க்ளீட்டஸ்: இன்றைய நிகழ்ச்சியின் முதல் கடிதம், ராசிபுரம் எஸ். சுப்பு மணிகண்டன் எழுதியது. மக்கள் சீனம் நிகழ்ச்சியில் பல முன்னணி தொழில் நிறுவனக்கள் கலந்துகொண்டு நடத்திய கூட்டம் பற்றி கேட்டேன். சீன மையப்பகுதியின் வளர்ச்சி சிறப்பாக வளர்ந்து வருகிறது என்பதை அன்றைய நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.
கலை: அடுத்து மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி, பாத்திக்காரன்பட்டி எஸ். எஸ். ராஜன் எழுதிய கடிதம். மலர்ச்சோலையில் மலர்ந்த மலர்களில் உலகில் அதிக மதிப்பு கொண்ட உடையாக, விண்வெளி வீரர்கள் அணியும் உடை 90 லட்சம் ரூபாய் என்று அறிந்து வியப்படைந்தேன். மேலும் மகளிர் அதிகமாக சம்பளம் பெறுவது பற்றியும் அவர்களது கல்வித்தரமும் உயர்வது பற்றியும் அறிந்துகொண்டேன்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து காத்தான்குடி எம். எம். எம். அசீம் எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்பவர்களில் நானும் ஒருவன். சீன வரலாற்றுச் சுவடுகள், சீனாவில் இன்பப் பயணம், மலர்ச்சோலை, இசை நிகழ்ச்சி இவையெல்லாம் நான் விரும்பி கேட்கும் நிகழ்ச்சிகளாகும். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை நான் தவறாமல் தொடர்ந்து கேட்பேன்.
கலை: அடுத்து விழுப்புரம் எஸ். பாண்டியராஜன் விளையாட்டுச் செய்திகள் குறித்து எழுதிய கடிதம். 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தன்னார்வத் தொண்டர்கள் சேர்ப்புப் பணி தொடங்கியது பற்றி கேட்டேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். பெய்சிங்கில் நடைபெற்ற 4வது உலக மகளிர் மாநாட்டில் இதுபோன்ற தன்னார்வத் தொண்டர்களின் சேவை மக்த்தானதாக இருந்தது. அந்த மகளிர் மாநட்டில் பங்கேற்ற 3 தமிழக மகளிரை நாங்கள் பேட்டி கண்டபோது, சீனத் தன்னார்வத் தொண்டர்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட்டு தங்களது வியப்பை வெளிப்படுத்தினர். அத்தகைய தன்னார்வத் தொண்டர்கள் 2008 பெய்சிங் ஒலிம்பிக்கில் சீனாவின் உபசரிப்பையும், பண்பாட்டையும் உலகறியச் செய்வார்கள். மீண்டும் என் வாழ்த்துக்கள் அவர்களுக்கு.
க்ளீட்டஸ்: தொடர்ந்து காத்தான்குடி நேயர் ஆ. லெ. பா. சபீலா எழுதிய கடிதம். ஒவ்வொரு நாளும் புதுமைகளைக் கைக்கொண்டு எங்களை வந்தடைந்து புதுப்புது தகவல்களை அமக்களித்து சிந்தனைக்கு எட்டதிருந்த பல விடயங்களை அறியத் தருகின்றமைக்கு நன்றிகள். சீனத் தேசம் சென்றாயினும் சீர் கல்வியைக் கற்றுக்கொள் என்று சொல்வார்கள். தங்கள் வானொலிச் சேவையின் மூலம் சீன மொழியைக் கற்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மூலம் புத்தகம் அனுப்பியமைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.
கலை: அடுத்து அறிவியல், கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி நீலகிரி கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். ஒலிம்பிக்கில் நவீன தொழில்நுட்பம் என்பது பற்றிய கட்டுரையைக் கேட்டேன். 2008ம் ஆண்டு பெய்சிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவது, நவீன தொழில்நுட்பத்தை கையாள்வது, இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இல்லாத அளவுக்கு அமையும் என்று ஒலிம்பிக் தொழில்நுட்பக்கமிட்டியில் தீர்மானிக்கப்பட்டதை அறிந்தோம். இணையதளம், செல்லிடபேசி இவற்றின் மூலம் போட்டிகளின் முடிவுகளை அறிய முடியும். இந்த ஒல்ம்பிக்கில் மேலும் அரிய தகவல்களையும், தொழில்நுட்பங்களையும் அனைத்து நாடுகளும், வீரர்களும் எதிர்பார்க்கின்றனர் என்பது உண்மையே.
க்ளீட்டஸ்: அடுத்து திருநெல்வேலி எஸ். பொருநை பாலு எழுதிய கடிதம். சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் காற்றாடி என்று அழைக்கப்படும் பட்டம் பற்றிய தொகுப்பை கேட்டேன். சீனாவில் காற்றாடிகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன, என்ன வண்ணங்கள், காற்றாடிகளின் அளவு ஆகியவை பற்றிய தகவல்கள் கேட்டேன். மகிழ்ச்சி. தொடர்ந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஈரோடு நேயர் ராகம் பழனியப்பன் கூறிய கருத்துக்கள் மிக நன்றாக இருந்தன.
கலை: அடுத்து இலங்கை சாய்ந்த மருது நேயர் எம். எச். எம். சியாத் எழுதிய கடிதம். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த தமிழ் மூலம் சீனம் புத்தகம் கிடைத்தது, நன்றிகள். நேயர் நேரம் நிகழ்ச்சி மற்றும் நேயர் கடிதம் நிகழ்ச்சியின் மூலம் நேயர்களாகிய எங்களது கடிதங்கள் உங்களை வந்து சேர்ந்தனவா என்பது பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. எனக்கு நேயர் நேரம், தமிழ் மூலம் சீனம், செய்திகள், செய்தித்தொகுப்பு, நேயர் விருப்பம் ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் பிடித்துள்ளன.
க்ளீட்டஸ்: தொடர்ந்து கம்பம் ஏ, இருதயராஜ் எழுதிய கடிதம். சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியில் 1953ம் ஆண்டும் மே திங்கள் 9ம் நாள் சீன இஸ்லாமிய கழகம் உருவாக்கப்பட்டது என்று அறிந்துகொண்டேன். சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியில் வரும் தகவல்களை புத்தகமாக வெளியிடவேன்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் கேட்கவேண்டிய பயனுள்ள நிகழ்ச்சி, சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியாகும்.
|