• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-14 14:44:20    
உண்ணாமலே.........

cri
தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த  உலகத்தையே அழித்திடுவோம் என்று புரட்சிக்கவி பாரதி முழங்கினான். பல்வேறு வளர்ச்சிப் பாதைகளை கண்ட நாடுகள் உணவில் தன்னிறைவு அடைந்து விட்டாலும் அது எல்லா மக்களுக்கும் சென்று சேராத பகிர்வு தன்மையை தான் காணமுடிகிறது. இந்த சூழலில் உணவு கிடைக்காமல் உண்ணாமல் இருக்கும் மக்கள் ஒரு புறம் இருக்க, ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் தங்கள் உடல் நலக்குறைவால் விரும்பியது போல் உண்ண முடியாமல் இருக்கும் கூட்டம் மறுபுறம். இந்த இருவகையினரும் தாங்கள் வேண்டுமென்றே உண்ணாமல் இருப்பதில்லை. இவர்கள் உணவு கிடைக்காமல் அல்லது உண்ண முடியாமல் துன்பப்படுகின்றவர்கள்.
இதற்கு அடுத்ததாக, ஒரு சிலர் தங்கள் போராட்ட உணர்வுகளை தாங்கள் உணவு உடகொள்ளாமல் இருப்பதன் மூலம் வெளிக்காட்டுகின்றனர். அவை தான் நாம் அன்றாடம் காணும் அடையாள, காலவரையறையற்ற மற்றும் சாகும்வரையிலான உண்ணாவிரதங்கள். இந்நிலைக்கும் அடுத்தப்படியாக சிலர் தங்கள் மத கடமைகளை நிறைவேற்றுவதற்காக உண்ணா நோன்பு, விரதம் ஆகியவற்றை மேற்கொள்கின்றார்கள். முஸ்லீம்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ளும் போதும் ரம்ஜான் பண்டிகையின் போதும் நோன்பிருக்கின்றனர். பழனி திருப்பதி, காசி, இராமேஸ்வரம் எனச் செல்லும் இந்து சகோதரர்களும் தங்கள் முறைப்படி பல்வேறு விரத முறைகளை பின்பற்றுகின்றனர். கிறித்தவர்கள் குறிப்பிட்ட 40 நாட்கள் நோன்பிருந்து தங்கள் மதக்கடமைகளை நிறைவேற்றுகின்றனர். இவ்வாறு எல்லா மதங்களும் தங்களுக்கென நோன்பு முறைகளை கொண்டுள்ளன.


வழக்கமாக, குறிப்பிட்ட இடைவெளிகளில் உணவை தவிர்க்கும் பழக்கம் ஆக்கப்பூர்வமான பயனை உடல்நலத்தில் காட்டுகிறது என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மர்மென்ஸ் எனப்படும் ஒரு வகை மதப்பிரிவை சார்ந்தவர்களுக்கு இதய நோய்கள் குறைவு. 1830 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்மித் என்பவர் அமெரிக்காவில் நிறுவிய சபையினர் மர்மென்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தங்கள் மதக்கடமைகளை சரிவர கடைபிடிக்கின்றவர்கள். மர்மன்ஸின் புகையிலை பயன்பாடு கூடாது என்ற மதக்கட்டுப்பாடையும் இதய நோய்கள் குறைவையும் பல மருத்துவர்கள் தொடர்பு படுத்தியுள்ளனர். அத்தோடு அவர்களின் மாதத்திற்கு ஒரு நாள் உண்ணாநோன்பு இருப்பது போன்ற சுத்தமான நல்ல வாழ்க்கை பழக்கவழக்கங்கள் கூட அதற்கு காரணமாகிறது என புதிய ஆராய்ச்சியி்ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மர்மென்ஸ் பிரிவினர் அமெரிக்காவில் உள்ள யூட்டா மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் நகரத்தில் தங்கள் தலைமையகத்தை கொண்டுள்ளனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் மாதத்திற்கு ஒரு நாள் நோன்பு இருந்தவர்களில் 40 விழுக்காட்டினர் தமனி அடைப்பு எனப்படும் இரத்தக் குழாய் அடைப்பு நோயால் பாதிக்கப்படாதது தெரியவந்துள்ளது.  இத்தகைய சிறப்பு, மர்மென்ஸ் பிரிவினர்களுக்கு உண்ணா நோன்பால் ஏற்பட்டது என்றால் அப்பிரிவில் சேராத ஆனால் வழக்கமாக உணவை தவிர்த்து உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் மக்கள் மத்தியில் இத்தகைய நலன் ஏற்பட வாய்ப்பு இருக்குமா என அறிவியலாளர்கள் அறிய முயன்றனர். விளைவு, மர்மென்ஸ் அல்லாத, வழக்கமாக உணவை தவிர்க்கும் வழக்கம் கொண்டவர்களும் இரத்தக்குழாய் அடைப்பால் குறைந்த அளவில் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். குறிப்பிட்ட கால உண்ணாநோன்பு என்பது அனைவருக்கும் நல்லது என்றாலும் அதனால் ஏற்படக்கூடிய பயன்கள் பற்றிய விபரங்கள் இன்னும் ஆராயப்பட வேண்டும் என்று இந்த அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.


