இன்று பிற்பகல் 2.28மணிக்கு, ஹு சிந்தாவ், சியாங் சேமின், வூ பாங்கோ, வென் சியாபாவ், சியா சிங்லின், லீ சாங்சுன், ஷி ச்சின்பீங், லீ க்ச்சியாங், ஹே கோச்சியாங், சோ யூங்காங் உள்ளிட்ட சீனத் தலைவர்களும், சீனாவின் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களும், சிச்சுவான் மாநில கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இன்று விடியற்காலை, பெய்சிங் தியே ஆன் மன் சதுக்கத்தில் வழக்கம் போல் கொடி ஏற்றும் விழா நடைபெற்ற பின், உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
இன்று முற்பகல், சீனாவிலுள்ள 80 நாடுகளின் தூதர்களும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் சீன வெளியுறவு அமைச்சகத்துக்குச் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தவிர, ஹாங்காங் மற்றும் மகௌ சிறப்பு நிர்வாக பிரதேசங்களிலுள்ள அரசு அமைப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. பிற்பகல் 2.28மணிக்கு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புதவிப் பணியில் ஈடுபடுகின்ற ரஷியா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரின் சர்வதேச மீட்புதவிக் குழுக்களும் சீன மக்களுடன் இணைந்து மௌன அஞ்சலி செலுத்தின.
இன்று 12மணி வரையிலான புள்ளிவிபரங்களின் படி, வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான், கான்சூ, சான்சி, ச்சுங்ச்சிங், யுன்னான், ஜுபெய், ஹெனான், ஹுனான் மாநிலங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34073 ஆக உயர்ந்துள்ளது. 2இலட்சத்து40ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். மே 19,20,21 ஆகிய மூன்று நாட்களை, நாடு முழுவதும் துக்கம் அனுசரித்து அஞ்சலி செலுத்தும் நாட்களாக சீன அரசவை அறிவித்துள்ளது.
இக்காலத்தில், சீனாவில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் தற்காலிமாக நிறுத்தப்படும். மேலும், முழு நாட்டிலும் சீனாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள சீன நிறுவனங்களில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. பொழுது போக்கு நடவடிக்கை அனைத்தும் நிறுத்தப்படுள்ளன.
|