16வது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பிரதிநிதிகள் மாநாடு அண்மையில் பெய்சிங்கில் நடைபெற்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்தப் பணிகள் குறித்து, இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் மனநிறைவு தெரிவித்தனர். மேலும், பெய்சிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகின் மக்களுக்கு சிறப்பான விழாவாக மாறும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் தகுதியை பெய்சிங் வெற்றிகரமாக பெற்றது முதல் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மனநிறைவு தெரிவித்தது. 2001ம் ஆண்டு அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் படி, பல்வேறு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக்குவிஸ் ரோக் தெரிவித்தார். சுற்றுச்சூழலை மேம்பாடுத்துவதில் சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பாராட்டியதோடு, சீனா பெற்ற சாதனைகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகம் சீனாவுக்கு அன்பளிப்பாக வழங்கும் பண்பாட்டு மரபுச் செல்வமாகும். இது, சீனா உலகிற்கு வழங்கும் பண்பாட்டு மரபுச் செல்வமாகவும் திகழ்கிறது என்று ஜெர்மன் ஒலிம்பிக் குழுவின் தலைவரும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவருமான தாமஸ் பாக் தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணி மூலம், பெய்சிங்கின் தோற்றத்தில் மாபெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பிரதிநிதிகள் மாநாட்டின் துணைத் தலைவர் ஜுலியோ செசார் மாக்லியோன் தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, வரலாற்றில் மிக வெற்றிகரமான விளையாட்டு போட்டியாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
|