• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-07 09:06:21    
சகோதரி டிங்

cri

தான்யாங்கை சேர்ந்த 16 வயது இளம்பெண் டிங், ஹுவாய் ஆற்றின் தெற்கேயுள்ள ச்சுவன் ஜியாவைச் சேர்ந்த சியே என்பவனை மணமுடித்தாள். சியேவின் தாய், அதாவது டிங்கின் மாமியார் எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் சிடுசிடுவென இருக்கும் ஒரு நபர். மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்று நம்மூரில் சொல்வதை போல, மாமியார்தனத்தை கொஞ்சம் அதிகமே காட்டக்கூடியவர் டிங்கின் மாமியார். குறிப்பிட்ட நேரத்திற்குள் அவளுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை முடிக்காவிட்டால், சவுக்கால் விளாசியோ கைகள் வலிக்கும் வரை அடிக்கவோ செய்வார் இந்த மாமியார்.
எவ்வளவுதான் கொடுமைகளை தாங்கிக்கொள்வாள் இந்த இளம்பெண் டிங். எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா. ஒன்பதாம் மாதம், ஒன்பதாம் நாள், இந்த கொடுமைகளுக்கு முடிவுகட்ட தன் உயிரையே நீக்க முடிவெடுத்தாள். சிறு கயிற்றில் தொங்கி தன் உயிரை நீத்தாள் டிங். இறந்தாலும் அவளது ஆவி அமைதி காணவில்லை. ஆண்கள் முன்னிலையில் தோன்றி அலைகழித்து டிங்கின் ஆவி. குறி சொல்வோர், பேய் விரட்டுவோர் மூலம் தன் செய்தியை அறிவிக்கவும் செய்தாள் டிங். "துன்பத்தில் மூழ்கி கொஞ்சமும் ஓய்வின்றி இன்னலுறும் பெண்களின் மீது இரக்கம் கொண்டுள்ளதால், இனி அவர்கள் ஒன்பதாம் மாதம் ஒன்பதாம் நாள் அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுக்கட்டும்" இதுதான் டிங்கின் செய்தி.


ஒருநாள் மனித உருவில், பச்சை நிற ஆடையும் உடன் ஒரு பணிப்பெண்ணுமாக தோன்றி, ஆழம் குறைவான நியுஷுவை நோக்கிச் சென்றாள். அங்கே எதாவது படகிருந்தால் அதில் கரையை கடப்பதாக அவள் திட்டம். அவ்விடம் சென்றபோது இரண்டு வாலிபர்கள் கரைக்கு அருகில் படகிலிருந்தபடி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். மறுகரைக்கு அவர்களது படகில் செல்ல எண்ணி இரு வாலிபர்களிடம் அவள் கேட்டாள். அந்த வாலிபர்கள் கிண்டலாக, அதற்கென்ன எங்களை மணந்துகொள், உன்னை மறுகரைக்கு படகில் அழைத்துச் செல்கிறோம் என்றனர். அதற்கு மனித உருவிலிருந்த டிங்கின் ஆவி, "உங்களை பண்பானவர்கள் என்று எண்ணினேன் ஆனால் நீங்களோ முட்டாள்கள் என்று கொஞ்சம் கேலியாக கூறியதோடு, "நீங்கள் மனிதர்களென்றால் மண்ணோடு மண்ணாவீர்கள், ஆவிகளென்றால் தண்ணீரில் மறைந்துபோவீர்கள்" என்றும் கூறி அவ்விடம் விட்டு சென்றாள். பின் கரையின் நாணல் நிறைந்த பகுதிக்குச் சென்றபோது அங்கே ஒரு வயதான மனிதர் வைக்கோலை வைத்தபடி வருவதைக் கண்டாள். அந்த முதியவரிடம் தன்னை மறுகரைக்கு அவரில் படகில் ஏற்றிச்செல்லுமாறு கோரினாள் டிங். அதற்கு அந்த முதியவர் "அம்மா, என் படகில் பாதுகாப்பான கூரைப்பகுதி கிடையாது. நீங்கள் எப்படி இதில் அமர்ந்து வர இயலும். இது போல் ஒரு பெண் பாதுகாப்பின்றி செல்லலாமோ?" என்று கேட்டார்.


அதற்கு டிங், அதனால் ஒன்றும் பரவாயில்லை தான் ஆற்றைக் கடக்க முதியவர் உதவினால் போதும் என்று கூறவே, தான் கொண்டு வந்த வைக்கோலில் பாதியை கரையிலேயே போட்டுவிட்டு மீதியை படகில் வைத்து டிங்கை அழைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்தார் முதியவர். மறுகரையை அடைந்து முதியவரிடம் விடைபெறும் முன், "ஐயா நான் மனித உருவிலிருந்தாலும் மனித பெண் அல்ல. நான் ஒரு ஆவி. நானே ஆற்றை எளிதாக கடந்திருக்கமுடியும். ஆனால் நான் என் இருப்பை மக்களுக்கு உணர்த்த விரும்பினேன். என்னை சுமந்து வருவதற்காக பாதி சுமை வைக்கோலை அக்கரையிலேயே வைத்துவிட்டு நீங்கள் வந்ததும் நன்மைக்கே. உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உங்கள் உதவிக்கு கைமாறாய் மறுகரைக்கு நீங்கள் திரும்பி செல்லும்போது, வியப்பான காட்சி உங்களுக்காக காத்திருக்கிறது. அங்கே உங்களுக்கு பயன் தரக்கூடியதாய் நீங்கள் ஒன்றை காண்பீர்கள் என்றாள்" டிங்.
முதியவரோ, பண்புடன் உங்களுக்கு வசதியில்லாத நிலையில்தான் ஆற்றைக் கடக்க நேரிட்டது, நீங்கள் அதற்கு ஏன் நன்றி சொல்லவேண்டும் என்றார். பின் மறுகரைக்கு திரும்பிய முதியவர் அங்கே நீரில் இரண்டு பேர் தலை கீழாய் இறந்து படுத்து கிடப்பதையும். கரையின் ஓரத்தில் காற்றின் திசையில் அடித்து வரப்பட்டதாய் கூட்டம் கூட்டமாய் மீன்கள் கூடியிருப்பதையும் கண்டார். படகு நிறைய மீன்களோடு வீடு திரும்பினார் முதியவர்.
இதற்கு பின் டிங்கின் ஆவி மீண்டும் தான்யாங்கிற்கு திரும்பியதாக அறியப்படுகிறது. யாங்சு ஆற்றின் தெற்கேயான மக்களால் அவள் சகோதரி டிங் என்று அழைக்கப்படலானாள். மேலும் ஆண்டின் ஒன்பதாம் மாதத்தின் ஒன்பதாம் நாள் பெண்களுக்கு ஓய்வுநாள். அன்று பெண்கள் வேலை ஏதும் செய்யத் தேவையில்லை.