• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-18 17:23:01    
வசந்த விழா

cri
சீனாவில் மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா, வசந்த விழாவாகும். சீனச் சந்திர நாட்காட்டியின் படி புதிய ஆண்டின் முதல் நாள், புத்தாண்டு நன்னாள் வசந்த விழாவாக சிறப்பு பெறுகிறது. இந்நாள் தொடங்கும் சிறப்பான கொண்டாட்ட சூழல் 15 நாட்கள் நீடிக்கும்.
வாட்டும் குளிர் நீங்கி மக்கள் கொஞ்சம் மிதமான வானிலையை வரவேற்க, இலை தழைகள் இல்லாது நிற்கும் மரங்கள் அழகாய் துளிர்க்கத் துவங்குவதை இந்த வசந்த விழாவின்போது காணலாம். வசந்தம் என்பது வளம், செழுமை, அழகு, இனிமை என்ற பதங்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டது என்பதை சீனர்கள் பெரிதும் நம்புகின்றனர்.


சியா வம்சக்காலத்தில் ஆண்டு எனப் பொருள்படும் சுவெய் என்றும், ஷாங் வம்சக்காலத்தில் பலியிடம் எனப் பொருள்படும் சு என்றும், ஷாவ் வம்சக்காலத்தில் ஆண்டு எனப் பொருள்படும் நியன் என்றும் வசந்த விழா அழைக்கப்பட்டது. உண்மையில் சீன மொழியில் நியன் என்பது பயிர் அல்லது தானியத்தின் வளர்ச்சிக்காலத்தை குறிக்கிறது. பொதுவாக தானியங்கள் ஆண்டுக்கொரு முறை அறுவடை செய்யப்படுவதால், வசந்த விழாவும் ஆண்டுக்கொரு முறை அறுவடையைக் கொண்டாட வந்தது. ஆக பொங்கலோ பொங்கல் என்று இங்கு கூறுவதில்லை என்றாலும் அறுவடைத் திருநாளாக, தற்போது தமிழக அரசு இணக்கத்துடன் முன்னகர்த்தும் தமிழ் புத்தாண்டு நாளுமாக அமையும் நமது பொங்கல் திருநாளுக்கும், வசந்த விழாவுக்கும் உள்ள ஒற்றுமை அறிய இனிக்கும் ஒரு சிறப்பாகும்.


நேயர்களில் பலருக்கு ஏற்கனவே வசந்த விழா பற்றிய பல தகவல்கள் தெரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கூடுமானவரை அறிந்திராத தகவல்களை அறியச்செய்யும் ஒரு சிறு முயற்சியே இன்றைய நிகழ்ச்சி.
பண்டைய காலத்தில் எப்படியெல்லாம் வசந்த விழா கொண்டாடப்பட்டது என்பதை அறிந்துகொள்வோம்.
1644 முதல் 1911 சிங் வம்சக்காலத்தில் அரசாட்சியிலுள்ளோர் சிலருடன் குழுவாக புறநகருக்குச் சென்று வசந்த விழாவை கொண்டாடியதாக தெரிகிறது. இதன்போது குறிப்பாக "தா ச்சுன் நியு" என்ற மாட்டை அடிக்கும் நடவடிக்கை குறிப்பாக இடம்பெறும். மாட்டை அடிப்பதென்றால் மாட்டையே அடிப்பார்களா என்றால் அப்படியல்ல. களிமண்ணால் செய்யப்பட்ட எருதின் சிலையையே சாட்டையால் அடித்தனராம்.
அக்காலத்தில் நகரின் புறத்தே கிழக்கு பகுதியில் தானியக் கடவுள் மற்றும் எருதின் உருவச்சிலைகளை அரசு உருவாக்கி வைக்கும். விழா நாளின்போது, ஆட்சி புரிவோர் உள்ளிட்ட விழாவை கொண்டாடும் மக்கள் ஊர்வலமாகச் சென்று, களிமண் எருதுச்சிலை சாட்டையால் அடிப்பார்கள். அதற்கு முன்பாக பலி கொடுக்கும் சடங்கும் நடைபெறுமாம். விவசாயத்தை ஊக்கப்படுத்தும் ஒரு அடையாளச் செயலாகவே இந்த களிமண் எருதுச்சிலையை அடிக்கும் வழமை. தென் சீனாவின் குவாங்துங் மாநிலத்தின் ஷாந்தாவ், சாவ்ஷோ ஆகியவற்றில் விவசாயத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாக தெரியும் இந்த வழமை இன்றும் கடைபிடிக்கப்படுகிறதாக அறியப்படுகிறது. ஆனால் மக்கள் இப்போது பொதுவாக வசந்தவிழா கொண்டாட்டத்தில் இந்த எருதுச்சிலையை வைத்திருந்தாலும் அதை அடிப்பதில்லையாம்.


