• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-21 15:41:08    
மகிழ்ச்சியை வாங்க முடியுமா?

cri
மீனவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட இரண்டு சமூக ஆர்வலர்கள் கடற்கரை ஓரமாக சென்று கொண்டிருந்தனர். மீனவர் ஒருவர் தனது கட்டுமரத்தின் மேல் அமர்ந்து கொண்டு எதையோ எண்ணியவாறு புகைபிடித்துக் கொண்டிருந்தார். அவருடைய வளர்ச்சிக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்த அவர்கள் அவரை அணுகினார்கள்.

என்ன செய்கிறீங்க?

சும்மா இருக்கிறேன். தெரியல்லையா? மீனவர் பதிலளித்தார்

சும்மாவா? ஏதாவது வேலைக்கு போகலாம் இல்லையா? சமூக ஆர்வலரில் ஒருவர் கூறினார்.

வேலைக்கு போனா..... என மீனவர் இழுத்தார்

வேலைக்கு போனா நீங்க இப்போ வைத்திருக்கிற கட்டுமரத்திற்கு பதிலா வள்ளம் வாங்கலாம்.

பிறகு.... மீனவர் முடிக்கவில்லை

சமூக ஆர்வலர் தொடர்ந்தார். பிறகு மீன் பிடிக்க சிறு படகு வாங்கலாம். அதன் பிறகு நல்ல மாளிகை போன்ற வீடு கட்டலாம். நிறைய சேமிக்கலாம்.

அதன் பிறகு ....... என மீனவர் கேட்டார்

பிறகு நீ மிகவும் மகிழ்ச்சியாக ஓய்வு எடுக்கலாம் என்றார் சமூக ஆர்வலர்.

அதற்கு மீனவர் இப்போதும் மகிழ்ச்சியாக ஓய்வு தானே எடுக்கிறேன் என்றாரே பார்க்கலாம்.

பணமும் வசதியும் ஒருவருக்கு மகிழ்ச்சியை கொண்டு வருவதில்லை. அப்படி பார்த்தால் வளர்ந்த நாடுகளில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்க வேண்டும். ஆனால் உண்மைநிலை அப்படி இல்லையே. வளரும் நாடுகளில் உள்ள மகிழ்ச்சி கூட வளர்ந்த நாடுகளில் இல்லாத சூழ்நிலையை தானே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

"பணம் என்னடா பணம் பணம்

குணம் தானடா நிரந்தரம்" என்ற தத்துவ பாடல் உயர்வான மதிப்பீட்டை நம்மில் விதைத்தாலும் பணம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. ஒரு நாட்டில் எந்தவொரு வளர்ச்சி திட்டமாக இருந்தாலும் நிதி ஓதுக்கீடு இல்லாமல் முடியாது தானே. அதுபோல நமது வாழ்வுக்கு பணம் இல்லாமல் முடியாது. பணமும் செல்வமும் பலவேளைகளில் இன்பத்தை தராது. அது மகிழ்ச்சியையும் கொண்டுவரும் என்பதும் நமக்கு தெரிந்ததே.

பணம் எப்போது மகிழ்ச்சி கொண்டுவரும் என்பதை அறிய பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக மற்றும் ஹார்வார்டு வணிகக்கல்லூரி முனைந்தது. இறுதியாக பணம் பிறருக்காக அதாவது அடுத்தவருக்காக செலவிடப்படும் போது அதிக மகிழ்ச்சியை தருகிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு அவர்கள் மூன்று விதமான ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளனர்.

முதலாவதாக 600 தன்னார்வலர்களிடம் அவர்களுடைய ஆண்டு வருவாயில் ஒவ்வொரு திங்கள் கால வரவு செலவுகளில், தங்களுக்கான மற்றும் பிறருக்கான செலவீனங்கள், உதவிக்கான அன்பளிப்புகள் என பற்றுச்சீட்டுகளோடு குறிக்க கேட்டுக்கொண்டார்கள். மேலும் எந்த செலவுகளை செய்தபோது அதிக இன்பத்தை பெற்றனர் என்பதை குறிக்கவும் கேட்டுக்கொண்டனர். அவர்கள் எவ்வளவு வருமானம் ஈட்டினார்கள் என்பதை கருத்தில் கொள்வில்லை. அவர்களிடம் பெற்ற தரவுகளை ஆய்வு செய்தபின் தனக்காக பணத்தை செலவு செய்தபோது பெற்ற மகிழ்ச்சியைவிட பிறருக்காக செலவிட்டபோது அதிக மகிழ்ச்சி அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவதாக பாஸ்டனில் உள்ள நிறுவனத்தில் 3,000 முதல் 8,000 அமெரிக்க டாலர் வரை ஆண்டுக்கான இலாப பகிர்விலான ஊக்கத்தொகை பெற்றவர்களில் 16 பேரிடம் அப்பணத்தை எதற்கு செலவிட்டனர் என்று ஆய்வு செய்தனர். அதில் பெரும் பகுதியை சமூக நன்மைக்காக செலவிட்டவர்கள் மட்டுமே ஊக்கத்தொகை பெற்றபோது தாங்கள் அனுபவித்த மகிழ்ச்சியைவிட அதை செலவு செய்தபோது அதிகமாக மகிழ்ந்ததாக தெரிவித்தனர்.

மூன்றாவதாக சிலர் ஆங்காங்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடம் 5 முதல் 20 வரையான அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன. அதில் பாதிபேர் தங்கள் விருப்பம் போல் செலவு செய்யலாம் என்றும் பிறர் செலவு செய்வதற்காக வழங்கப்பட்ட வரையறைகளோடு தான் செலவு செய்ய வேண்டுமென்று பணிக்கப்பட்டது. இந்த முயற்சியிலும் தனக்காக செலவு செய்ததைவிட பிறருக்கோ அல்லது பிறர் செயல்பாடுகளுக்கோ செலவழித்தபோது தாம் அதிக மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு பிரிட்டன் கொலம்பிய பல்கலைக்கழக உளவியல் வல்லுனரான எலிசபெத் துண் என்பரால் நடத்தப்பட்டு அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது

அதிக பணம் அல்லது செல்வம் பெற்றிருப்பது மட்டுமே மகிழ்ச்சி கொணராது என்றும் அது எப்படி யாருக்காக எந்த செயல்பாடுகளில் செலவு செய்யப்படுகிறது என்பது தான் நமக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது என்பதும் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களே.