• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 09:10:41    
பான் ஹூ என்ற நாய்

cri
காவ்ஷின் என்ற அரசன் வாழ்ந்த காலத்தில் அவனது அரண்மனையில் ஒரு மூதாட்டி இருந்தாள். ஒருநாள் அவளுக்கு காதில் வலியேற்பட, மருத்துவரைச் சென்று பார்த்தாள் மூதாட்டி. மருத்துவர் அவள் காதிலிருந்த புழு ஒன்றை வெளியே எடுக்க அவளது காது வலி நீங்கியது. மூதாட்டியின் காதிலிருந்து நீக்கிய அந்த புழுவை ஒரு குடுவையில் போட்டு மூடினார் மருத்துவர். இந்தப்புழு ஒருநாள் திடீரென ஒரு நாயாக மாறியது. பின்னாளில் இந்த நாய் பான் ஹு என்று பெயர் சூட்டப்பட்டு அரண்மனையில் வளரத் தொடங்கியது.
இதே காலத்தில் வூ நாடோடிகள் அரசனின் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைக்குள் படையெடுக்கத் தொடங்கினர். வலிமை கொண்டவர்களாக இருந்த இந்த வூ நாடோடிகளை வெல்ல அனுபப்பட்ட தளபதிகள் தோல்வியை தழுவியவர்களாக திரும்புவதை கண்ட அரசன் சோர்வும், விரக்தியும் அடைந்தான். எனவே இந்த கொடுமைக்கு தீர்வு காணும் வகையில், வூ நாடோடிக்குழுவின் தலைவனது தலை கொய்து வருபவருக்கு, ஆயிரம் பொற்காசுகளும், ஆயிரம் குடும்பங்கள் கொண்ட குறுநிலப்பகுதியும், தனது கடைக்குட்டி மகள் இளவரசியையும் கொடுப்பதாக அறிவித்தான் அரசன் காவ்ஷின்.
அரசனின் இந்த அறிவிப்பு பரவத்தொடங்கியது. ஆனால் யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது. நாய் பான் ஹூ ஒருநாள் காலை அரண்மனைக்குள் ஒரு மனித தலையை வாயில் கவ்வியபடி வர, அந்த தலைக்கு சொந்தக்காரன் வூ நாடோடிகளின் தலைவன் என்பதை அறிந்து அதிர்ச்சியில் விக்கித்து நின்றான் அரசன் காவ்ஷின். இந்தத் தலையை கொய்து வருபவனுக்குத்தானே ஆயிரம் பொற்காசுகளும், ஆயிரம் குடும்பங்கள் கொண்ட குறுநிலப்பகுதியும், தனது கடைக்குட்டி மகள் இளவரசியையும் கொடுப்பதாக அரசன் அறிவித்தான். ஆனால் அதை வெற்றிகரமாக செய்தது ஒரு நாய். என்ன செய்வது என்று அரசன் விழிக்க, அவனது அமைச்சர்கள் " அரசே ஒரு நாய்க்கு உங்கள் மகளை மனைவியாக பரிசளிப்பது என்ன, பொற்காசுகளையோ, குறுநிலப்பகுதியையோ கூட தரக்கூடாது. நாய் செய்தது ஒரு அருஞ்செயல் என்றாலும் அதற்கு எந்த வெகுமதியும் த்ரவேண்டியதில்லை" என்றனர். ஆனால் அரசனின் இளைய மகள் இதைக் கேட்டு எதிர்ப்பு தெரிவித்தாள். தன் தந்தையிடம் " அரசே நீங்கள்தான் என்னை பரிசாக தருவதாக அறிவித்தீர்கள். இந்த நாயும் இந்த செயலை செய்து நமது நாட்டை ஆபத்திலிருந்து நீக்கியுள்ளது. இது நாயின் அறிவாற்றலால் அல்ல வானகத்தின் விருப்பத்தால் நடந்திருக்கவேண்டும். அரசர்களும், வெற்றியாளர்களும் சொன்ன வாக்கை காப்பாற்றவேண்டும். உங்கள் மகளேயென்றாலும் ஒரு பெண்ணை காப்பாற்றுவதற்காக, மக்கள் முன்னிலையில் அளித்த வாக்கை நீங்கள் மீறக்கூடாது" என்றாள் இளவரசி.
அரசனும் வேறுவழியின்றி தன் மகளின் வார்த்தைக்கு மதிப்பளித்து, தனது வாக்கை நிறைவேற்றினான். நாய் பான் ஹூவுடன் தன் மகளை அனுப்பி வைத்தான். இளவரசியை தெற்கேயுள்ள மரங்களும் செடிகளும் நிறைந்து காணப்பட்ட மனித நடமாட்டமே இல்லாத மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றது நாய் பான் ஹூ.
அரச உடைகளை அகற்றி ஒரு எளிய அடிமைபோல் உடை அணிந்து நாய் பான் ஹூவுடன் நடந்தாள் இளவரசி. மலையின் ஒரு பள்ளத்தாக்கில் ஒரு குகையில் நாய் பான் ஹூவும், இளவரசியும் வசிக்கத் தொடங்கினர். அரசன் காவ்ஷின் தனது மகளை பிரிந்த துயரம் நெஞ்சை அழுத்த, மகளை தேடி ஆள் அனுப்பினான். ஆனால் எப்போதெல்லாம் ஆட்கள் அவளை தேடி சென்றார்களோ, அந்த மலைப்பகுதி அதிர, கருமேகங்கள் சூழ, கடும் மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. இளவரசியை கண்டுபிடிக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மூன்று ஆண்டுகள் கடந்தோட, இளவரசி ஆறு ஆண்குழந்தைகளையும், ஆறு பெண் குகழந்தைகளையும் ஈன்றெடுத்தாள். நாய் பான் ஹூ இறந்த பின், இந்த ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டனர். மரப்பட்டைகளில் ஆடை செய்து, அதை விதைகள் கொட்டைகளைக் கொண்டு நிறமாக்கி, உடுத்தி மகிழ்ந்தனர். அவர்கள் அனைவருக்கும் வால் இருந்தது. பின்னாளில் இக்குழந்தைகளின் தாயான இளவரசி அரண்மனைக்கு சென்று தன் தந்தையான அரசனிடம் நடந்ததையெல்லாம் கூறினாள். அரசன் ஆளனுப்பி தன் மகளின் குழந்தைகளை அழைத்து வரச்செய்தான். இந்த முறை மழை, வெள்ளமென எந்த தடையும் ஏற்படவில்லை.
அவர்களது ஆடைகள் மட்டியான நிறமும் அவர்களது பேச்சு காட்டுவாசிகளை போன்றும் இருந்தன. மலைகளை விரும்பிய அவர்கள் நகரங்களை வெறுத்தனர். அரசன் காவ்ஷின் அவர்களை மகிழ்விக்கும் முகமாய் மலைப்பாங்கான, சதுப்பிநிலமாயிருந்த பகுதியை பரிசளித்தான். மின்னாளில் அவர்கள் மான் நாடோடிகள் என்று அழைக்கப்பட்டனராம்.