
பிரதான வாயிலில் நுழைந்ததும் பிரார்த்தனை மண்டபத்தின் காம்பீரியம், வருவோர் அனைவரையும் வசீகரிக்கிறது. மூன்று தட்டுத் தாழ்வாரம், கூம்பு வடிவான கூரை, உச்சியில் ஒரு தங்க முடி ஆகியவற்றையுடைய அது, ஒரு உன்னதமான, வட்ட வடிவான அமைப்பு ஆகும். அதன் மண்டப அமைப்பு மிகவும் நுட்பமானது.


உள் கட்டுக்கோப்பில் அதன் முழு அமைப்பையும் தாங்குகின்ற உருக்கோ, சிமேந்தோ, வளைகளோ கிடையாது. 38 மீட்டர் உயரமும் 30 மீட்டர் விட்டமும் உடைய அதை, பிரமாண்டமான 28 மரத்தூண்கள் தாங்கி நிற்கின்றன. மத்தியிலுள்ள நான்கும் "வேதாள கிணற்றுத் தூண்கள்"என்று அழைக்கப்படுகின்றன.

அவை ஒவ்வொன்றும் 19.2 மீட்டர் உயரமும் 5 மீட்டர் சுற்றளவும் உடையவை. அவை நான்கும், நாலு காலங்களைக் குறிப்பனவாகும். அவற்றைச் சுற்றி உள்ளும் புறமுமாக ஒவ்வொன்றும் 12 தூண்களையுடைய 2 வளையங்கள் உள்ளன. உள் வளையம் ஆண்டின் 12 திங்கள்களையும், புற வளையம் சீன மக்கள் கணிக்கும் முறையில் பகலையும் இரவையும் குறிக்கின்றன.
|