திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் Qiangba Puncogஉம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஐக்கிய முன்னணி வேலை துறையின் துணை அமைச்சர் SITAஉம், இன்று பெய்ஜிங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். திபெத்தில் ஒலிம்பிக் தீபத் தொடரோடத்தின் பாதுகாப்பையும் வெற்றியையும் உத்தரவாதம் செய்யும் மனவுறுதி திபெத் தன்னாட்சி பிரதேச அரசுக்கு உண்டு என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். வன்முறை மற்றும் பிரிவினை செயல்பாட்டை தலாய் லாமா நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை நடத்தும் கதவை சீன அரசு தலாய் லாமாவுக்கு அகல திறந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மார்சு திங்கள் 14ம் நாள், ஒரு சில தீவிரவாதிகள், திபெத்தின் லாசா நகரில் அடிதடி,சீர்குலைத்தல்,கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களில் ஈடுபட்டனர். இந்த வன்முறைச் சம்பவங்களில் 18 அப்பாவி மக்கள் உயிர் இழந்தனர். 382 பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவங்கள், தலாய் லாமா குழுவால் முன்முயற்சியுடன் திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டதற்கான அதிக சான்றுகள் சீனக் காவற்துறைக்கு கிடைத்துள்ளன. அண்மையில், இலண்டன் மற்றும் பாரிஸில் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தை திபெத் சுதந்திரவாதிகள் சீர்குலைக்க முயன்றனர். இவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் கண்டிப்பை சந்தித்துள்ளன. திட்டத்தின் படி, மே திங்கள், ஒலிம்பிக் தீபம் உலகின் மிக உயரமான ஜோமுலுன்மா சிகரத்தைச் சென்றடையும். ஜுன் திங்களில் திபத்தில் தீபத் தொடரோட்டம் நடைபெறும். Qiangba Puncog கூறியதாவது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது சீன மக்களின் நூறு ஆண்டு கால விருப்பமாகும். ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் திபெத்தில் நடைபெறுவது, திபெத் மக்களின் புகழாகவும் கடமையாகவும் திகழ்கின்றது. திபெத்தின் பல்வேறு இன மக்கள் இதனை மிகவும் ஆதரிக்கின்றனர். வலுவான மக்கள் அடிப்படை, போதிய ஏற்பாடு முதலியவற்றுடன் திபெத்தில் தீபத் தொடரோட்டம் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவது திண்ணம் என்றார் அவர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் சீர்குலைப்பதன் மூலம், நாட்டை பிளவுப்படுத்தி, திபெத் சுதந்திரத்தை நனவாக்கும் தலாய் லாமா குழுவின் சூழ்ச்சி வெற்றி பெறாது. ஜோமுலுங்மா சிகரத்திலும், திபெத்திலும் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தைச் சீர்குலைக்க முயற்சிப்போருக்குத் தன்னாட்சி பிரதேச அரசு தகுந்த தண்டனை விதிக்கும் என்று அவர் கூறினார். சீன அரசும் தலாய் லாமாவும் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஐக்கிய முன்னணி வேலை துறையின் துணை அமைச்சர் SITA கூறியதாவது பேச்சுவார்த்தை நடத்தும் கதவு தலாய் லாமாவுக்கு அகல திறக்கப்பட்டது. ஆனால், வன்முறை குற்றச் செயல்களையும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் தாய் நாட்டைப் பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளையும் தலாய் லாமா தரப்பு நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கு தேவையான அடிப்படை நிபந்தனையை உருவாக்க வேண்டும். அதேவேளையில், தாய்நாட்டின் ஒன்றிணைப்பையும் தேசிய இன ஒற்றுமையையும் பேணிக்காத்து, விடுதலை பெற்ற திபெத்தில் பல்லாயிரக்கணக்கான அடிமை மக்களின் உரிமையையும், மக்களின் சொத்து மற்றும் உயிர் பாதுகாப்பையும் பேணிக்காக்க வேண்டும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தும் மனவுறுதி மாற்றப்பட முடியாது என்றார் அவர். மார்சு 14 சம்பவங்களுக்குப் பின், காயமுற்றவர்களைக் காப்பாற்ற திபெத் தன்னாட்சி பிரதேசம் மற்றும் லாசா நகரின் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிர் இழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு உதவித் தொகையை வழங்கியுள்ளன. நாசமடைந்த மின்னாற்றல், செய்தித் தொடர்பு முதலிய பொது வசதிகளைச் செப்பனிட்டு, நீர் பயன்பாட்டு செலவைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் பல சலுகைகளை வழங்கியுள்ளன. Qiangba Puncog கூறியதாவது தற்போது, லாசாவி்ல் உற்பத்தி மற்றும் வாழ்க்கை ஒழுங்கு நிதானமாகியுள்ளது. மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர். பெரும்பாலான கடைகள் மீண்டும் இயங்கத் துவங்கின. போதலா மாளிகை, பொருட்காட்சியகங்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சந்தையில், விலைவாசி நிதானமாக உள்ளது என்றார் அவர். திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு கடந்த 7 ஆண்டு காலமாக 12 விழுக்காடு என்ற வேகத்துடன் அதிகரித்து வருகின்றது. திபெத் மக்கள் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியின் கனிகளை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|