• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-27 12:01:52    
பட்டுப்புழுவாய் மாறிய குதிரை

cri
முன்பொரு காலத்தில் வாழ்ந்து வந்த ஒரு மனிதன், நெடுந்தூர பயணமாக, தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றான். வீட்டில் தனது ஒரே மகளை விட்டுவிட்டு, துணைக்கு ஒரு குதிரையை, அவளது பராமரிப்பில் விட்டுச்சென்றான் இந்த மனிதன். அந்த பெண் தனிமையில் மிகவும் கவலையும், வேதனையுமுற்றாள். தந்தையாரை காணும் ஆவல் அவளை அதிக சோகத்தில் ஆழ்த்தியது. ஒருநாள் அவள் தன் பாதுகாப்பில் தந்தை விட்டுச்சென்ற குதிரையிடம், "நீ என் தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தால், உன்னை நான் திருமணம் செய்துகொள்வேன்" என்று கூறினாள். இதைக் கேட்ட உடனே குதிரை தன் தளைகளை அகற்றி, துள்ளிக் குதித்து ஓடத்தொடங்கியது. நேரே அந்த பெண்ணின் தந்தை இருந்த இடத்தில் சென்று நின்றது அந்த குதிரை. குதிரையை கண்ட அந்த மனிதன், வியப்பும் அதேவேளை மகிழ்ச்சியும் மேலிட அதை தழுவிக்கொடுத்து அதன் மீது ஏறிக்கொண்டான். ஆனால் குதிரை வந்தது முதல் தொடர்ந்து சோகமாய் குரலெழுப்பிக் கொண்டிருந்ததையும், அது வந்த பாதையை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்ததையும் கண்டான். குதிரை இப்படி செய்ய ஏதாவது காரணம் இருக்கவேண்டும். ஒருவேளை வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ? என்று யோசித்த அந்த மனிதன், உடனே புறப்பட்டு வீடு நோக்கி அந்த குதிரையை செலுத்தினான். வீடு திரும்பியதும், குதிரையின் மதிநுட்பத்தை மெச்சிய அந்த மனிதன், அதை தொடர்ந்து நன்றாக கவனித்துக்கொண்டான். அதிகமாக தீனி கொடுத்து பாசத்துடன் அவன் கவனித்துக்கொண்டபோதும், குதிரை சரியாக சாப்பிட மறுத்தது. ஆனால் எப்போதெல்லம் அவனது மகள் கடந்து செல்வதை கண்டதோ அப்போதெல்லாம் குதிரை சிலிர்த்துக்கொண்டு, மகிழ்ச்சியடைவதை காட்டும். ஓரிரு முறைக்கு மேலாக இப்படி நடந்ததை கண்ட அந்த பெண்ணின் தந்தை காரணம் அறியாது குழம்பினான். பின் தன் மகளை இரகசியமாய் அழைத்து, என்ன நடந்தது என்பதை பற்றி விசாரித்தபோது. அவள் ஒருவேளை தான் வேடிக்கையாக சொன்னதைத்தான் குதிரை மனதில் வைத்துக்கொண்டு அவ்வாறெல்லாம் செய்கிறது போல் என்பதாக தந்தையிடம் கூறினாள்.
இதைக் கேட்ட அந்த மனிதன். வாயை மூடு, நீ உண்மையில் அப்படி செய்தால் நம் குடும்பத்துக்கு அவப்பெயரை கொண்டு வருவாய். நீ இனி வீட்டை விட்டு வெளியே வராதே என்று மகளிடம் கோபத்துடன் கூறினான். பின் வெளியே வந்து அந்த குதிரையை தன் வில்லைக்கொண்டு அம்பெய்தி கொன்றான். பின் அதன் தோலை உரித்து வீட்டு முற்றத்தில் மாட்டிவைத்தான்.
பின்னர் ஒரு முறை அவன் பயணமாய் வெளியே சென்றபோது, அவனது மகள் தன் தோழியுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். முற்றத்தில் தொங்கிய குதிரையின் தோலை கண்ட அந்த பெண். அற்ப விலங்கே, என்ன துணிச்சலிருந்தால் ஒரு பெண்ணை மணக்க நீ எண்ணியிருப்பாய். அம்பெய்தி கொன்று தோலுரிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளாய். எல்லாம் நீயே தேடிக்கொண்டது" என்றாள்.
அந்த பெண் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கையில் குதிரையின் தோல் பின்னால் மேலெழும்பி, அவளை போர்த்திக்கொண்டு, புறப்பட்டது. அவளோடு விளையாடிக்கொண்டிருந்த அவளது அண்டை வீட்டுத் தோழி, இதையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கி, விக்கித்து நின்றாள். தன் தோழியை காப்பாற்றத் தோணாமல் நேரே தன் தந்தையிடம் சென்று நடந்ததை கூறினாள். இருவரும் வந்து பார்த்தபோது, குதிரைத்தோலும் இல்லை, அந்தப் பெண்ணும் இல்லை. பின் சில நாட்கள் கழித்து குதிரையும். அந்த பெண்ணும் ஒரு பெரிய மரத்தின் மீது கண்டுபிடிக்கப்பட்டனர். குதிரைத்தோலும், அந்தப்பெண்ணும் பட்டுப்புழுவாக மாறியிருந்தனர். இந்த பட்டுப்புழு மரத்தைச் சுற்றி பட்டு இழைகளை நூற்றுக்கொண்டிருந்தது. மிகவும் பிரம்மாண்டமான ஒரு கூட்டுப்புழுவை அது உருவாக்கிக்கொண்டிருந்தது. இந்த கூட்டுப்புழுவை பின்னாளில் பராமரித்து காத்துவந்த அண்டை பகுதி பெண்கள், பலமுறை பட்டை விற்று நல்ல பணம் பெற்றனர். இதற்கு பின் இந்த மரம் மல்பெர்ரி எனப்படும் சாங் என்று பெயர் பெற்றது. சாங் என்பதற்கு தொலைந்து போன, காணாமல் போன என்று பொருள். அப்போது முதல் பட்டு உற்பத்தியை எல்லோரும் மேற்கொண்டு வருகின்றனர். பட்டுப்புழுவாக நாம் இப்போதும் காண்பது, அந்த பெண்ணும் குதிரைத்தோலும் இணைந்ததால் உருவான பட்டுப்புழுவே என்கிறார்கள்.