• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-21 16:53:56    
குணம்பெறும் திறன்

cri

ஒருவருக்கு சளி பிடித்துவிட்டால் அது குணமாக மருந்து எடுத்துக்கொண்டால் ஏழு நாட்கள் என்றும் மருந்து எடுக்காவிட்டால் ஒரு வாரமாகும் என்றும் சொல்லுவதுண்டு. சிலர் குறைந்த அளவிலான காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதில்லை. இன்னும் பலர் காயங்கள் ஏற்படும்போது அதற்கு மருந்துகள் போடுவதில்லை. நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புசக்தி இவற்றை தன்னிச்சையாகவே குணமாக்கும் ஆற்றலுடையது என்று அவர்கள் விளக்கம் தருவர். ஆனால் மிக முக்கிய பகுதிகளிலான நோய்களுக்கு யாரும் இத்தகைய முறையை கையாளுவதில்லை. இதயம், மூளை மற்றும் முதுகொலும்பிலான தண்டுவடம் ஆகியவற்றிலான எவ்வித நலக்குறைவுகளும் மிக சிக்கலானதாக எண்ணப்படுகின்றன. ஆனால் தண்டுவடத்தில் ஏற்படும் சிதைவால் அல்லது காயத்தால் தொடர்பற்று போகின்ற மூளை அனுப்பும் செய்தி தொடர்புகள் சிறு நரம்பு இழைகளால் தன்னிச்சையாகவே குணமாக்கப்படுகின்ற திறன் நமது உடலில் உள்ளது என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளது மருத்துவத் துறையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்னலாம்.


மனதில் நினைக்கப்பட்ட ஒரு செயல் நிறைவேற்றப்பட மூளை உடல் உறுப்புகளுக்கு கட்டளையிடுகிறது. இந்த கட்டளை செய்திகள் நரம்பு மண்டலம் மூலம் உடல் உறுப்புகளுக்கு அனுப்பப்படுகிறது. கட்டளைகளை எடுத்துச் செல்லும் நீளமான நரம்பு இழைகள் மற்றும் சிறு நரம்பு இழைகள் நமது இயங்குதிறனில் மிக முக்கிய பங்கு ஆற்றுபவை. குறிப்பாக தண்டுவடப்பகுதியில் அதிக அளவிலான இத்தகைய முக்கிய நரம்பு இழைகள் அமைந்துள்ளன. தண்டுவடத்தில் ஏதாவது சிதைவு ஏற்பட்டுவிட்டால் அது நரம்பு இழைகளை பாதிப்படைய செய்வதோடு நமது இயற்குதிறனிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

