  பலருக்கு அலுவலகம் மகிழ்ச்சியாக இருக்காது. வீட்டிலிருந்து அலுவலகம், அங்கிருந்து வீடு என்று தங்கள் பாதைகளை சுருக்கி கொள்வோருக்கு நிச்சயம் அப்படிதான் இருக்கும். அண்மையில் பெய்சிங்கில் அரங்கேற்றப்பட்டு தற்போது நடத்தப்படும் நாடகம் அலுவலகப் பணிகளிலான மகிழ்ச்சி, அக்கறை, அர்ப்பணம், துக்கம் முதலியவற்றை அரங்கேற்றி, அலுவலகப் பணியின் சுவையான பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. அலுவலகப் பணியாளர்கள் பற்றிய "பெட்டி" என்ற நாடகம் பார்வையாளருக்கு நகைச்சுவை விருந்தாகவும், கண்களை நனைய வைப்பதாகவும் அமைந்து அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இது பிரபலமான காட்டூன் தொடரான Zhang Xiaohe யை தழுவியதாகும்.

அலுவலக விவகாரங்களுடன் காட்டூன் படமாக 2006 ஆண்டு இறுதியில் இணையதளங்களில் இது வெளியான போது அலுவலக பணியாளர்கள் பலரையும் கவர்ந்தது. மக்கள் பெட்டி போன்ற கட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அலுவலகம், அலுவலக கட்டிடம், குடியிருப்பு வீடு, கார், சுரங்க இருப்புப்பாதை, மாடி ஏறும் மின்தூக்கி, மேசை, நாற்காலி, புத்தகங்கள் அனைத்தும் பெட்டி போன்றவையே. எல்லாம் பெரிய பெட்டியில் உள்ள சிறிய பெட்டிகளே. இந்த ஏதாவது பெட்டியிலான வாழ்க்கையை தான் மக்கள் அனுபவிக்கின்றனர் என்ற கருத்தை இந்த நாடகம் சுவையாக வழங்குகிறது. அதன் கதாநாயகன் அலுவலக பணியாளராக இருக்கிறார். அங்கு இளைய அல்லது கீழ்நிலை பணியாளர் சுரண்டப்படுவதையும் அதனை சமாளித்து எதிர்கொள்ளும் முறையையும், நகைசுவையாகவும், கண்ணீர் ததும்பவும் எடுத்து கூறியுள்ளனர். அன்றாட வாழ்வில் அத்தகைய சூழலை அனுபவித்தவர்களின் உள்ளத்தை இது ஆழமாக தொடுவது இயற்கை தான். நாடகத்தை தொடராக நடத்துவதில் பெட்டி என்ற நாடகம் முதல் முயற்சி. இன்னும் மேலதிக தொடர்களை எழுதி சீனாவின் பலப்பகுதிகளில் அதனை பரவல் செய்யப்போவதாக அதன் தயாரிப்பாளர் Guo Yan தெரிவித்துள்ளார். அலுவலகத்தை மகிழ்ச்சியான தளமாக அதாவது பெட்டியாக உருவாக்கலாமே!
|