• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-01 10:44:51    
சீனப் பெயர்கள் (ஆ)

cri
இனி பழஞ்சீனப் பெயர்களின் உருவாக்கம் பற்றிய சில சுவையான தகவல்கள்:

1. தாய்வழிச் சமூகத்தின் தொடர்ச்சியாய் குடும்பப் பெயர்கள் உருவாயின. மூன்று பேரரசர் காலம் மற்றும் ஐந்து அரசர் காலத்திற்கு முன்பிருந்தே சீனர்கள் குடும்பப்பெயரை பயன்படுத்தினர். கிமு 21ம் நூற்றாண்டு வாக்கில் அப்போதைய சீன சமூகம் தாய்வழிச் சமூகமாகவே இருந்தது. அந்நாளில் தாயே அதிக செல்வாக்கும், ஏற்பும் பெற்றிருந்தாள், தந்தை அல்ல. சீன வரலாற்றின் முதல் பேரரசராக கருதப்படுபவரின் தாயின் பெயர் நியு தெங். ஆகவே அவரது குழந்தைகள் அனைவரும் நியு என்ற குடும்பப் பெயருடனேயே அழைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

2. குலக்குறி வழிபாட்டின் அம்சமாக குடும்பப்பெயர்கள் தோன்றின. பண்டைய சீனாவில் குலக்குறி வழிபாடும் இருந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களுக்கென ஒரு குலக்குறியை, அடையாளத்தை வைத்து வழிபட்டனர். சீனாவில் மட்டுமல்ல பெரும்பாலும் இத்தகைய குலக்குறி வழிபாடு உலகின் பல பகுதிகளில் காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அந்த வகையில் சீனாவில் இத்தகைய குலக்குறி வழிபாடு செய்தோருடைய குடும்பப்பெயர்கள் அவர்களது குலக்குறியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக லுங் என்ற குடும்பப்பெயரைச் சொல்லலாம். சீன மொழியில் லுங் டிராகனை குறிக்கும். பறவை நாகம் என்று நாம் இதை தமிழில் சொல்லலாம்.

3. நிலப்பிரபுத்துவத்தின் அல்லது நிலக்கிழமை முறையின் அம்சமாகவும் குடும்பப்பெயர்கள் உருவாயின. எடுத்துக்காட்டாக சீனாவில் கூறப்படும் ஒரு கதையை சொல்லலாம். மேற்கு ஷோவ் வம்சக்காலத்தில் பேரரசரால் ஷாவ் என்ற நகரின் பொறுப்பாளனாக, நிலக்கிழாராக அறிவிக்கப்பட்ட ஒருவன் பின்னாளின் தனது குடும்பப்பெயரை அந்த நகரின் பெயரான ஷாவ் என்றே மாற்றிக்கொண்டானாம். அதற்கு பின்பு அவனது பிள்ளைகளுக்கு அந்த குடும்பப்பெயர் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

4. இடங்களின் பெயரே குடும்பப்பெயராக பயன்படுத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட குடும்பம் வசித்த கிராமம் அல்லது அக்குடும்பத்துக்கு சொந்தமான கிராமத்தின் பெயரிலிருந்து குடும்பபெயர்கள் உருவானதாக கூறப்படுகிறது.

5. ஒருவரின் அதிகாரம் அல்லது தொழிலின் அடிப்படையில் குடும்பப்பெயர்கள் உருவாயின. சில சமயங்களில் சிறப்பாக செயல்பட்டமை அல்லது ஏதோ சாதனை புரிந்தமைக்காக பேரரசர்கள் சிலருக்கு பட்டமளிப்பதுண்டு. நம்மூரில் வித்தக்ககவி, கவிப்பேரரசு என்று பட்டமளிப்பது போல். அப்படி மதிப்பாக பட்டமளிக்கப்படும் சில நிலப்பிரபுக்கள் அல்லது நிலக்கிழார்கள், அந்த பட்டத்தையே தங்களது குடும்பப்பெயராக பயன்படுத்தினராம்.

6. சிறுபான்மை தேசிய இனங்களின் பெயர்கள் எழுத்துமாற்றம் செய்யப்படுவதிலிருந்தும் குடும்பப்பெயர்கள் தோன்றியுள்ளன. சான்யு, ஷாங்சுன், யூச்சி போன்றவை.

ஹான் இனத்தை பொருத்தவரை குடும்பப்பெயர்கள் பிரதேசங்களுக்கு ஏற்றார்போல் வேறுபடுகின்றன. லி, வாங், ஷாங், லியு ஆகிய குடும்பப்பெயர்கள் பெரும்பாலும் வடசீனாவில் அதிகமாக காணப்படுகின்றன. தென் சீனாவில் அதிகம் காணப்படும் குடும்பப் பெயர்கள் சென், ஷாவ், ஹுவாங், கின், வூ ஆகியவை.