இவ்வாறு தண்டுவடத்தின் மேலும் கீழுமாக அமைந்துள்ள நரம்புகள் திரும்பபெற முடியாத அளவு முடமாகி போகின்ற காயங்களை கூட கடந்து இயங்க கூடியவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய நரம்பு மண்டலம், மூளைக்கும் நமது இயக்கங்களை கட்டுபடுத்தும் நரம்பு இழைகள் உயிரணுக்களுக்கும் இடையில் சிறிய நரம்பு வழிப்பாதைகளை உருவாக்கி தடைப்பட்ட செய்தித்தொடர்புகளை தானாகவே மாற்றியமைக்கும் திறன் கொண்டது என தெரிய வந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கல்போர்னியா பல்கலைக்கழகத்தில் சோதனை எலிகளின் மீது நடத்தப்பட்ட முடிவுகள் இதனை முதல் முறையாக எடுத்துக்காட்டியுள்ளது.
திகைப்புட்டக்கூடிய இந்த கண்டுபிடிப்பு சிதைவுற்ற தண்டுவடத்திற்கு புதிய சிகிச்சை முறைகளுக்கான பாதைகளை திறப்பதோடு, வலிப்பு மற்றும் பலவித நரம்புதசை நோய்களின் காரணத்தையும் அறிய செய்யும். மூளை நடப்பது அல்லது ஓடுவது ஆகியவற்றை கட்டுபடுத்தும் செய்திகளை நீளமான நரம்பு இழைகள் மூலம் அனுப்புகிறது. சாலை அல்லது விளையாட்டு விபத்தில் இந்த நீளமான நரம்பு இழைகள் நசுக்கப்பட்டால் அல்லது காயப்படுத்தப்பட்டால் செய்தி தொடர்புகளுக்கான பாதை தடைபடுகிறது. விளைவு இயக்கம் குறைகிறது அல்லது முடம் ஏற்படுகிறது.
பிறப்பிலேயே மூளை அமைக்கப்பட்டுள்ளது என்றும் சிதைவை அல்லது காயத்தை ஏற்கும் திறன் அதற்கு கிடையாது என்றும் இதுவரை எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் மூளை காயங்களுக்கு தக்க பதிலளித்து தன்து வழிமுறைகளை மாற்றி அமைத்து கொள்ளும் சிறந்த திறன் கொண்டது என இந்த புதிய கண்டுபிடிப்பு எண்பித்துள்ளது என்று இவ்வாய்வை நடத்திய நரம்பியல் நிபுணர் மைக்கிள் சொஃரோனைவ் AFP செய்தியில் தெரிவித்துள்ளார். இதனை விளக்குவதற்காக மூளையிலிருந்து தண்டுவடத்தின் கீழ்ப்பகுதி வரை இருக்கக்கூடிய நீளமான நரம்பு இழைகளையும் அதனோடு அதே வேலையில் உதவி செய்கின்ற சிறு நரம்பு இழைகளையும் ஒப்பிட்டு கூறியுள்ளார்.
நெடுஞ்சாலைகளில் விபத்து அல்லது வாகன நெரிசல் ஏற்பட்டுவிட்டால் அதிக நேரம் காத்திருப்பதற்கு பதிலாக வாகன ஓட்டுனர்கள் சுற்று அல்லது மாற்றுப்பாதைகளில் புகுந்து கடந்து செல்வதுண்டு. இத்தகையப் பாதைகள் நேரான நெடுஞ்சாலையில் பயணம் செய்வதைவட சிறிது அதிக நேரம் எடுத்தாலும் ஓட்டுனர்கள் சென்று சேர வேண்டிய இடங்களை அடைய உதவுகிறது. அதைபோல தண்டுவடம் என்பது நமது உடலிலான நெடுஞ்சாலை. அதில் ஏதாவது சிதைவு ஏற்பட்டுவிட்டால் இவ்வாறு மேலும் கீழுமாக செல்லக்கூடிய சிறு நரம்பு இழைகள் மாற்றுப்பாதைகளை அமைக்கின்றன. இந்த மாற்றுப்பாதைகள் மூளை அனுப்புகின்ற செய்திகளை முறையாக பெற செய்வதோடு முடமாவதை தடுத்து நம்மை இயங்க செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவைகளை சோதனை எலிகள் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சோதனை எலிகளின் தண்டுவடங்களின் இரு பக்கங்களிலுமுள்ள நீளமான நரம்பு இழைகளை வேறுப்பட்ட நேரங்களில், வேறுப்பட்ட இடங்களில் தடுத்தனர். இதனால் எலிகளின் பின்னங்கால்களை முடக்கினர். சிறிய நரம்பு இழைகளை கொண்டுள்ள தண்டுவடத்தின் முக்கிய சாரமானப் பகுதியை தொடாமல் விட்டுவிட்டனர். ஆச்சரியப்படுபடியாக அனைத்து எலிகளும் தங்கள் கால்களின் இயக்க கட்டுப்பாட்டை எட்டு வாரங்களில் திரும்ப பெற்றன. ஆனால் முன்பை விட சற்றுகுறைவான இயக்கத்தையே அவை கொண்டிருந்தன. ஆய்வாளர்கள் சிறு நரம்பு இழைகளையும் தடுத்தபோது எலிகள் மீண்டும் முடமாயின. இவ்வாறு மீண்டும் முடமாகிய நிலை சிறு நரம்பு இழைகளால் உருவாக்கப்பட்ட மாற்றுப்பாதை தொடர்புதான் அவைகளை முன்பு குணமாக்கியது என்பதை உறுதி செய்தது.
தண்டுவடத்தில் ஏற்படும் காயங்கள் தன்னிச்சையாக குணமடைய உதவும் நரம்பு இழைகளின் செயல்பாட்டை முன்னேற்றுவதோடு அதனை துரிதப்படுத்துவது மருத்துவத் துறை பெற்றுள்ள அறைகூவலாகும். காயமுற்ற நோயாளிகளை மீண்டும் நடக்க செய்வதற்கு சிதைந்த அல்லது காயமுற்ற நீளமான நரம்புகளை குணப்படுத்தி வளர்த்தெடுப்பது தான் ஒரே வழி என்று இதுவரை பல நிபுணர்கள் எண்ணினர். ஆனால் குறுகியக் காலத்தில் அத்தகைய முக்கிய நரம்பு இழைப் பாதையை மீளுணர்வு பெறச்செய்வது மிகவும் கடினம். இத்தகைய எண்ணங்கள் இப்புதிய கண்டுபிடிப்பால் மாற்றப்பட்டுள்ளது. சரியான மறுவாழ்வு மற்றும் பயிற்சிகள் மூலம் எப்படி சிறிய நரம்பு இழைகள் குணப்படுத்தக்கூடிய வழிமுறைகளை மேம்படுத்துவதும் அதற்கு ஏதாவது ஊக்கமருந்துகளின் உதவி தேவைப்படுகிறதா என முடிவு செய்வதும் அடுத்த இலக்காகும் என சொஃபர்னைவ் தெரிவித்தார்.
தண்டுவட சிதைவு பிரச்சனை என்பது நமக்கில்லையே ஏன் நாம் கவலைப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? உலக அளவில் தண்டுவடப் பகுதியில் ஏற்படும் சிதைவு முக்கியமான பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. நோயியல் புள்ளிவிபர ஆய்வுகள்படி, ஆண்டுக்கு 10,000 புதிய நோயாளிகளோடு 25 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் தண்டுவடத்திலான சிதைவால் துன்புறுகின்றனர். உலக அளவில் மில்லியனுக்கு 15 லிருந்து 40 புதிய நோயாளிகள் ஓர் ஆண்டில் உருவாகின்றனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் தகவல்களாக இருந்தாலும் கவனம் காட்ட வேண்டியதாகவும் தேன்றுகிறதல்லவா.
தண்டுவட பிரச்சனை ஏற்பட்டதென்றால் தன்னிச்சையாக சிறு நரம்பு இழைகள் அதனை குணப்படுத்தும் என பாராமுகமாய் இருந்து விடாதீர்கள். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ துறைக்கு அதிக சவால்களை கொடுத்து நாம் நலம் பெறும் கால அளவை குறைப்பதை ஏதுவாக்கும். இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் நாம் முடமாகி போவோம் என்ற எதிர்மறையான நம்பிக்கைகளை தகர்த்து மறுவாழ்வு பெறக்கூடிய ஆழமான நம்பிக்கைகளை ஏற்படுத்த முடியும். உலக அளவில் வளர்ந்துவரும் தண்டுவட சிதைவு பிரச்சனைக்கு இத்தகைய புதுகண்டுபிடிப்புகள் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை வழங்கும் என்பதில் ஐயமில்லை.