"இவ்வாறு உண்ணாநோன்பு இருப்பவர்கள் தங்கள் உணவு பழக்கத்தை பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தியவர்கள். இவ்வகை கட்டுப்பாடு வாழ்க்கையின் பிறநிலைகளுக்கும் பரவி உடல் நலத்தை மேம்படுத்துகிறது" என்று யூட்டா சால்ட் லேக் நகர இன்டர்மெவுண்டேன் மருத்துவ மையத்தின் இதய நோய் ஆய்வாளர் பென்ஜமின் ஹார்னே கூறினார். இவர் நடத்திய ஆய்வில் 70 விழுக்காட்டினர் யூட்டா மாநிலத்தில் வாழுகின்ற மர்மென்ஸ் பிரிவனர் ஆவர். இவர்களின் மதக்கேட்டுப்பாடு  மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநோன்பு இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது.
1994 முதல் 2002 ஆம் ஆண்டு வரையான இண்டர்மெவுண்டன் சுகாதார பதிவேட்டிலுள்ள இதய இரத்தக்குழாய் அடைப்புக்கு எக்ஸ்ரே எனப்படும் ஊடுகதிர் சோதனை செய்தவர்களின் மருத்தவ பதிவேடுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இதில் 4,629 பேர் இதய நோய் கொண்டுள்ளவராக அல்லது நோய்யற்றவர்களாக கண்டறியப்பட்டது. அதில் 70 விழுக்காட்டினர் இரத்தக் குழாய் அடைப்பு பெற்றிருந்தனர். மர்மென்ஸ் அல்லாதவர்களில் 66 விழுக்காட்டடினர் பெற்றிருக்க, மர்மென்ஸ் பிரிவினரில் 61 விழுக்காட்டினரே இதய நோய் பெற்றிருந்தனர். இந்த வித்தியாசம் புகையிலை பயன்படுத்தாததால் ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் எண்ணினர். எனவே புகையிலை பயன்பாட்டை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது இந்நோய் முன்பைவிட மிக குறைவான விகிதமே அப்பிரிவினரிடம் இருந்ததை கண்டுபிடித்தனர். ஒரு குறிப்பட்ட மதப்பிரிவினரிடையே இத்தகைய தன்மை இருப்பதை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய முற்பட்டனர். அப்போது தான் மர்மென்ஸ் பிரிவினரின் மதப்பழக்க வழக்கங்கள் கவனிக்கப்பட்டன. மாதத்திற்கு முதல் ஞாயிறு உண்ணாதிருத்தல், தேனீர், காஃபி மற்றும் மது வகைகளை எப்போதும் தவிர்த்தல், வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு, கோவிலுக்கு செல்வது, ஏழைகளுக்காக நேரம் அல்லது பண உதவி அளித்தல் ஆகியவை அவர்களின் வாழ்க்கைமுறையாக இருந்தது.


