கலை: நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தொடரும் உங்கள் கடித, மின்னஞ்சல் ஆதரவுக்கு நன்றி கூறி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்கிறோம். ......முதலில் இலங்கை மட்டகளப்பு நேயர் பாத்திமா ஷஹிறா வாசித்த கவிதையை கேளுங்கள்....... .........அடுத்து சீன ஜப்பானிய உறவின் வளர்ச்சி பற்றி இராமபாளையம் எஸ் அபிராமி தெரிவித்த கருத்தை கேளுங்கள்........
க்ளீட்டஸ்: கவிந்தப்பாடி பி.கே. பழனிசாமி எழுதிய கடிதம். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியினை தொடர்ந்து கேட்டு வருகிறேன். பயனுள்ள நிகழ்ச்சி. இன்னும் கொஞ்சம், விரிவாகவும், சற்று நிதானமாகவும் வார்த்தைகளை உச்சரித்தால், நாங்களும் அவற்றை புரிந்துகொண்டு சரியாக உச்சரித்து பழக ஏதுவாகயிருக்கும். கலை: அடுத்து, சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி பற்றி முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் எழுதிய கடிதம். சீனாவில் லிபோ மாவட்டத்தில் வனப்பகுதிகள், இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். சீனப் பண்பாட்டை விளக்கும் இவ்வியற்கைக் காட்சி பகுதிகளை சீன அரசு பாதுகாத்து பராமரித்து வருவது பாராட்டத்தக்கது. ஏரிகள், ஆறுகள், பள்ளத்தாக்கு ஆகியவை இப்பகுதியின் சொத்து எனலாம்.
க்ளீட்டஸ்: மதுரை-20, அமுதராணி எழுதிய கடிதம். சீனாவுக்கு வந்தால்தான் உலகின் அளவு தெரியும். உருமுச்சிக்கு சென்றால்தான் சின்சியாங்கின் அழகு தெரியும் என்ற சீன மக்களின் கருத்தை அறிந்து பரவசமடைந்தேன். ஆண்டுக்கொருமுறை நடைபெறும் உருமுச்சி பட்டுப்பாதை விழா, உலகின் பயணிகளுக்கு பல கண்காட்சி மற்றும் பங்கேற்பு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது என்பதை சீன வானொலியின் மூலம் அறிந்து மகிழ்ந்தேன். கலை: மலர்ச்சோலை நிகழ்ச்சி குறித்து விழுப்புரம் எஸ். சேகர் எழுதிய கடிதம். பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் வரிசையில், சீனாவின் வசந்த விழாவை சேர்க்க யுனெஸ்கோ அமைப்பிடம் விண்ணப்பிக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. அவ்வண்ணமே சீனாவின் பண்பாட்டு கலைக்களஞ்சியம் 49 தொகுதிகள் கொண்டது என்பதை நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொண்டேன். பயனுள்ள செய்திகள்.
...........அடுத்து சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை எதிர்பார்க்கின்ற நாமக்கல் நற்பட்டி வி. ஏகாம்பரம் தெரிவித்த விருப்பத்தை கேளுங்கள்............. க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடி. எம்.ஜே.எஃப்.ரிஸ்வானா எழுதிய கடிதம். தாங்கள் அனுப்பிய சீனத் தமிழொலியின் மூலம், தாவோரின் இனத்தவர் பற்றியும், அவர்களது விழாக்களின் தனிச்சிறப்பு பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. சூமெய் அம்மையார் பற்றிய தகவல்களை படித்து வியந்தேன். நானும் கைவினை பொருட்களை நேசிப்பவள். அந்த வகையில் சூமெய் அம்மையாரை பற்றியும், அவரது படைப்புகளை பற்றியும் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். கலை: பெரியவளையம் கி. ரவிச்சந்திரன் எழுதிய கடிதம். அறிவியல் உலகம் நிகழ்ச்சியின் மூலம் கொள்ளை நோய் பற்றி அறிந்துகொண்டேன். சரியான பராமரிப்பும், சுகாதாரமும் இல்லாவிட்டால் ஏற்படும் இந்த கொள்ளை நோய், ஐரோப்பிய நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது என்றும் எலிகள் மூலம் மிக எளிதாக பரவக்கூடிய கொடிய நோய் இது என்றும் அறிந்துகொண்டேன். க்ளீட்டஸ்: திருநெல்வேலி கடையாலுருட்டி எம். பிச்சைமணி எழுதிய கடிதம். சீன நாட்காட்டியின் படியான எலியாண்டின் வணிக வாய்ப்புகளை பற்றிய தகவல்களை நமது ஒலிபரப்பில் கேட்டேன். எலி ஆண்டு நினைவு தங்கக்காசுகள் வாங்குவோர் குறித்து அறிந்தேன். தமிழகத்தில் கொன்று குவிக்கப்படும் எலிகளுக்கு சீனாவில் தரப்படும் மரியாதை என்னை வியக்க வைக்கிறது.
மின்னஞ்சல் பகுதி ……திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி…… நான் தினந்தோறும் "பெய்ஜிங் ஒலிம்பிக் சிறப்பு செய்திகளை தவறாமல் கேட்டுவருகின்றேன். உலகெங்கும் பயணித்துகொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவி புரிகின்றது என்றால் மிகையாகாது. நானும் ஒலிம்பிக் தீப தொடரோட்டத்தில் பங்குகொண்டு ஓடியதைப்போன்று அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சிறப்பு நிகழ்ச்சி சிறப்பாக அமைந்து இருக்கின்றது. ......வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்...... ஏப்ரல் திங்கள் 30 ஆம் நாள் இடம்பெற்ற செய்திகள் மற்றும் முதலாவது செய்தித் தொகுப்பு மூலம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய சில சிறப்புத் தகவல்களை அறியத் தந்தமைக்கு என் நன்றி்யைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் 100 நாட்களே உள்ளன. இதை எண்ணும்போது உள்ளத்தில் உற்சாக உணர்வு கொப்பளிக்கின்றது. ஒரு மாபெரும் கனவு, நனவாக இன்னும் 100 நாட்களே என்ற செய்தி, ஒரு புதிய மன எழுச்சியை உருவாக்குகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற இடையறாத முன்னேற்பாட்டுப் பணியின் வெற்றி வரும் ஆகஸ்ட் திங்களில் வெளிப்படும்போது உலக மக்கள் வியப்படைந்து, சீனாவை மனமுருக பாராட்டுவது உறுதி.
......ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன்....... 19.04.2008 - ல் இடம் பெற்ற பெய்சிங்-ஷாங்காய் உயர் வேக இருப்புப் பாதை கட்டுமானம் என்ற செய்தித் தொகுப்பு கேட்டேன். அதில் இன்று துவங்கிய பெய்சிங்கையும் ஷாங்காயையும் இணைக்கும் பெய்சிங்-ஷாங்காய் உயர் வேக இருப்புப் பாதை கட்டுமானம் பற்றியும், இந்த உயர் வேக இருப்பு பாதை உலகின் மிக நீளமான, மிக உயர் வரையறை கொண்ட உயர் வேக இருப்பு பாதையாகும் என்பதையும் அறிந்தேன். அத்தோடு சீனாவில் பொருளாதார வளர்ச்சியடைந்த பெய்சிங்-ஷாங்காய் ஆகிய இவ்விரு மாநகரங்களின் தொழில் வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாகும். ……பாண்டிச்சேரி N. பாலகுமார்…… நட்புப்பாலம் நிகழ்ச்சியில் உயர்கல்வி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சீனாவிற்கு வருகைதந்துள்ள திரு.திருவாசகம் அவர்களின் உரையில், சீன மாணவர்கள் இந்தியாவிற்கு வந்து படிக்க அழைப்பு விடுத்தார். இதை சீன மக்கள் ஏற்று இந்தியாவிற்கு வந்து படிப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க முடியும் என்று அவர் உறுதியளித்ததை கேட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ……மதுரை-20 என்.ராமசாமி…… பணமும் வசதியும் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி வந்துவிடுவதில்லை என்பதை அறிவியல் உலகம் நிகழ்ச்சியின் மூலம் அறித்து கொண்டேன். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்பது தத்துவ பாடல். பணமும் செல்வமும் பல வேளைகளில் இன்பம் தரமுடியாது. பணம் மற்றவர்களுக்கு செலவிடப்படும்போது நமக்கு மனநிறைவு உண்டாகிறது என்பது அனுபவமாகும் இத்தகைய தத்துவத்தை நிகழ்ச்சியில் வழங்கிய சீனா வானொலி தமிழ்ப்பிரிவுக்கு எனது பாராட்டுகள்.
…….வளவனூர் முத்துசிவக்குமரன்……. ஒலிம்பிக் திருவிழாவிற்கு இன்னும் 100 நாட்கள் தான் இடையில். இந்த 100 நாட்களும் 100 நிமிடங்களாக கரைந்து விடும். அதன் பின், உலகமே வியக்குமாறு பெய்சிங்கில் கோலாகலம், கொண்டாட்டம் தான். இந்த 100 நாட்கள் ஆரம்ப தினத்தை கொண்டாடும் வகையில் பீஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் பற்றி இணைய தளத்தில் கண்டேன். இங்கு நிலவும் கோடை வெப்பத்தினை தணிக்கும் வகையில் குளிர்ச்சியாக இருந்தது. ......திருப்பூர் இரா.சின்னப்பன்...... பெய்ஜிங் நகரில் புகைபிடி தடுப்பு நடவடிக்கைகள்' என்ற செய்தித்தொகுப்பு கேட்டேன். மிகப்பெரிய புகையிலை நுகர்வு நாடான சீனாவில் தற்போது கண்ட இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளதையும், பெரும்பாலான பொதுமக்கள் இதற்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள் என்பதையும் அறிந்தேன். காபிகுடிக்க வருவோர்க்கு புகைபிடிப்பதற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் இப்புகை மற்றவர்களுக்கு பாதிக்காத வண்ணம் மின் தூக்கிக்கு அருகில் காற்று சுழற்சியுள்ள இடத்தில் புகை பிடிக்க தனியிடம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அறிந்து வியப்புற்றேன்.
......பாண்டிச்சேரி பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன்...... சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சியின் மூலம் 2000 ஆண்டு கால வரலாறுடைய அன்ஷோன் நகரத்தின் ஷோபான் வீதியின் சிறப்புகளை மிகவும் சிறப்புடன் ரசிக்க முடிந்தது. மேலும் இந்த வீதியில் உள்ள கடைகள், உணவகங்கள், புகழ்பெற்ற மருந்து கடை, நாட்டுபுற கலை, சீன சிலை தயாரிப்பு என அனைத்தையும் கவனிக்கும்போது அதில் உள்ள சீனாவின் பரம்பாரிய பண்பாட்டை அறிய முடிகிறது. சீனத்து வீதிகளின் சிறப்புகள் மிகவும் அருமை. அடுத்து சீனப் பண்பாடு என்னும் அச்சய பாத்திரம் அள்ள அள்ள குறையாத அளவுக்கு சீனப் பண்பாட்டு தகவல்களை தந்து வருகிறது. அந்த வகையில் இன்று சீன குடை தயாரிப்புகளின் முறைகள் எப்படி இருந்தன என்பதை மிக விரிவாக தெளிவாக தெரிந்து கொள்ள செய்தது அருமை.
|