மே 23ம் காலை 10மணி வரை, சிச்சுவான் மாநிலத்தில் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான தொடர்புடைய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளின் நிவாரண உதவித்தொகை 2கோடியே 5லட்சத்து 50ஆயிரம் அமெரிக்க டாலராகும்.
அண்மையில், ஆஸ்திரேலியா, இத்தாலி, கியூபா, துர்க்மேனிஸ்தான், அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி அலுவலகம் முதலிய சர்வதேச நிறுவனங்களும் வெளிநாடுகளும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீட்புதவித்தொகை மற்றும் பொருட்கள், மருத்துவத் துறையிலான உதவி ஆகியவற்றை வழங்கின.
23ம் நாள், 9லட்சத்து 50ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மீட்புதவிப் பொருட்களை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கியது. இதற்கு முன், சர்வதேசச் செஞ்சிலுவை சங்கம் மூலம், ஆஸ்திரேலிய அரசு 9லட்சத்து 50ஆயிரம் அமெரிக்க டாலரை வழங்கியுள்ளது என்று தெரிய வருகின்றது.
அதே நாள், சீனாவுக்கு இத்தாலிய அரசு வழங்கிய 33லட்சம் யூரோ மதிப்புள்ள பொருட்களும் நிதித்தொகையும் சிச்சுவானின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சென்றடைந்தன.
22ம் நாள் காலை, அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி அலுவலகம் மீண்டும் வழங்கிய 8லட்சத்து 15ஆயிரம் மதிப்புள்ள மீட்புதவிப் பொருட்கள் சிச்சுவான் மாநிலத்தை சென்றடைந்தன.
தவிரவும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான துர்க்மேனிஸ்தானின் மீட்புதவிப் பொருட்கள் கான் சு மாநிலத்தின் லான் ச்சோ நகரின் ச்சோங் ச்சுவான் விமான நிலையத்தை சென்றடைந்தன.
|