இத்தகைய கொடுமையான முடிவுகளுக்கு உளநல சிக்கலான மனஅழுத்தமே காரணமாக இருக்கிறது. மனஅழுத்தம் கொண்ட எந்த மருத்துவரும் தனது மற்றும் பிறர் நலனில் அக்கறை கொண்டு உளநல மருத்துவரை நாடி செல்வதில்லை. அவ்வாறு சென்றால் மருத்தவத் தொழிலுக்கே அவர் தகுதியில்லாதவர் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் தனக்கு தனே மருந்து எடுத்துக்கொண்டு நோயை மறைக்கும் நிலைகள் நிறைந்து காணப்படுகிறது. உளநல சிக்கலுக்கான சரியான காரணங்களையும் தீர்வுகளையும் உளநல மருத்துவரோடு இணைந்து, ஆய்வுசெய்து குணப்படுத்த வேண்டுமேயொழிய வெறும் மருந்தினால் மட்டும் குணமாக்க முடியாது. இத்தகைய நிலையை களைய வருங்கால மருத்துவர்களான மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவர்களுக்கு ஏற்படக்கூடிய மனஅழுத்தங்களை அறிய செய்யும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது, ஆனாலும் தங்களுடைய தகுநிலை, நண்பர்கள் மற்றும் உறவினர்களை புண்படுத்துமோ, தன் மீதான மற்றவரது எதிர்பார்ர்ப்பு பொய்த்துவிடுமோ என்ற பல்வேறு காரணங்களால் மருத்துவர்களுக்கு இத்தகைய நோய் ஏற்பட்டால் இழிவு, அவர்களது தொழிலுக்கே முடிவு என்ற நிலை தொடர்கிறது.
கடந்த ஆண்டு டென்மார்க்கில் வெளியிடப்பட்ட ஆய்வில் 20 பிற தொழில் துறைகளில் காணப்படுவதைவிட அதாவது செவிலியர், தொழிற்சாலை பணியாளர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், நிறுவன மேலாளர்கள், கட்டிட கலைஞர்கள் போன்றோரை விட அதிகமாக மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக வெளிபடுத்தப்பட்டுள்ளது. பலவேளை, அவர் மருத்துவர், அவர்களுக்கென்ன என்று எண்ணுகின்ற நமக்கு இந்த செய்தி சற்று அதிர்ச்சி தரும் ஒன்றுதான். ஒவ்வொரு தொழிலிலும் பல்வேறு சிக்கல்கள் மறைந்து கிடக்கும் என்பார்கள். அவற்றை மனிதம் காக்கும் உத்திகளோடு வென்றெடுப்பது முக்கியம். மருத்துவ துறையில் மருத்துவரே நோயாளியானால் மருத்துவம் பெறுவதில் குறிப்பாக உளநல மருத்துவம் பெறுவதில் உள்ள இன்னல் அவர்களது உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு இட்டுச்செல்கிறது என்றால் சீர்மிகு நடவடிக்ககைகள் அவசரமாக தேவை. மருத்துவர்களும் மனிதர்கள் தானே. 1 2
|