

ஆலய வளவில் காணும் கட்டிடங்களில் சுன் யட் ஸன் நினைவாலயம் ஒன்றாகும். 1911 புரட்சியில் சிங் வம்சத்தைக் கவிழ்த்த தலைவர் முனைவர் சுன் யட் ஸன்னின் அரை உருவச்சிலை, அதன் நடுவே உள்ளது. அவரது இலக்கிய படைப்புகளும் கையெழுத்து பிரதிகளும் கண்ணாடிப் பேழையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவரது வாழ்வையும் புரட்சி நடவடிக்கைகளையும் பற்றிய நிழற்படங்களுக்கும் பிறவற்றுக்கும் இரண்டு கூடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நினைவாலயத்தின் பின்னேயுள்ள வைரச் சிங்காசனக் கோபுரத்தின் அடித்தளத்தில் சுன் யட் ஸன்னின் சமாதி இருந்தது. பின்னர், அவரது சவப்பேழை நான்சிங்குக்கு மாற்றப்பட்டதோடு, அவருடைய தொப்பியும் உடைகளுமே அங்கு புதைக்கப்பட்டன.


வைர அரியாசன பகோடா என்பது, உண்மையில் படித்தலத்தில் எழுப்பிய ஏழு கோபுரங்களின் ஒரு தொகுதியே ஆகும். அதன் கட்டுமானம் முழுவதும், வெள்ளைச் சலவைக் கல்லால் சீன-இந்திய கலப்புக் கட்டிடக் கலைப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. வனம் என்ற பசும் திரையில் வெண் பாசிமணி தோன்றுவது போல் விளங்கும் இந்த 35 மீட்டர் உயர கட்டிடங்கள் வெகு தொலைவில் வீதியில் வரும் பொழுதே கண்களில் தெரிகின்றன. பல்வேறு உருவச்சிலைகள் செதுக்கப்பட்ட அதன் அடித்தளம், ஆராயத்தக்கது.
|