• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 10:48:54    
வாழ்வே அழகு

cri
பேரரசர் ஒருவர் தனது மகன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆள வேண்டுமென்று கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார். பெண்ணாசை கொள்ளக் கூடாது என்று அவன் பெண்களையே பார்க்காத அளவுக்கு மிகவும் பாதுகாப்பாக 18 வயது வரை வளர்த்து விட்டார். ஒரு நாள், மகனுக்கு நாட்டை சுற்றிக்காட்ட அவர் ஏற்பாடு செய்தார். அவ்விடங்களில் பெண்கள் வராமல் இருக்க முன்னேற்பாடுகளையும் செய்திருந்தார். முதல் முறையாக அரண்மனையைவிட்டு வெளியே வந்த இளவரசனுக்கு எல்லாம் புதுமையாக தெரிந்தது. அனைத்தையும் பற்றி தனது தந்தையிடம் விளக்கமாக கேட்டு தெரிந்து கொண்டார். ஆனால் எல்லா பாதுகாப்புகளுக்கு மத்தியிலும் எதிர்பாராதவிதமாக தண்ணீர் குடம் ஏந்தியவாறு 15 வயான அழகான பெண் ஒருவர் சாலையில் வந்துவிட்டார். அந்த இளம்பெண்ணை கண்ட இளவரசன் அது என்னப்பா? என்று கேட்க ஓ…… அதுவா…. அது அது வாத்து என்று தட்டுதடுமாறி கூறி ஏதோ சமாளித்தார். மாலை அரண்மனை வந்ததும், சரி இன்று முழுவதும் பார்த்தவற்றில் உனக்கு அதிகம் பிடித்தது எது என்று அரசர் மகனை கேட்டார். உடனே, அந்த வாத்து தான் அப்பா எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றான் இளவரசன்.

எவ்வளவு தான் பொத்தி பொத்தி வளர்த்தாலும் ஆண் – பெண் என்ற இயல்பான உணர்வுகள் வெளிப்படுவது இயற்கை தான். இரு பாலினமும் கவரப்படுவதும் நடப்பது தான். ஆனால் இந்த உணர்வுகள் மத்தியில் அழகு என்ற அம்சம் இருக்கிறது. தனிநபர்களின் பார்வைக்கேற்ப அழகு என்ற சொல்லின் பொருள் மாறுபடுகிறது. வேறுபடுகிறது. நிலமை இவ்வாறிருக்க, திருமணத்தின் போது தங்கள் துணைவரை அல்லது துணைவியரை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள்? அந்த தெரிவில் அழகு என்ன பங்கு வகிக்கிறது என்று பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெண்கள் தங்கள் வாழ்கை துணையை தேடும்போது தன்னுடைய அழகுக்கு குறைவான நபர்களை தான் அதிகமாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது. அவ்வாறு கணவனை விட அழகான மனைவியை கொண்ட தம்பதியர், ஒருவொருக்கொருவர் ஒத்துழைகின்றவராக இருக்கின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்கள் அழகில் அதிக மதிப்பு கொண்டிருப்பதும், பெண்கள் அதிகமாக ஒத்துழைக்கும் குணமுடையவரை கணவராக பெறுவதில் ஆர்வமாக காட்டுவதுமே இதற்கான காரணங்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உண்மைநிலை இவ்வாறிருக்க புதிய தம்பதியரை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வில் உடல் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட பார்வைகள் தான் திருமண முடிவுகளுக்கு அடிப்படையாக உள்ளது என்பதனை குடும்ப உளவியல் இதழ் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் டென்னசி பல்கலைக்கழக McNulty குழுவினர் 82 புதுமண தம்பதியரை ஆய்வு செய்தனர். அவர்கள் அனைவரும் மணம் முடிந்து 6 மாதங்களானவர்கள். அதற்கு முன்னர் சுமார் மூன்று ஆண்டுகள் வரை இணைந்தும் வாழ்ந்தவர்கள். ஆய்வில் மனைவி தனது துணைவருடன் தனிப்பட்ட பிரச்சனை ஒன்றை 10 நிமிடங்கள் விவாதித்ததை ஆய்வாளர்கள் ஒளிப்பதிவு செய்தனர். நன்றாக சாப்பிடுவது, புதிய வேலை தேடுவது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட பிரச்சனைகள் தான் விவாதிக்கப்பட்டன. அப்போது கணவர் தனது மனைவியின் பிரச்சனைகளை களைவதற்கு அல்லது கையாள்வதற்கு எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்? என ஆய்வு செய்தனர். இங்கப்பாரு, இது உன்னுடைய பிரச்சனை. நீ பாத்துக்கோ என்ற போக்கு கொண்டிருப்பவர் ஒத்துழைக்காத கணவராக கருதப்பட்டார். இவ்வளவு தானா? நான் உனக்காக தானே இருக்கிறேன். உனக்கு நான் எப்படி உதவனுமுன்னு சொல்லு? செய்யிறேன் என்ற போக்கு கொண்டிருந்தோரை ஒத்துழைக்கின்ற கணவராகவும் மதிப்பீடு செய்தனர். மேலும், பயிற்சி பெற்ற திறமைசாலிகள், ஆய்வில் பங்குகொண்ட மனைவிமார்களின் முக அழகை வைத்து 82 தம்பதியரையும் மதிப்பிட்டனர். அவர்களில் பத்தில் மூன்று பகுதியினர் அழகான மனைவியையும், மேலும் மூன்று பகுதியினர் அழகான கணவனையும் பிறர் சமநிலை அழகையும் பெற்றிருந்ததாக மதிப்பிடப்பட்டனர்.

