• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-18 09:43:53    
அரசகுமாரி

cri

வூ என்ற நாட்டை ஆண்ட அரசன் ஃபூ ச்சாக்கு மிகவும் அழகான, அறிவார்ந்த ஒரு மகள் இருந்தாள். 18 வயது நிரம்பிய அந்த இளம்பெண், அரசகுமாரியின் பெயர் ஸு யூ. 19 வயது இளைஞன் ஹான் ஷுங் மீது காதல் வயப்பட்டாள். இளவயதிலேயே கல்வியில் சிறந்த, அறிவாளியாக இருந்த ஹான் ஷுங் மீதான் அரசகுமாரி ஸு யூவின் காதல் ரகசியமானது. சாதாரணமானவனாக இருந்தபோதிலும் ஹான் ஹுங் மீதான உண்மையான காதலின் காரணம் அவனையே திருமணம் செய்துகொள்ள வாக்களித்தாள் அரசகுமாரி. ஹான் ஷுங் கல்வியை தொடரும் முகமாய் வடக்கு நோக்கி பயணிக்க நேர்ந்தது. வீட்டை விட்டு புறப்படுமுன் தன் பெற்றோரிடம் அரசகுமாரி மீதான தனது காதலை கூறிய ஹான் ஷுங், அரசனிடம் சென்று பேசி திருமணம் நிச்சயிக்குமாறு கேட்டுக்கொண்டான். அவனது பெற்றோரும் மகனின் விருப்பம் நிறைவேறவேண்டும் என்பதற்காக அரசனிடம் சென்று பெண் கேட்டு சம்பந்தம் பேசினர். ஹாங் ஷுங்கின் பெற்றோர் கூறியதை, அவர்கள் தன் மகள், அரசகுமாரியை பெண் கேட்டு வந்ததை கேட்டு அரசன் கடுங்கோபமுற்றான். முடியாது என்று மறுத்து கூறி அவர்களை விரட்டினான். அவன் எங்கோ ஓரிடத்தில் அவன் மீது மையல் கொண்ட தான் இங்கே தனிமையில் என்ற பிரிவுத்துயரைவிட, தன் அன்புக்காதலனை மணக்க தன் தந்தையாகிய அரசன் மறுத்துரைத்தது வேதனையளிக்க, அரசகுமாரி ஸு யூ சில நாட்களிலேயே மனமுடைந்து சோகத்திலேயே உயிர்நீத்தாள்.
தலைநகரின் மேற்கு வாயிலுக்கு வெளியே அரசகுமாரி அடக்கம் செய்யப்பட்டாள். நாட்கள் மாதங்களாகி, மூன்றாண்டுகள் உருண்டோடின.
ஹான் ஷுங் கல்வி முடித்து ஊர் திரும்பினான். வீடு திரும்பியதும் தன் பெற்றோரிடம் தன் திருமணம் பற்றி பேசினார்களா என்று விசாரித்த மகனை பார்த்து சோகத்துடன் " பெண்கேட்டு சென்றதும் அரசன் கோபமடைந்தான். அரசகுமாரி, வேதனையில் மனமுடைந்து, இறந்துவிட்டாள். இப்போது அவள் கல்லறையில்" என்று கூறினார்.
ஆசைக்காதலி அரசகுமாரி ஸு யூ இறந்த சோகம் நெஞ்சை பிசைய, அவளது கல்லறைக்கு சென்ற ஹான் ஷுங், அவளுக்கு இரங்கல் செய்யும் விதமாய் பலி சடங்குகளை செய்தான். காதலன் தனது கல்லறையில் அழுதுகொண்டிருப்பதை கண்ட அரசகுமாரி ஸு யூ அவன் முன் தோன்றி, " நீ கல்விக்காக வெளியூர் செல்லும் முன் உன் பெற்றோரை விட்டு என் தந்தையிடம் திருமணம் பேசச் சொன்னாய். நாம் நமது ஆசை நிச்சயம் நிரைவேறும் என்று நினைத்தோம். ஆனால், விதி நமக்கு எதிராக செயல்பட்டது" என்று கூறினாள். பின் அவன் மீது தீர்க்கமான பார்வையை வீசியபடி தலை தொங்கவிட்டு, பாடத்தொடங்கினாள்.


