தான்குடி மு.மு.மபாஸ் எழுதிய கடிதம். ஜியான்சு மாநிலத்திலான பண்டைய வட்டம் பற்றிய தகவல்களை கலைமகள் வழங்கினார். லூ சு என்னும் இப்பணடைய வட்டத்தின் வரலாறு, பண்பாட்டு உள்ளடக்கம், இங்கு காணப்படும் சாலைகள் உள்ளிட்ட பல தகவல்களை நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார். கிளீடஸ்: தொடர்ந்து அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி சேந்தமங்கலம் எஸ். தீபா எழுதிய கடிதம். எரியும் பனிக்கட்டி என்று கூறி இயற்கை வாயு ஹைட்ரேட் வளம் பற்றி விளக்கியது நிகழ்ச்சி. சீன அரசு இதற்காக 500 மில்லியன் யுவான் செலவு செய்து கடலில் அகழ்வாராய்ச்சி நடத்தி இந்த வளத்தை கண்டறிந்ததை அறிந்துகொண்டோம். தற்போதைக்கு உடனடி பயன் இந்த எரியும் பனிக்கட்டியால் இல்லையென்றாலும், எதிர்காலத்தில் நல்ல மாற்று எரிபொருளாக பயன்படும். நிகழ்ச்சியில் புதிய தகவல்கள் இடம்பெற்றமை நன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
கலை: அடுத்து காத்தான்குடி ஏ. சாஜிதா பர்வீன் எழுதிய கடிதம். சீன வானொலியின் நேயராக என்னை இணைத்துக்கொண்டமைக்கு மகிழ்ச்சியடைகிறேன், நன்றிகள். எல்லோர் மனதிலும் இடம்பிடித்த சீன வானொலி நிகழ்ச்சிகள் என் மனதையும் கவர்ந்துள்ளன. எனவே நாள்தோறும் நான் தவறாமல் கேட்டு வருகிறேன். நான் மட்டுமல்ல, என் குடும்பத்தினரும் நிகழ்ச்சிகளை கேட்டு வருகின்றனர். ஓயாத அலைபோல என்றும் சீன வானொலி மேலோங்கட்டும். வாழ்த்துக்கள். க்ளீட்டஸ்: அடுத்து உத்திரக்குடி சு. கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் பெய்சிங் குடியிருப்பு பகுதியின் மருத்துவ சேவை பற்றி கூறியதைக் கேட்டோம். சீனா பொருளாதாரத்தில் முக்கியத்துவம் காட்டுவதை போன்றே மருத்துவத் துறையிலும் முக்கியத்துவம் காட்டி வருவது மகிழ்ச்சியடைய வைக்கிறது. மருத்துவத்துறையில் லாப நோக்கின்றி, மனித நேயப் பணி மட்டுமே முக்கியத்துவம் என்ற அடிப்படையில் செயல்படுவதை நிகழ்ச்சி அறியத் தந்தது. நிகழ்ச்சியை வழங்கிய வாணி அவர்களுக்கு நன்றிகள். கலை: தொடர்ந்து ராசிபுரம் எஸ். சுப்பு மணிகண்டம் எழுதிய கடிதம். சீனாவில் உன்னான் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றிய செய்தித்தொகுப்பு நிகழ்ச்சி கேட்டேன். சீன அரசு இப்பகுதியில் மிகுந்த கவனத்துடன் நிவாரணப்பணிகளை மேற்கொண்டது. சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நிகழ்ந்த இந்நிலநடுக்கத்தால் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். 8 பேர் உயிரிழந்தனர், 300க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
க்ளீட்டஸ்: அடுத்து ஜெயங்கொண்டம் எஸ். பாலச்சந்தர் எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகள் சுவையாக அமைந்துள்ளன. ஒரு மணி நேரம் போவதே தெரியவில்லை. சிந்தனைக்கும் அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் பயன் தரும் விதத்தில் அமையும் நிகழ்ச்சிகளே இதற்கு காரணமாகும். சீன மொழி மற்றும் பண்பாட்டில் எனக்கு ஆர்வம் அதிகமாகியுள்ளது. சீன மக்களின் உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் துணையோடு பொருளாதாரத்திலும், ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் சீனா முன்னணி நாடாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
|