சீனாவின் குவாங்துங் மாநிலத்தின் ஷாந்தாவ், சாவ்ஷோ ஆகியவற்றில் சிங் வம்சக்காலத்தில் "தாய் ச்சுன் செ" என்ற வழமை இருந்ததாக தெரிகிறது. வசந்த அழகியை சுமந்து செல்வது என்பது இதற்கு பொருள். வசந்தகாலத்தின் முதல் நாளில் பெருங்கூட்டமாக கூடி மக்கள் வீதிகளில் ஊர்வலம் செல்வார்களாம். அப்போது அலங்கரிக்கப்பட்ட மேடை போன்ற ஒன்றில் ஒரு இளம்பெண்ணை அமர்த்தி அதை இருவர் சுமந்து வருவர். இந்தப் பெண் பாடிய வண்ணம் இருக்க, அவள் அமர்ந்த பலகையை சுமந்த இருவரும் ஊர்வலமாய் வருவார்கள். மேலும் ஜியாங், மெய்ஷாவ் போன்ற இடங்களில் குறுகிய வசந்தம் மற்றும் நீண்ட வசந்தம் என்று இந்த வழமை இரண்டு விதமாக அனுசரிக்கப்பட்டது. குறுகிய வசந்தம் என்றால் ஒரு பெண் மட்டும் பாடியபடி அமர்ந்து வருவாள், நீண்ட வசந்தம் என்றால் இரண்டு பெண்கள் இந்த அலங்காரப் பலகையில் அமர்ந்து பாடிய வண்ணம் ஊர்வலமாக செல்வார்கள். இதில் இரண்டு பெண்கள் பாடுகையில் பலகையில் குறுக்கும் நெடுக்குமாக நிற்கவைக்கப்பட்ட இருகழிகளில் சாய்ந்து சார்ந்து நிற்பாள். அதாவது சிலுவை போல் அமைந்த அந்த இரு கழிகளும் அவளது நீண்ட ஆடைக்குள்ளாக சென்று அடிப்பலகையுடன் இணைந்திருக்கும். குறுக்காக உள்ள பலகையில் மற்ற பெண் நிற்பார். அதாவது ஒரு பெண்ணின் தோள்மீது மற்றவர் நிற்பது போல் தெரியும்.


வசந்த விழாவின் போது சியாவ் சு உட்கொள்வது, வானவேடிக்கை கொளுத்தி மகிழ்வது, கவிதை வரிகள் எழுதி கதவுகளில் ஒட்டுவது, குடும்பத்தினர் ஒன்று கூடி மகிழ்வது என பல சிறப்பான அம்சங்கள் உண்டு. இவையெல்லாம் இப்போது சீனாவில் வசந்த விழாக் கொண்டாட்ட அம்சங்களில் உள்ளடக்கம்.
பொதுவாக மக்கள் வசந்த விழாவின் போது மலர்களை அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், வாழ்த்து கூறவும் விரும்புகின்றனர். சீனாவின் வளமான தோட்டக்கலையும், அதன் பாரம்பரிய மற்றும் நவீன கால செறிவான உள்ளடக்கங்களுமாக மலர்கள் சந்தைகளில் குவிந்து கிடக்கும் காட்சியை, வசந்த விழா காலத்தில் காண முடியும். புத்தாண்டின் மும் தினம் அதாவது வசந்தவிழாவுக்கு முந்தைய நாள், ச்சுஷி என்று அழைக்கப்படுகிறது. இந்த ச்சுஷி நாளில் இரவு உணவு குடும்பமாக அமர்ந்து உட்கொள்வதும், நள்ளிரவை ஒன்றுகூடி கழிப்பதும், புத்தாண்டு நாளை வரவேற்பதும் வசந்த விழாவின் சிறப்பம்சங்கள் எனலாம். இந்த புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு உணவில் பங்கேற்று மகிழத்தான் வெளிநாடு, வெளி மாநிலம், வெளியூர் என எங்கு சிதறியிருப்பினும், வீடு திரும்ப சீன மக்கள் முனைப்புடன் காத்திருக்கின்றனர். வசந்த விழா நாட்களில் சீனாவில் தொடர்வண்டி, பேருந்து மற்றும் விமான சீட்டு வாங்குவதென்பது குதிரைக்கொம்பு போலத்தான். ஆக இந்த புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு உணவை ஒன்றுகூடி உண்டு மகிழ்ந்தபின் மலர்கள் விற்கும் சந்தைகளில் மக்கள் கூட்டமாக இருப்பதை காணமுடியும். புத்தாண்டு நாளில் மலர்கொடுத்தும், அழகிய வளர்ப்புச்செடிகள் கொடுத்தும் மகிழ்கின்றனர் சீன மக்கள்.
வசந்த விழாவின் பாரம்பரிய வழமைகளில் ஒன்றாக, பாரம்பரிய கலை வடிவமாக உள்ள "ஸாய் காவ்ச்சியாவ்" பற்றி நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். ஸாய் என்பது நடப்பது, காவ்ச்சியாவ் என்பது கழிகள் அல்லது குச்சிகள். ஆக குச்சிகளின் மீது நின்றபடி நடப்பதுதான் "ஸாய் காவ்ச்சியாவ்". நம்மூரின் கட்டைக்கால் கூத்து போன்றதுதான் "ஸாய் காவ்ச்சியாவ்". நீண்ட கழிகளில் கொஞ்சம் உயரத்தில் கால்கள் வைப்பதற்கு தோதான சிறு பலகை அமைத்து நீண்ட கால்கொண்ட மனிதர் போல் இவர்கள் நடக்கின்றனர். சீனாவில் இதை பல்வேறு வகைகளாக செய்கின்றனர். சாந்துங் மாநிலத்தில் இது ஒருவர் தோள்மீது மற்றொருவர் என்ற வகையில் மூன்று அடுக்காக நின்றபடி கட்டைக்கால் கூத்தாடுகின்றனர். பெய்சிங், தியன்சின் நகரங்களில் கட்டைக்காலில் நடந்தபடி நீளம் தாண்டுதல் போன்று குதிப்பதும், தடையோட்டம் போல் எம்பிக்குதித்து ஓடுவதும், அடுக்கப்பட்ட மேசைகள் மீதேறி கீழே குதிப்பதுமாக வித்தை செய்கின்றனர்.