• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-28 09:13:05    
கொல்லன் செய்த வாள் 

cri

ச்சூ என்ற நாட்டை ஆண்டுவந்த அரசன், கான்ஜியாங் மோயா என்ற கொல்லனிடம் தனக்கு 2 வாட்கள் செய்து தரும்படி ஆணையிட்டான். மூன்றாண்டுகள் ஆகியும் கான்ஜியாங் மோயா இரண்டு வாட்களை செய்து தன்னிடம் அளிக்காததால் கோபமடைந்த அரசன், அவனை கொன்றுவிட எண்ணினான். கொல்லன் கான்ஜியாங் மோயா ஒருவழியாக ஆணொன்றும் பெண்ணொன்றுமாக இரண்டு வாட்களை செய்து முடித்தான். மகப்பேற்று நிலையில் இருந்த தன் மனைவியிடம் " அரசன் கேட்ட இரண்டு வாட்களை செய்ய மூன்றாண்டுகள் எடுத்துக்கொண்டேன் என்பதால் கடுங்கோபமுற்றிருக்கிறான். அவனை காண செல்லும்போது என்னை அவன் கொல்வது உறுதி. நீ ஒரு மகனை ஈன்றால், அவன் வளர்ந்தபின், வெளியே சென்று தெற்கேயுள்ள மலையை பார்த்து நின்றால் அங்கே ஒரு குன்றின் மேல் தேவதாரு மரம் ஒன்று வாளை சுமந்தபடி நிற்பதை தெரியும் என்று சொல்" என்று கூறினான்.
பின் அரசனிடம் தான் செய்த இரண்டில் பெண் வாளை எடுத்துச்சென்று ஒப்படைத்தான். ஆணொன்றும் பெண்ணொன்றுமாக தான் செய்யும் படி ஆணையிட்டதில் பெண் வாள் மட்டும் இருப்பதை கண்டு கோபமடைந்த அரசன், கொல்லன் கான்ஜியாங் மோயாவை கொன்றான்.


இதனிடையில் கான்ஜியாங் மோயாவின் மனைவி ஒரு ஆண்குழந்தையை பெற்றாள். அவனுக்கு ச்சு என்று பெயரிடப்பட்டது. காலம் உருண்டோட நன்றாக வளர்ந்த ச்சு ஒருநாள் தன் தாயிடம் "என் தந்தை எங்கே" என்று கேட்க, " உன் தந்தை ஒரு கொல்லன். தான் செய்யும்படி உத்தரவிட்ட இரண்டு வாட்களை தயாரிக்க மூன்றாண்டுகள் ஆனதால் உன் தந்தையை கொன்றான் ச்சூ நாட்டு அரசன். ஆனால் அரசனை காண சொல்வதற்கு முன் உன்னிடம் ஒன்றை சொல்லுமாறு சொன்னார் உன் தந்தை" என்று தன் கணவன் சொன்ன தேவதாரு மரம் மற்றும் வாள் பற்றி மகனிடம் சொன்னாள் ச்சுவின் அன்னையும், கொல்லன் கான்ஜியாங் மோயாவின் மனைவியுமான அவள்.
தாயிடம் தந்தை சொன்னதை மனதில் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று தெற்கே பார்த்தான் ச்சு. அங்கே மலையேதுமில்லை. அவன் கண்டதெல்லாம், ஒரு கல்மேடையில் அமைந்த தேவதாரு மரத்தூண் மட்டுமே. அதை கோடரி கொண்டு வெட்டியபோது மரத்தூணிலிருந்து தன் தந்தை வைத்த ஆண் வாளை கண்டெடுத்தான் ச்சு. பின் அவன் மனதில் தன் தந்தையை கொன்ற அரசனை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தீவிரமாயிருந்தது.


மறுபுறத்தில் ச்சூ நாட்டு அரசன் உறக்கத்தில், அகன்ற புருவங்களை கொண்ட ஒரு சிறுவன் தன்னை பழிவாங்க வருவதை போல் கனவு கண்டான். உடனே அந்த சிறுவனின் தலையை கொய்து வருபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கப்படுமென அறிவித்தான். அரசனின் அறிவிப்பை கேட்டறிந்த ச்சு பதுங்குவதற்காய் மலையை நோக்கி சென்றான். புலம்பியபடி சென்று கொண்டிருந்த ச்சுவை வழியில் வந்த ஒரு மனிதன் நிறுத்தி, "இவ்வளவு இளம்வயதில் உனக்கென்ன மனக்கசப்பு, ஏனப்பா இப்படி சோகம் நிறைந்து காணப்படுகிறாய்" என்று கேட்டான். உடனே ச்சு "ஐயா நான் கொல்லன் கான்ஜியாங்கின் மகன். ச்சூ நாட்டு அரசன் என் தந்தையை கொன்றுவிட்டான். நான் பழி வாங்கப்போகிறேன்" என்றான். இதைக் கேட்ட வழிபோக்கன் " அரசன் உன் தலையை கொய்து வருபவருக்கு ஆயிரம் காசுகள் தருவதாக அறிவித்திருக்கிறான். உன் தலையையும், வாளையும் கொடு உனக்காக நான் பழிவாங்குகிறேன்" என்று கூற ச்சுவும் அதற்கு இணங்கினான். தன் வாளால் தனது தலையை கொய்து, ஒரு கையில் வாளும், மறு கையில் தலையும் பிடித்து வழிபோக்கனிடம் ஒப்படைத்தான் ச்சு. வழிபோக்கன் அவற்றை வாங்கியபடி, தலையில்லாமல் நின்ற ச்சுவிடம் "உன்னை விடமாட்டேன், வாக்கை காப்பாற்றுவேன்" என்று கூற, ச்சுவின் தலையற்ற உடல் தரையில் விழுந்தது.


வழிபோக்கன் ச்சுவின் தலையை கொண்டு அரசனிடம் சென்றான். அரசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். வழிபோக்கன் அரசனிடம் "அரசே இந்தத் தலை துணிவுள்ளம் கொண்ட ஒரு வீரனுடையது, கொதிகலனில் அதை வேகவைக்கவேண்டும்" என்றான். அரசனும் அவன் சொன்னது போலவே செய்தான். ஆனால் மூன்று நாட்கள் கொதிகலனில் கொதித்தும் தலை கொஞ்சமும் அசராமல் மிதந்துகொண்டிருக்க வழிபோக்கன் அரசனிடம் சென்று நீங்களே வந்து கொதிகலனிலுள்ள அந்த தலையை பார்க்கும் வரை அது கரையாது என்று சொன்னான். அரசனும் ஒப்புக்கொண்டு கொதிகலனருகே வந்து எட்டி பார்க்க, வழிபோக்கன் ச்சுவின் வாளைக்கொண்டு அரசனின் தலை கொய்து தனது தலையையும் வெட்டிக்கொள்ள, கொதிகலனில் மூன்று தலைகள் மிதக்கத் தொடங்கின. பின் மூன்று தலைகளும் மூழ்கி கரைந்து கொதிநீரில் ஒன்று கலந்தன. இந்த தலைகள் கரைந்த நீர் மூன்று பங்காக பிரிக்கப்பட்டு, ஓரிடத்தில் புதைக்கைப்பட்டதாம். அந்த இடம் மூன்று அரசர் கல்லறை என்று அழைக்கப்படத் தொடங்கியது. ரூனானுக்கு வடக்கேயுள்ள யிச்சுவான் என்ற இடத்தில் இந்த மூன்று அரசர் கல்லறை இப்போது காணப்படுவதாக கூறப்படுகிறது.