சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சீனாவின் பல்வேறு துறையினர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தொடர்ந்து உதவித் தொகையையும் பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
நேற்று நண்பகல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள 123 மாபெரும் அரசு சார் தொழில் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடை தொகை 93 கோடியே 20 இலட்சம் யுவானை தாண்டியது. 10 கோடியே 30 இலட்சம் யுவான் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களையும் அவை வழங்கின.
திபெத் மரபுவழி புத்தமத துறவிகள், இந்நிலநடுக்கத்தில் அக்கறை செலுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு லாசா நகரின் துறவிகள் வழங்கிய உதவித் தொகை ஒரு இலட்சம் யுவானைத் தாண்டியுள்ளது. தவிர, திபெத்தில் பல்வேறு கோயில்கள் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தோர்களுக்கு இறைவேண்டல் நடத்தின.
|