நீடு வாழ் நகரம் நீண்ட நாள் வாழவேண்டும் என்பது நம்மில் பலரது ஆசையாகும். ஒருவரை வாழ்த்தும்போது கூட "நீடூழி வாழ்க" என்றுதான் நாம் வாழ்த்துகிறோம். உண்மையில் இந்த நீடூழி வாழ்தல் என்பதற்கு வரையறை ஏதும் யாரும் வகுத்ததில்லை. சராசரியாக 80 வயதை தாண்டினேலே பழுத்த பழம் என்று நாம் கருதுகிறோம். பொதுவான கருத்து இப்படியிருக்க சீனாவின் ஒரு சிறிய நகரில் 100 வயதை தாண்டியவர்களின் எண்ணிக்கை 248 என்று கேட்கும்போது கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. அண்மையில் மேலும் மூவர் 100 வயதை கடந்ததால் இந்த எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளதாம். கிழக்கு சீனாவிலுள்ள ரூகாவ் என்ற நகரில்தான் இந்த 100 வயதை தாண்டிய முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நகரின் மொத்த மக்கள் தொகை சுமார் 14 இலட்சத்து 50 ஆயிரம். அதாவது இலட்சத்தில் 17 பேர் 100 வயதை தாண்டியவர்கள். சர்வதேச இயற்கை மருத்துவ சங்கத்தின் வரையறையின் படி சராசரியாக இலட்சத்தில் 7 பேர் 100 வயதை தாண்டியவர்களாக இருப்பது வழமை. ரூகாவில் இந்த சராசரியளவை விட இரண்டு மடங்குக்கு மேற்பட்டோர் சதமடித்துள்ளனர். ரூகாவில் இந்த சதமடித்த வயதினர் மட்டும்தான் அதிகமா என்றால் இல்லை. 95 வயதை கடந்தவர்கள் 2097 பேர், 90 வயதை கடந்தவர்கள் 5800, 80 வயதுக்கு மேற்பட்டோர் 49 ஆயிரம். ஆக இந்த நகரம் நீடூ வாழ் நகரம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.

பருவங்களே பெயராய் பெயர் வைப்பதில்தான் எத்தனை விதமான அணுகுமுறைகள். தாத்தா பாட்டி இருவரது பெயரின் முதல் எழுத்தை வைத்து பெயர், குழந்தை பிறந்த நேரத்தின் அடிப்படையில் முதல் எழுத்தை நிர்ணயித்து அதில் தமக்கு பிடித்த தலைவர்கள், திரை நட்சத்திரங்களின் பெயர், மொழிப்பற்றால் உருவான இலக்கிய நயம் கொண்ட பெயர் எப்படி பல வழிகள். சூட்டப்படும் பெயரை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறோம், குடும்பப்பெயர்கள் வேறு விதம். அவற்றின் ஆதி அந்தத்தை அறிய பண்பாட்டு ரீதியான ஆய்வுகள் அவசியம். இருப்பினும் சீனாவில் பயன்பாட்டிலுள்ள குடும்பப்பெயர்களிலிருந்து இதோ ஒரு சுவையான தகவல் உங்களுக்காக. சீனாவில் பருவகாலங்களை தங்களது குடும்பப்பெயராக கொண்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்துக்கும் மேல். சியா என்ற பெயரை குடும்பப்பெயராகக் கொண்டவர்கள் 42 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல். சியா என்பது கோடை என்று பொருள்படும். சியா – கோடை, ச்சுன் – வசந்தம், ச்சியு - இலையுதிர்காலம், துங் – குளிர்காலம் ஆகிய நான்கு பருவகாலங்களில் சியா என்பதே பரவலாக பயன்படுத்தப்படும் குடும்பப்பெயராக காணப்படுகிறது. ஜியாங்சு மாநிலத்தில் நான்கரை இலட்சம் பேர் சியா என்ற குடும்பபெயரை கொண்டுள்ளனர். இது தவிர ஆன்ஹுய், ஹூபெய், ஹூனான், சிச்சுவான், சேஜியாங், ஹேனான் ஆகிய மாநிலங்களிலும் சியா என்ற குடும்பப்பெயர் கொண்டவர்கள் அதிகம். சீனப் பெருநிலப்பகுதியில் 28 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ச்சுன் அதாவது வசந்தகாலம் என்பதை குடும்பப்பெயராக கொண்டுள்ளனர். 15 ஆயிரம் பேர் துங் அதாவது குளிர்காலம் என்பதை குடும்பப்பெயராகக் கொண்டுள்ளனர். 20 ஆயிரம் பேர் ச்சியு அதாவது இலையுதிர்காலம் என்பதை குடும்பப்பெயராகக் கொண்டுள்ளனர்.