தெற்கு மலைகளில் காக்கைகள் இருந்தன
வடக்கே வலைகள் விரிக்கப்பட்டிருந்தன
பொறிகள் வைக்கப்பட்டன ஆனால் வீனாய்
பறவைகள் வெகுதொலைவு பறந்தோடிவிட்டன
மகிழ்வோடு உன்னை பின் தொடர்ந்திருப்பேன்
ஆனால் தடைகள் என்னை வழிமறித்தன
மனமுடைந்து நலமிழந்து மடிந்துபோனேன்
மஞ்சள் நிற மண்ணுக்குள் புதைந்துபோனேன்
சோகமான என் விதி பாவமானது
நாளந்த அழுகையே மிச்சம்
பீனிக்ஸ் பறவை தலைவி அரசி
பிற அற்பப்பறவைகள் போற்றக்கூடியது
தன் இணையை பிரிந்த பீனிக்ஸ்
முழு மூன்றாண்டுகள் அழுது புலம்பும்
மற்றொரு இணையை நாடாது பீனிக்ஸ்
வான் நிறைய பாடல் பறவைகள் இருப்பினும்
எளிமையான தோற்றத்தில் இருந்தாலும்
என்னவனே உன் முன் நான் தோன்றுகிறேன்
பிரிவுத்துயரில் நீ பிளவுண்டுபோனாலும்
பிரிக்கமுடியாமல் என்னை நெஞ்சில் சுமக்கிறாய்
சோகமாய் பாடி முடித்த ஸு யூ தாங்காத சோகத்தில் அழுதாள், பின் ஹான் ஷுவையும் தன்னோடு கல்லறையில் இருக்கும்படி கோரினாள்.
இதைக் கேட்ட ஹான் ஷு அவளிடம், இறந்தோரும், வாழ்வோரும் அவரவர் பாதையில் செல்லவேண்டும். பொருத்தமில்லாததுதான் என்றாலும் அதை புறக்கணிக்க துணியேன் என்று கூறினான்.
அதைக் கேட்ட ஸு யூ "இறந்தோருக்கும் வாழ்வோருக்கும் வெவ்வேறு பாதைகளுண்டென்பது எனக்கு தெரியும். ஆனால் நீ இங்கிருந்து இப்போது சென்றுவிட்டால் ஒருபோதும் நாம் சந்திக்க முடியாது. நான் ஆவியாக இருப்பதால் உன்னை துன்புறுத்துவேன் என்று நினைக்கிறாயா. நான் நேர்மையாகச் சொல்கிறேன் என்னை நம்பமாட்டாயா?" என்று கேட்க, அவளது வார்த்தைகளில் கட்டுண்ட ஹான் ஷு கல்லறையில் இருந்தபடி மூன்று இரவும் மூன்று நாளும் விருந்துண்டு களித்து, திருமணச் சடங்கும் முடித்தான். அங்கிருந்து புறப்படுகையில் அவனுக்கு ஒரு சிறிய முத்தைகொடுத்த ஸு யூ " என் பெயரும் களங்கப்பட்டது, நான் எண்ணிய வாழ்வும் இல்லாமல் போனது, வேறென்ன சொல்ல. கவனமாக இரு. அரண்மனை வழியே சென்றால் அரசனுக்கு என் நல விசாரிப்புகளை சொல்" என்று கூறி விடைகொடுத்தாள்.
ஹான் ஷு அங்கிருந்து புறப்பட்டு அரசன் ஃபூ ச்சாயிடம் சென்று நடந்ததையெல்லாம் கூறியபோது, கோபம் கொண்ட அரசன் ஹான் ஷு இறந்து போன மகளை அவமதித்து பேசுவதாகவும், அவனை ஒரு கல்லறை திருடன் என்றும் பழித்தான். தனது மகள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அத்லிருந்து முத்தை திருடிவிட்டான் என்று கூறி அவனை கைது செய்ய உத்தரவிட்டான். ஆனால் அகப்படாமல் தப்பியோடிய ஹான் ஷு நேராக கல்லறைக்குச் சென்று ஸு யூவிடம் நடந்ததை சொன்னான்.
கவலை வேண்டாம் நானே அரசனிடம் பேசுகிறேன் என்று அவனிடம் கூறிய ஸு யூ பின் அரசனும் தன் தந்தையுமாகிய ஃபூ ச்சாயின் முன் தோன்றி
"ஹான் ஷு என்னை மணமுடிக்க வேண்டி கேட்டபோது மறுத்தீர்கள். அவப்பெயர் சுமந்து, மனமுடைந்து இறந்து போனேன். வெகு தொலைவிலிருந்து ஊர் திரும்பிய ஹான் ஷு நான் இறந்த செய்தி கேட்டு என் கல்லறைக்கு வந்து எனக்கு மரியாதை செய்தான். அவனது அன்பையும் நேர்மையையும் எண்ணி நான் அவன் முன் தோன்றி அவனிடம் முத்தை கொடுத்தேன். அவன் திருடனல்ல. தயவு செய்து அவனை தண்டிக்க வேண்டாம்" என்று வேண்டினாள்.
மகள் அரசன் முன் தோன்றிய சேதி கேட்டு அரசி விரைந்தோடி வந்து அன்புடன் அணைக்க முயன்றாள். ஆனால் காற்றோடு காற்றோடு மறைந்தாள் அரசகுமாரி ஸு யூ.