நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்
cri
கலை: வணக்கம் நேயர்களே. உங்கள் எண்ணங்களின் வண்ணத்தொகுப்பாக வலம் வரும் நேயர் நேரம் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். க்ளீட்டஸ்: இன்றைய நிகழ்ச்சியில் முதலில் சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி எழுதிய கடிதம். அண்மையில் நேயர் நேரம் நிகழ்ச்சியை கேட்டேன். நிகழ்ச்சியில் தொலைபேசி, கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட நேயர் பலரது கருத்துக்கள் அருமையாக இருந்தன. குறிப்பாக நிகழ்ச்சியில் பல புதிய நேயர்களின் கருத்துக்கள் இடம்பெற்றமை, இளைய இரத்தம் பாய்ச்சப்பட்டு நிகழ்ச்சியை நேயர்கள் தொடர்ந்து கேட்டு, கடிதம் எழுதும் படி உற்சாகமூட்டும் வகையில் அமைந்தது. பாராட்டுக்கள். கலை: அடுத்து இலங்கை மட்டக்களப்பு ஏ. பி. எஸ். பாணு எழுதிய கடிதம். சீன வானொலி வெளியிடும் சீனத் தமிழொலி இதழ் சீனாவை பற்றிய தகவல்களை அறியத்தருகிறது. வானொலி மூலம் நிகழ்ச்சியை கேட்பதும், இந்த இதழ் மூலம் தகவல்களை படிப்பதும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் உங்களுடன் நெருக்கமாக தொடர்பு கொள்ளவேண்டுமென்ற ஆவல் அதிகரிக்கிறது.
க்ளீட்டஸ்: அடுத்து தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் எழுதிய கடிதம். பேருந்து மாறுவது, அங்காடி எங்கே என்று கேட்பது, இடது, வலது, முன்னே, பின்னே இவற்றை சீன மொழியில் எப்படி சொல்வது ஆகியவற்றை தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் அறிந்துகொண்டோம். புதிய பாடத்தில் வாத்துக்கறி உணவகம் எங்கு உள்ளது, அங்கே எப்படி செல்லவேண்டும் என்பதை சீன மொழியில் கேட்பது பற்றியும் தெரிந்துகொண்டோம். கலை: தொடர்ந்து திருநெல்வேலி கடையாலுருட்டி நேயர் எம். பிச்சைமணி எழுதிய கடிதம். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியின் மூலம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து சிறப்பாக அறிந்துகொள்ள முடிந்தது. சீனாவில் கிராமப்புறங்களிலான ஆசிரியர் நிலை பற்றியும் அதை மேம்படுத்த சீன அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்தேன். க்ளிட்டஸ்: அடுத்து காத்தான்குடி மு. ச. பா. நசீதா எழுதிய கடிதம். தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்து மகிழ்ச்சியடைந்தேன். நிகழ்ச்சிகளை தொடர்ந்து நானும் எனது குடும்பத்தினரும் கேட்டு வருகிறோம். மனதிற்கு இனிய நிகழ்ச்சிகளை கேட்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அறிவிப்பாளர்களின் குரல் கேட்டு மகிழும் நாங்கள் உங்கள் நிழற்படங்கள் இருந்தால் பார்த்தும் மகிழ்வோம். கலை: அடுத்து மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி, மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். வடகிழக்கு ஆசிய பிரதேச ஒத்துழைப்பு பற்றி மக்கள் சீனம் நிகழ்ச்சியில் கேட்டேன். ஏறத்தாழ ஒரு கோடியே 20 இலட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட சீனாவின் வடபகுதி, ரஷ்யா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் அமைந்திருக்கும் இப்பிரதேசம் வளர்ச்சி பெற இப்பொருட்காட்சி வாய்ப்பு வழங்கி வருவது கண்கூடு. பிரதேச நாடுகளின் வர்த்தக மதிப்பு ஆண்டுக்காண்டு அதிகரித்துவருவது பிரதேச நாடுகள் பரஸ்பரம் பயனடைவதற்கு நல்ல வாய்ப்பாகும். க்ளீட்டஸ்: தொடர்ந்து இலங்கை காங்கேயனோடை எம். எஃப். எம். ஃபர்ஹான் எழுதிய கடிதம். சீன வானொலியை தவறாமல் கேட்டு வருகிறேன். நிகழ்ச்சிகள் கேட்பதற்கு இனிமையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளன. என்னையும் தங்கள் வானொலியில் நேயராக இணைத்துக்கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேட்டு கடிதம் எழுதுவேன்.
