• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-30 09:46:25    
பன்மொழிப் புலமை

cri
காதால் கேட்பவற்றையும், கண்ணால் பார்ப்பவற்றையும் அப்படியே மனதில் பதிவு செய்து கொள்வதில் குழந்தைகளுக்கு மாபெரும் ஆற்றல் உண்டு. பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் உள்வாங்கி பதிவுசெய்வதில் கில்லாடிகள். வகுப்பறையில் ஆசிரியர், வானம் என்ன நிறத்தில் இருக்கும், வரைந்து காட்டுங்கள் என்று மாணவ மாணவியரிடம் சொன்னார். அவர்கள் அனைவரும் நீல வண்ணத்தில் வானத்தை வரைந்து, ஆசிரியரிடம் காட்டி பாராட்டு பெற்றனர். மாணவன் ஒருவன் மட்டும் கறுப்பு வண்ணமடித்து ஆசிரியரிடம் கொண்டு காட்டினான். காரணம் கேட்ட போது, எங்கள் வீட்டு சன்னல் வழியாக பார்த்தால் வானம் கறுப்பாகத் தான் தெரிகிறது என்று பதிலளித்தான். விசாரித்தபோது அவன் சொன்னது சரியாக இருந்தது. அதாவது அவனுடைய வீடு தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்திருந்தது. அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கரும்புகை காரணமாக வானம் அவனுடைய வீட்டிலிருந்து பார்த்தால் கறுப்பாக தெரிகிறது என்பதைத்தான் மாணவன் குறிப்பிட்டான் என்று அறிய முடிந்தது. உள்ளதை உள்ளபடி, பார்த்ததை பார்த்தபடி, கேட்டதை கேட்டப்படி பதிவு செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் தான் குழந்தைகள். பிறந்த குழந்தைகள் அனைத்தும் தன்னை சுற்றி கேட்கும் ஒலிகளை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் பதிவு செய்து கொள்ளும் திறன் கொண்டுள்ளன. இந்த திறனே, நாளாக நாளாக குழந்தைகள் தங்களது தாய்மொழியிலான வார்த்தைகளின் ஓசைகளோடு தாம் கேட்ட ஒலிகளை இணைத்து, இனங்கண்டு, தாய்மொழியை உச்சரிக்க பெரிதும் உதவுகிறது.

பிறந்தது முதல் ஒன்பது திங்கள் வரையில் ஒலியை இனம் கண்டு கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு மிக அதிகமாக இருக்கிறதாம். அப்போது தாய்மொழி அல்லாத பிற மொழிகளை கேட்கும் வாய்ப்பு பெறும் குழந்தைகள், பள்ளிப்பருவத்திலும், வளர்ந்த பின்பும் பிற மொழிகளை எளிதாக கற்றுக்கொள்ளும் திறனை அதிகமாக பெற்றிருப்பர் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒலிகளை பதிவுசெய்யும் காலத்தில் அதாவது பிறந்த குழந்தையின் முதல் ஒன்பது திங்கள் காலத்தில், தாங்கள் கேட்கும் அனைத்து மொழிகளிலுமான முக்கிய ஒலிகளை அறிந்து பதிவுசெய்து கொள்ளும் தன்மையை குழந்தைகள் கொண்டிருக்கின்றன என்று சண்டே டெலகிராப் இதழ் தெரிவித்தது.

இவ்வாறு பல மொழிகளின் ஒலிகளை கேட்டு பழகிக்கொள்வது தாய்மொழியிலான வார்த்தைகளின் ஒலியிலிருந்து மற்றவற்றை பிரித்தறிந்து கொள்ள மூளைக்கு உறுதுணையாய் இருக்கிறது. அதேவேளையில், பழக்கமி்லலாத வேறு ஏதேனும் மொழியை கற்றறிந்து கொள்வதில் சிரமங்களையும் ஏற்படுத்தும் என்கிறார்கள். பிறந்த முதல் ஒன்பது திங்கள் வரையான காலத்தில் எத்தனை மொழிகளின் ஒலிகளை குழந்தைகள் கேட்டு பழகுகின்றனரோ அத்தனை மொழிகளின் ஒலிகளையும் பிரித்தறியும் திறனை அவர்கள் அதிகமாக பெறுகின்றனர்.