மொத்தம் 515 பேரிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளின் படி உண்ணாநோன்பு தான் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தில் முக்கிய வித்தியாசத்தை காட்டியது. உணவை தவிர்த்தவர்களில் 59 விழுக்காட்டினரும், பிறரில் 67 விழுக்காட்டினரும் இதய நோய்க்கு ஆளாகியிருந்தமை குறிப்பிடதக்கது. எடை, வயது மற்றும் நீரிழிவு, உயர் இரத்தக் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்ட பிறகுகூட இந்த வித்தியாசம் நிலைத்திருந்தது. ஆய்வு செய்யப்பட்டவர்களில் 8 விழுக்காட்டினர் மர்மென்ஸ் பிரிவை சாராதவர்கள். அவர்களிலும் உண்ணா நோன்பு இருந்தவர்களில் இதய நோய் கொண்டவர்கள் குறைவாகவே இருந்தனர்.
"மக்கள் உணவிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ளும் போது ஏற்கெனவே சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு சத்துக்கள் கலோரி ஆற்றல்களாக பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு உடல் எப்போதும் சர்க்கரை சத்துக்கு திறந்திருப்பதை கட்டுப்படுத்தி, இன்சுலின் சுரப்பிகளை செயல்பட தூண்டுகிறது. நிரிழிவு நோய் ஏற்படும்போது இன்சுலின் சுரப்பிகளின் செயல்பாடுகள் குறைகின்றன. உண்ணாநோன்பு இன்சுலின் சுரப்பிகளுக்கு ஓய்வு கொடுப்பதோடு, அவற்றை மீள்உணர்வு பெறச்செய்து, நல்ல முறையில் இயங்க செய்கிறது" என்று ஹார்னே தெரிவித்தார்.
ஆனால் நிரிழிவு நோய் கொண்டவர்கள் உணவை தவிப்பதது நல்லதல்ல. அது இரத்த சர்க்கரை நோய்க்கு வழி செய்யும் என்று ஹார்னேயும் இதர மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர். அப்படியானால் உணவுக்கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் உண்ணாநோன்பு இருப்பது நல்லதா? என எண்ண தோன்றுகிறது அல்லவா? "அவர்களுக்கும் அனைவரும் எண்ணுவதுபோல் நல்லதல்ல. உண்ணாநோன்பு வளர்சிதைமாற்றம் என்ற உயிரணுக்களிலான ஆற்றல் செலவின் வேகத்தை மாற்றியமைக்கிறது. உடலில் உணவு குறைவாக இருக்கும்போது இந்த குறையை சமாளிக்க மெதுவாக இயங்குகிறது. ஆனால் உண்ணாமல் இருந்து மீண்டும் உணவு உட்கொள்ளும்போது, உடனுக்குடன் கலோரியை சேமிக்கவென வேகவேகமாய் இயங்க உடலை உந்துகிறது என்று அமெரிக்க இதய சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர் ரெய்மண்ட் கிபோன்ஸ் கூறினார்.
உண்ணாநோன்பில் மூன்று வகைகளை காணலாம். முதலாவதாக முட்டை, இறைச்சி போன்ற குறிப்பிட்ட உணவு வகைகளை உண்ணாமல் இருப்பது. இதனை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். உணவு வகைகள் எதையும் சாப்பிடாமல் நீர் மட்டுமே அருந்துவது அடுத்த வகை. இதை நிரிழிவு நோயாளிகள் கடைபிடிப்பது ஆபத்தானது. மற்றவர்களும் அதிக காலம் தொடர்ச்சியாக இதை கடைபிடித்தால் ஆபத்து தான். உணவு வகைகள் மட்டுமல்ல நீர் அருந்தாமலும் இருப்பது மூன்றாவது வகை. இது அனைவருக்குமே ஆபத்தானது. மிக குறுகிய காலம் என்றால் ஆரோக்கியமானவர்கள் முயற்சி செய்யலாம்.

நாம் ஆரோக்கியமானவர்கள் என அறிய உண்ணாநோன்பு இருந்து தான் அறிய வேண்டும் என இல்லையே. நாம் சீரான உடல் நலம் கொண்டவர்கள் என்றால் குறிப்பிட்ட இடைவெளிகளில் இரண்டாவது வகை உண்ணாநோன்பு என்பது நமது உடல் நலத்தை மேம்படுத்தலாம். முடியவில்லையா? கவலை வேண்டாம். நம்மால் முடிகின்ற செயல்பாடுகள் பல உள்ளன. அவற்றை இயன்றவரை சிறப்பாக செய்ய முயற்சிப்போம்.