ஆய்வின் முடிவில், பொதுவாக பார்த்தால் அழகான மனைவியை கொண்டிருந்த தம்பதியர் ஒருவொருக்கொருவர் ஒத்துழைப்பு காட்டினர். இதில் கணவர் தனக்கு கிடைப்பதற்கு மேலான அதாவது அழகான மனைவி கிடைத்துள்ளதாக எண்ணுகிறார். அந்நிலையை தொடர்ந்து பேணுவதற்கு அதிகமாக உழைக்கவும் செய்கிறார். அடுத்ததாக, அழகான கணவரை கொண்ட தம்பதியருக்கிடை ஒத்துழைப்பு குறைவாக இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த கணவருக்கு தற்போதைய தனது மனைவியை விட மேலும் அழகான துணை எப்போதும் பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே பெற்றிருக்கின்ற துணைவரில் அதிக திருப்தியடையாமல் இருப்பார். பலவேளைகளில் திருமணம் வரை உறவை தொடர முடியாத சூழ்நிலைக் கூட உருவாகலாம். ஆய்வின் அடிப்படையாக, கணவனின் உடல்ரீதியான அழகை மனைவி முக்கியமாக கொள்ளாமல், தன்னோடு ஒத்துழைக்கும் கணவரை தான் தேடுகின்றனர் என்று எண்பித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க மறுபுறம் திருமணத்திற்காக பெண்கள் தங்கள் அழகை செயற்கையாக வளர்க்கும் நிலை வளர்ந்து கொண்டிருப்பதை அண்மையில் News Week என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. தங்களது பற்களை நேராக்குதல், முக அழகு செய்தல் மற்றும் அதிவுயர் உணவு கட்டுபாடு ஆகியவை இந்த திருமணத் தயாரிப்பில் அடங்குகின்றன. 70 விழுக்காடு பெண்கள் எடையை குறைப்பததோடு, 20 விழுக்காட்டினர் எடையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 20 விழுக்காட்டினர் உச்சக்கட்ட உணவுக்கட்டுபாடுகளை மேற்கொள்ளுகின்றனர். அதாவது மருந்துகள் மூலம் குடலில் உள்ள கழிவுகளை வெளியாக்குதல், சாப்பாட்டிற்கு பிறகு வாந்தி எடுத்தல், பசியை போக்கி சாப்பிடாமல் இருக்க புகைபிடித்தல் போன்ற உணவுக்கட்டுபாட்டு முறைகளை கையாளுகின்றனர். இந்த வகை திருமண தயாரிப்பு முறை, பிரிட்டனில், 10 வார எடைக்குறைப்பு பயிற்சி திட்டங்களோடு, தனிப்பயிற்சியாளர், அழகு படுத்துபவர், தலைமுடி திருத்துபவர், ஊட்டசத்து வல்லுநர் முதலியோரை அறிமுகப்படுத்தும் அளவுக்கு பிரபலமாக உள்ளது.

You & Your wedding என்ற இதழ் நடத்திய ஆய்வில் திருமணத்திற்காக 91 விழுக்காட்டினர் உடல் எடையை குறைக்கின்றனர். 7 விழுக்காட்டினர் மூக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக்கும், 8 விழுக்காட்டினர் உறுப்புகளை பெரிதாக்கவும், 5 விழுக்காட்டினர் உறுப்புகளை சிறிதாக்கவும் திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வித தயாரிப்பை ஒட்டிய வணிகத்தனமான அனைத்து செயல்களும் திருமண தயாரிப்பு ஒரு சமூக கட்டாயம் என்ற நிலையை உருவாக்கி வருகிறது. இந்த பயிற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், பெண்கள் அழகாக இருக்க முடியாது என்ற எண்ணம் உருவாகியுள்ளது. எனவே திருமணத்திற்கு முன்னர் எப்படியாவது இந்த தயாரிப்பை செய்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.

இவ்வாறு அழகு குறைந்த கணவரை தேர்ந்தொடுப்பது ஒருபுறம். அழகை கூட்ட தன்னையே வருத்திக்கொள்ளும் முறை மறுபுறம். அது சரி!

அழகு தான் வாழ்வா, இல்லை இல்லை குணம் தான் அழகு

இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும்

ஒன்றுபட்டு, ஒத்துழைத்து பிறர்நலம் பேணினால்

வாழ்வே அழகு தான்.