கடந்த சில நாட்களாக, சீனச் சமூகத்தின் பல்வேறு துறையினர்கள், சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவித் தொகையையும், நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
நேற்று முற்பகல், அனைத்துச் சீனத் தொழிற்சங்கச் சம்மேளனம் அவசரமாக கொள்வனவு செய்த ஒரு கோடி யுவான் மதிப்புள்ள மீட்புதவி பொருட்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் 4 மணி வரை, சீனாவின் பல்வேறு நிலை தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும், 21 கோடியே 40 இலட்சம் யுவான் உதவியாக வழங்கியுள்ளனர்.
நேற்று பிற்பகல் 5 மணி வரை, சீன கட்டுமான வங்கி, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 7 கோடியே 2 இலட்சத்து 60 ஆயிரம் யுவான் உதவியாக வழங்கியுள்ளது.
நேற்று வரை, மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசம் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைகள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கிய உதவியின் மதிப்பு 12 கோடி patacaவைத் தாண்டியுள்ளது.
தென்கிழக்கு சீனாவின் ஃபூச்சியான் மாநிலத்தின் பல்வேறு தைவான் தொழில் நிறுவனங்கள் மற்றும் உடன்பிறப்புகள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சுமார் 4 கோடி யுவான் உதவியாக வழங்கியுள்ளனர்.
|