சீனாவில் வசந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வசந்த விழாக் கொண்டாட்டங்கள் சீனச் சந்திர நாட்காட்டியின் படி, புத்தாண்டு பிறந்த 15 வது நாளில் முடிவடைகின்றன. ஆண்டின் முதல் மாதத்தின் 15வது நாள் யுவான் ஷியாவ் என்ற விளக்கு திருவிழாவுடன் வசந்த விழாக் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுகின்றன.

பணிச்சூழலினாலும், வாழ்க்கையின் ஓட்டத்திலான மாற்றங்களாலும் சிதறுண்டு எங்கெங்கோ வசித்துக்கொண்டிருக்கும் மக்கள் ஒரே குடும்பமாக கூடி புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு உணவில் பங்கேற்க விரும்புகின்றனர். இவர்கள் ஆண்டின் முக்கிய உணவாக கருதப்படும் இந்த இரவு உணவில் குடும்பமாக ஒன்றுகூடி புத்தாண்டை வரவேற்க முனைப்புடன் முண்டியடித்தாவது பேருந்து, தொடருந்து, விமானம் எதிலாவது இடம் பிடித்து சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

• ஜியாவ் சு எனப்படும் நம்மூரில் உள்ள கொழுக்கட்டை போன்ற உணவு இந்த புத்தாண்டுக்கு முந்தைய நாளில் முக்கிய உணவாக இருக்கும். மீனை தவிர இதர உணவு வகைகள் அன்றைய இரவு உணவில் இடம்பெறும். நியன்காவ் எனப்படும் பசையரிசியால் செய்யப்பட்ட கேக், மது, பழங்கள், இனிப்புகள் என உணவு அருந்த அமரும் மேசை பல்வகை பொருட்களால் நிறைந்திருக்கும்.
• கிழக்கு சீனாவின் சுஷோவில் முளைத்த அவரை பயிர், பச்சை காய்கறிகள், சிவரிக்கீரை ஆகியவை இந்த புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு உணவில் இடம்பெறும். இவை அமைதி மற்றும் மகிழ்ச்சி, மனநிறைவு, யின் அடையாளங்களாக கருதப்படுகின்றன.

• ஹூனான் மாநிலத்தின் மைய மற்றும் தென் பகுதிகளில் சுமார் ஒரு கிலோ எடையுடைய கெண்டை மீனும், மூன்று கிலோ எடைகொண்ட பன்றியின் கால் ஒன்றும் சமைக்கப்படுகின்றன. இவற்றை ஒன்றுகூடல் கெண்டை, ஒன்றுகூடல் கால் என்று அழைக்கின்றனர்.
• உணவுகள் ஒருபுறமிருக்கட்டும், இந்த வசந்த விழாவின் போதான கலை மற்றும் பண்பாட்டுச் செறிவுள்ள மற்ற அம்சங்களும் மகத்தானவை. சிங்க நடனம், டிராகன் நடனம், மேள நடனம், ஷெஹுவோ, விளக்கு ஊர்வலம் என பல வகையில் மக்கள் பொழுதுபோக்கவும், மகிழ்ச்சியடையவும் செய்கின்றனர்.
• சிங்க நடனம்: சிங்க நடனம் கெட்ட ஆவிகளை துரத்தவும், அதிர்ஷ்டத்தை கொண்டுவரவும் கூடியது என்று சீனர்கள் நம்புகின்றனர். முரசும், கண்டையும் ஒலிக்க சிங்கத்தின் அசைவுகளை ஒத்த இந்த நடனம் ஆடப்படும்.தென் சீனாவின் குவாங்ஷோவில் நடைபெறு சிங்க நடனம் பெருவாரியான மக்களை கவர்ந்திழுக்கும் விழா நடவடிக்கையாகும்.

• டிராகன் நடனம்: பறவை நாகம் என்று சொல்லப்படும் டிராகன் சீன மக்களின் பண்பாட்டோடு ஊறிய ஒரு அடையாளமாகும். பண்டைய காலத்தில் வறட்சி ஏற்படும்போது மழை வேண்டி ஆடப்படும் ஒரு நடனமாக, டிராகனை மகிழ்ச்சியூட்ட ஆடப்படும் ஒரு நடனமாக இருந்ததுதான் டிராகன் நடனம். காலப்போக்கில் இது வசந்தவிழாவின் கொண்டாட்ட அம்சமாகவும். வசந்தவிழாவின் இறுதிநாளில் அமையும் விளக்குத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகவும் மாறியது. பொதுவில் இந்த நடனம் அமோக விளைச்சல், அதிர்ஷ்டம் மற்றும் செழுமையை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. மூங்கில், துணி, பிரம்பு, தாள் முதலியவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் டிராகன்கள் சில மீட்டர்கள் முதல் 100 மீட்டர் வரை நீண்டதாக அமைகின்றன. டிராகனின் வயிற்றுப்பகுதியில் கழிகள் அல்லது குச்சிகள் பல பொருத்தப்பட்டு, அவற்றை கைகளில் ஏந்தும் மக்கள் டிராகனை முழுமையாக தலைக்கு மேல் தூக்கி பாம்பின் அசைவை ஒத்த நெளிவு சுளிவுகளோடு ஆடும் நடனம் பார்க்க மிகவும் அழகானது.
|