குறிஞ்சிப்பூ போல் பனை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்குமாம் குறிஞ்சி மலர். அது குறிஞ்சி மலரின் இயல்பு. பனை மரம் எப்படி. பொதுவாக ஆண்டுதோறும் பூக்கும் அல்லவா. மாடகாஸ்கரிலுள்ள ஒரு புதுவகை பனை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கிறதாம். நுங்கு சாப்பிடவோ, பனங்கள்ளு, பதனீர் பருகவோ, பனைவெல்லம் சாப்பிடவோ இந்த வகை பனையை நம்பினால், முந்தய செய்தியில் சொன்ன ரூகாவோ நகர சதமடித்த முதியவர்களை போல் வாழ்ந்தால்தான் உண்டு. வேடிக்கையாக நாம் இதைச் சொன்னாலும், உண்மை இதுதான். பூக்காத வகை பனைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றோடு இந்த 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பனையை இணைத்து குழப்பிக்கொள்ளக்கூடாது. குழப்பாமல் இருக்க அது பூப்பதை பார்த்தால்தான் உண்டு, இல்லையெனில் உண்மை நமக்கு விளங்காது. ஆனால் இது பூக்கும்போது குருத்து நீண்டதாக பெரிதாக வளர்ந்து, பூக்கள் கொத்தாக மலர்ந்து தேன் சொட்டும் அழகே தனி. அழகாக பூத்து, பூ காயாகி கனிந்த சில மாதங்களில் இந்த பனை பட்டுப்போகும், அதாவது இறந்துபோகுமாம். தற்போது இவ்வகை பனை மரங்கள் ஏறக்குறைய 100 மட்டுமே மடகாஸ்கரில் இருப்பதாக அறியப்படுகிறது.

புகைப்பழக்கத்தால் வேலையிழந்தோர். தலைப்பை கேட்டதும், பணியிடத்தில் புகை பிடிக்ககூடாது என்ற விதியை மீறியதால் யாரோ தங்களது வேலையை இழந்துவிட்டனர் என்றுதானே நினைத்தீர்கள். ஆனால் செய்தி இதற்கு நேர் மாறானது. ஒரு நிறுவனத்தில் புகை பிடிக்காத காரணத்தால் மூன்று பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர். வேடிக்கையாக இருக்கிறது அல்லவா. ஆனால் இது ஜெர்மனியில் கணினி நிறுவனமொன்றில் உண்மையில் நடந்த ஒரு சம்பவமாகும். 10 பேர் மட்டுமே கொண்ட இந்த கணினி நிறுவனத்தில் அண்மையில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட மூவரை தவிர மற்றவர்கள் புகை பிடிக்கும் பழக்கமுள்ளவர்கள். புகையில்லா சூழல் வேண்டும் என்று புகை பழக்கமில்லாத இந்த மூன்று பேரும் கோரியுள்ளனர். இந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் மேலாளர் இந்த மூன்று பேரையும் வேலையை விட்டு அனுப்பிவிட்டார். தொல்லை தருபவர்களை வைத்துக்கொண்டு இங்கே வேலை செய்யமுடியாது. எப்போதும் பரபரப்பாக தொலைபேசியில் மூழ்கியிருக்கும் பணிச்சூழலில் நாங்கள் புகைபிடிப்பது வழமை. புகை பிடிப்பதால் வேலை செய்வது கொஞ்சம் ஆறுதலாக இருப்பதாக உணர்கிறோம் என்று கூறுகிறார் இந்நிறுவனத்தின் மேலாளர். புகைபழக்கமுள்ளவர்களை குற்றம் கூறி பழிப்பதே எல்லோருக்கும் ஒரு இயல்பாகிவிட்டது. இனி பழிவாங்கும் காலம். எனவே இனி புகைபழக்கமுள்ளவர்களுக்கு மட்டும்தான் எங்கள் நிறுவனத்தில் வேலை என்கிறார் புகைசூழ்ந்த புண்ணியவான்.
|