

560 ஆண்டுகளுக்கு முன்னே, மிங் வம்ச பேரரசர் யுங் லெ, மன்னர்கள் சுவர்க்கத்தை வணங்க ஓர் ஆலயத்தைக் கட்டத் தீர்மானித்தார். அவ்வாறு வணங்குவதன் மூலம் மன்னராட்சியை நீடிக்கலாம் என்று அவர் நம்பினார். அதன் விளைவாகவே, தியன் தான் அல்லது சுவர்க்காலயம் என்ற உன்னதமான கட்டிடக் கலை வடிவம் ஒன்று எழுந்தது.


முடியாட்சி முடிவடைந்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால், அக்கட்டிடங்கள் அன்று போல் இன்றும் திகழ்கின்றன. அவற்றைப் பார்வையிட்ட சீன மக்களும் உலக மக்கள் அனைவரும் புராதன சீன உழைப்பாளி மக்களின் படைப்புத் திறனை வெகுவாகப் பாராட்டுகின்றனர். அக்கோயில் கட்டிடங்களும் சுற்றியுள்ள பிரதேசமும் இன்று சீனத் தலைநகரில் மிகப் பெரும் பூங்காக்களில் ஒன்றாக விளங்குகின்றன. பெய்சிங்கின் தெற்கேயுள்ள இப்பூங்கா, 273 ஹெக்டர் நிலப்பரப்பு உடையது. அதன் முக்கிய அமைப்புகள், வடக்கு-தெற்கு அச்சில் இரண்டு தொகுதிக் கட்டிடங்களாக உள்ளன. 30 மீட்டர் அகலமும் 4 மீட்டர் உயரமும் உடைய ஒரு நடைபாதை, இரண்டையும் இணைக்கின்றது.
|