முதல் ஆறு திங்களில் மொழியின் உயிரெழுத்துக்களை அறிந்து கொள்ளும் குழந்தை அடுத்த மூன்று திங்களில் மெய்யெழுத்துக்களையும் அறிந்து கொள்கின்றன. அதாவது இந்த உயிரெழுத்துகள் மற்றும் மெய்யெழுத்துகளுக்கு உரித்தான ஒலிகளை அவர்கள் இனங்கண்டு பதிவு செய்துகொள்கின்றனர். பிறந்த ஒன்பது முதல் பத்து திங்கள் காலத்திற்குள் குழந்தையின் ஒட்டுமொத்த மொழித்திறனும் தாய்மொழிக்கே முதன்மை என்பது போல, கற்றறிந்துகொள்ள தயாராகிவிடுகிறது என்று பிரிட்டன் மொழியியல் நிபுணர் நைனா காசனினா கூறுகிறார். பத்தாவது திங்களில் கேட்கின்ற ஒலிகளில் பொருட்களை குறிப்பிடுகின்ற ஒலிகளை மட்டும் உள்வாங்கிக் கொண்டு பிற ஒலிகளை புறந்தள்ளி விடுகின்ற முறையில் மூளை செயல்படுகின்றது என்று அறியும் போது, வியப்பு மேலிடுகிறது.

இவ்வாறு தாய்மொழியிலான ஒலிகளை தவிர பிற ஒலிகளை பிரித்து பார்த்து தாய்மொழியில் பொருட்களை அறிந்து தெரிந்து கொள்ளும் முறை ஆய்வு மூலம் விளக்கப்பட்டுள்ளது. வெவ்வேறான பேச்சு ஒலிகளுக்கு ஏற்ப மூளை எப்படி செயல்படுகிறது, மூளையின் எந்த பகுதியில் இந்த குறிப்பிட்ட செயல்பாடுகள் நிகழ்கின்றன, எந்த அளவில் அவை அமைகின்றன என்பனவற்றை கண்டறியும் உத்திகளை கையாண்டு நைனா காசனினா இதனை விளக்குகிறார். அயர்லாந்து மொழி பேசுபவர்களுக்கு க மற்றும் க என கொஞ்சம் அழுத்தமாகவும், அழுத்தமில்லாமலும் உச்சரிப்பதை சரியாக இரண்டு ஒலியாக அவர்களது மூளை பதிவு செய்கிறது. ஆங்கிலம் பேசுகின்றவர்களில் இந்த வேறுபாட்டை மூளை உணர்வதில்லை. அதற்கு அவரவர் தாய்மொழியில் உள்ள எழுத்துக்களின் ஒலியே காரணம். இவ்வாறு தாய்மொழி எழுத்துகளின் ஒலிகளை கேட்டறிந்துகொள்வது தாய்மொழியை நல்லமுறையில் பேசுவதற்கு உதவும் அதேவேளை, பிற மொழிகளை பயில்கின்றபோது அதன் ஒலிகளை தாய்மொழியோடு ஒப்பிட்டு, பிரித்து, புரிந்துகொள்ள வேண்டியுள்ளதால் சிக்கலாக அமைகிறது. பிரெஞ்சு மொழியிலான ஒலிகளுக்கு ஒத்த ஒலிகளை இத்தாலி மற்றும் ஸ்பானிய மொழி கொண்டிருப்பதால் ஆங்கிலேயர்களை விட இத்தாலியர்களும், ஸ்பெயின் நாட்டவரும் எளிதாக பிரெஞ்சு மொழியை கற்றுக்கொள்ள முடிகிறது.

பிரிட்டனின் இந்த ஆய்வை அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஒர் ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. குழந்தைகளை வெவ்வேறான மொழிகளை கேட்க செய்வது அதன் வாழ்வில் புதிய மொழிகளை கற்றுக்கொள்வதற்கு இன்றியமையாததாக அமைகிறது. வாரத்திற்கு ஒரு மணிநேரம் சீன மொழி கேட்ட குழந்தைகள், வளர்ந்த பின், சீன மொழியை மிக எளிதாக கற்க முடிந்ததை ஆய்வுகள் எண்பித்துள்ளன. இன்று குழந்தைகளை கண்ணின் மணிபோல பார்த்து பார்த்து, பொத்தி பொத்தி, எல்லா வசதிகளோடும் அவை வாழ வழி செய்கின்றோம். முதல் பத்து திங்கள் காலத்தில், பிறமொழி ஒலிகளை அதிகமாக கேட்க செய்தால் அவைகளின் வாழ்வில் நற்பயன் விளையுமென்றால், நாம் நிச்சமாக முயற்சி மேற்கொள்ளலாமே! இது பற்றி நமது உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் அனைவரிடமும் எடுத்து சொல்லுவோம். நாம் பெற்ற இத்தகவலின் பயனை இவ்வையகம் பெற செய்வோம்.