கலை: அடுத்து நீலகிரி கீழ்குந்தா நேயர் கே.கே. போஜன் எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில் தென் துருவத்தில் ரோபோ எனும் இயந்திர மனிதனை பயன்படுத்துவது பற்றி கேட்டேன். பனியில் மனிதர்கள் இறங்கி செய்யமுடியாதவற்றை இந்த ரோபோவால் செய்யமுடியும். 40 கிலோ எடையை தூக்கவும், 100 கிலோ எடையை இழுக்கவும் கூடிய இந்த ரோபோ, மனிதன் நடமாட முடியாமல் ஆராயப்படாமல் கிடக்கும் இடங்களில் பயன்படுத்தப்படவுள்ளதை அறிந்தோம். இந்த ரோபாவால் பறக்கவும் முடியும் என்பது வியப்பான செய்தி. க்ளீட்டஸ்: அடுத்து கிணிகத்தேனை வி. துரைராஜா சின உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். உருளைக்கிழங்கு பொறியல் சமைப்பது பற்றி வாணி அவர்கள்வழங்கிய சமையல் குறிப்பு கேட்டேன். அவ்வாறே அதை செய்து நானும் என்னுடன் பணிபுரியும் நண்பர்களும் உண்டு மகிழ்ந்தோம். தாத்த உருளைக்கிழங்கு பொறியலின் சுவை மிகவும் அருமை.
திருப்பூர்,இரா.சின்னப்பன்: "நட்புப்பாலம்' நிகழ்ச்சியில், 5 ஆண்டு மேற்படிப்புக்காக சீனா வந்திருக்கும் மலேசிய மாணவி 'நித்யா' அவர்களுடன் கலையரசியின் பேட்டி சிறப்பாக இருந்தது. சீனாவில் தமது தாய்மொழியான தமிழில் பேச வாய்ப்பு கிடைத்ததில் 'நித்யா'மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என்பதை அறியமுடிந்தது. மேலும் ஆண்டுக்கு ஒருமுறை தனது சீனாவின் அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் அவருடன் பேட்டி கண்டால் சிறப்பாக இருக்கும். வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் ஜனவரித் திங்கள் 12 ஆம் நாள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற 'கேள்வியும் பதிலும்' நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இதழ் வடிவில் இவ்வாண்டு முதல் வெளியிடப்பட இருக்கும் 'சீனத் தமிழொலி' பற்றிய உரையாடலில் கலையரசி, தமிழன்பன் ஆகியோருடன் நானும் பங்கு கொண்டது மிகுந்த மனநிறைவை அளிப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் கேட்டு முடித்த பின்னர்,புதிய தமிழொலி இதழை பெறுவதன் மீதான நேயர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் என நினைக்கின்றேன். விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்…… 10.1.2008 அன்று அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி கேட்டேன். இதில் அறிவியல் செய்தியாக உண்ணா நோன்பு பற்றி தமிழன்பன் சிறப்பாக எடுத்துக் கூறினார். மதத்தில் உண்ணாநோன்பு அவசியம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று உண்ணாநோன்பு என்பது கேலிக்குரியதாக இருக்கிறது. உணவில் கட்டுப்பாடு இல்லையென்றால், உண்ண முடியாத நிலைதான் ஏற்படும். ஆனால் இது உண்ணாநோன்பு இல்லை. இது நோய். இன்று சீன வானொலியில் தமிழன்பன் வழங்கிய நிகழ்ச்சியைக் கேட்ட நேயர்கள் உணவில் கட்டுப்பாட்டை பின்பற்றி வளமுடன் நலமுடன் வாழ வேண்டுகிறேன். இன்றைய காலத்திற்கு தேவையான செய்திகள் வழங்கிய சீன வானொலிக்கு நன்றி, பாராட்டுக்கள். சென்னை யாழினி, சங்கீதா…… வணக்கம், இணையத்தைப் பயன்படுத்தும் நாங்கள், சீன வானொலி நிலையத்தின் கன்பிஃயூசியஸ் கழகம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டு, சீன வானொலி நிலையத்தால் தயாரிக்கப்பட்ட "சீன மொழி 900 வாக்கியங்கள்" எனும் பாடத்தை சோதனை முறையில் இணையத்தில் வழங்கியுள்ளதைக் கண்டோம். இது ஒரு அருமையான முயற்சி. இணையத்தில் பாடங்களை வெளியிடும் போது அதனை pdf வடிவத்திலும் வெளியிட்டால் நேயர்கள் பதிவிறக்கம் செய்துகொண்டு, வேண்டும் பொழுது படித்துக்கொள்வதோடு, நண்பர்களுக்கும் வழங்க வசதியாக இருக்கும். திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன் நலம் வாழ்க. பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி செவிமடுத்தேன். பல நேயர்களின் குரல் இடம்பெற்றது. இதனை வரவேற்கிறேன். நல்ல முயற்சி. எம்மைப் போன்ற பழைய நேயர்களின் குரல் இடம்பெறுவதைவிட புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதால், நமது தமிழ்ப்பிரிவில் அவர்களுக்கு மேலும் ஆர்வம் ஏற்பட்டு திறம்பட செயல்படுவர் என்பது உண்மை. மேலும் 14 ஆம் நாளன்று சிறப்பு நிக்ழ்ச்சி தயாரிப்பில் காணப்பட்டது கவனம் மறுநாள் 15 ஆம் நாளன்று இல்லை. கடமைக்கு ஒலியேற்றியது போல் இருந்தது. தமிழ்ப்பிரிவை உன்னிப்பாக கவனித்து வருபவன் என்பதால் இதனை எழுதுகிறேன்.
|
|