

 மியன்ஷான் மலை மிக உயரமானது, ஏறிச்செலவது மிகவும் கடினம், அடர்த்தியான காடு சூழ்ந்தது. எனவே ஜியே ஸ்துயை சென்று தேடுவது மிக மிக கடினம். எனவே ஒரு பக்கம் தீயை மூட்டினால், ஜியே ஸிதுய் வேறு வழியின்றி வெளியே வருவான் என்று சிலர் ஆலோசனை கூறினர். அரசனும் உடனே அதை செய்யும்படி கூற, மலையின் மூன்று பக்கங்களிலும் நெருப்பு மூட்டப்பட்டு காடு தீயால் அழிக்கப்பட்டது. மியன்ஷான் மலையே முற்றும் தீயால் எரிந்தது. ஆனாலும் ஜியே ஸிதுய் வெளியேறவில்லை. ஒருவழியாக தீ முற்றும் எரிந்து அணைந்த பிறகு ஒரு மரத்தின் அடியில் முதுகில் தன் அன்னையை சுமந்தபடி அமர்ந்திருந்த நிலையில் இறந்து கிடந்ததை காணமுடிந்தது. இதை கண்ட அரசன் தாங்கமுடியாத வேதனையில் அழுதான்.

ஜியே ஸீதுயின் உடலை அகற்றி சவப்பெட்டியில் வைக்கும்போது, அவன் அமர்ந்திருந்த மரத்தின் ஒரு பொந்தில் ஒரு கடிதம் இருந்ததை கண்டனர். தனது ரத்தத்தால் ஜியே ஸிதுய் எழுதிய அந்த கடிதம் அரசனுக்காக எழுதப்பட்டிருந்தது. " என் சதையை உனக்கு உணவாக்கி தந்தது, என் அர்ப்பணிப்பின் அடையாளமாகும். என் விருப்பமெல்லாம் அரசராகிய நீங்கள் எப்போதும் தெளிவும், ஒளியும் நிறைந்தவராய் இருக்கவேண்டும் என்பதே. என்னை நினைவில் வைத்திருந்தால், என்னை நினைக்கும் போதெல்லாம் நீங்கள் உங்களை சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள்" என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அரசன் தன் வாழ்நாள் முழுதும் இந்த கடிதத்தை தன்னுடனேயே வைத்திருந்தான். ஜியே ஸிதுயின் நினைவாக மியன்ஷான் மலையை ஜியேஷான் என்று பெயர்மாற்றவும், அவன் இறந்தநாளை ஹைஷு நாள் என்றும் அதாவது குளிர் உணவு நாள் என்றும் அறிவித்தான் அரசன். இந்த குளிர் உணவு அல்லது ஹைஷு நாளன்று, நெருப்போ, புகையோ மூட்ட அனுமதியில்லை. அன்று முழுதும் சூடில்லாத, குளிரான உணவையே மக்கள் சாப்பிட்டனர்.
அடுத்த ஹைஷு நாளன்று அரசன் ஜின் வெங்குங் ஜியே ஸித்ய் இறந்த இடத்துக்கு தன் ஆட்களுடன் சென்றபோது ஒரு வியப்பு காத்திருந்தது. நெருப்பால் அழிந்து கிடந்த மரம் இப்போது மீண்டும் துளிர்விட்டதை கண்ட அரசன், தனது நேர்மையை உணர்த்த மரத்தின் குச்சிகளால் ஒரு வளையம் செய்து தன் தலையில் அணிந்துகொண்டான். அவனது அதிகாரிகளும் ஒருவர் பின் ஒருவராக அவ்வாறே செய்தனர். அன்றே, அப்போதே ஜியே ஸிதுய் இறந்த கிடந்த மரத்தை தெளிவும் ஒளியும் நிறைந்த மரம் என்று பெயரிட்டான்.பின் அரண்மனைக்கு சென்று ஹைஷு நாளுக்கு அடுத்த நாள் தெளிவும் ஒளியும் நிறைந்த நாள், அதாவது சிங்மிங் திருநாள் என்று அறிவித்தான் அரசன்.
|