• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-02 09:19:23    
கொஞ்சம் திரும்பிப்பார்

cri

வெய் வம்சக்காலத்தின் ஹுவாங்ச்சு காலகட்டத்தில் துன்ச்சியு என்ற இடத்தின் வழியாக ஒருவன் குதிரையில் சென்றுகொண்டிருந்தான். அப்போது இரவு நேரம். வழியில் முயல் போன்ற ஒரு விலங்கை அவன் கண்டான். அதன் கண்கள் இரண்டும் இரு கண்ணாடிகள் போல். அவன் தொடர்ந்து செல்ல முடியாமல் குதிரையின் முன்னே மேலும் கீழுமாக குதித்து பாய்ந்து தடை செய்தது அந்த விலங்கு. பயந்து நடுங்கி அவன் குதிரையிலிருந்து கீழே விழுந்தான். அச்சத்திலிருந்த அவனை அந்த விலங்காக இருந்த பேய் பிடிக்க தாவியது. அவ்வளவுதான் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அவன் மயங்கியே போனான். கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பி அவன் தன்னிலை உணர்ந்தவனாய் கண்விழித்தபோது அந்த விலங்கு அங்கு இல்லை. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று, விட்டேன் சவாரியாக, குதிரை மீதேறி, எங்கும் நிறுத்தாமல் நெடுந்தூரம் கண்மூடித்தனமாக வந்த வழியே ஓடினான் அந்த மனிதன். ஆள் அரவமின்றி, வெறிச்சோடியிருந்த பாதையில் பல மைல்கள் கடந்து சென்ற அவன் எதிரே ஒருவன் குதிரையில் வருவதை கண்டபின் தன் குதிரையை நிறுத்தினான். அவன் முகத்தில் புன்னை மலர்ந்தது. அப்பாடா ஒரு வழியாக தன்னை போல் ஒரு மனிதனை பார்க்க வாய்ப்பு கிடைத்ததே என்ற மகிழ்ச்சியோடு எதிரில் வந்த அந்த மனிதனை நோக்கி சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். பரஸ்பர அறிமுக வார்த்தைகளும், நற்சொற்களும் பரிமாறிய பின் தனக்கு நடந்ததை தனது புதிய தோழனாக மாறிய மற்றவனிடம் பகிர்ந்துகொண்டான். பின் இப்போது துணையாக, தோழமையாக தனக்கு மற்றவன் இருப்பதை எண்ணி தாம் மகிழ்ச்சியடைவதாக புதியவனிடம் கூறினான்.


மற்றவனான எதிரே வந்த புதுமுகமும், தானும் தனியே பயணித்து வந்ததாகவும் தற்போது துணை கிடைத்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினான். மேலும் அவனை வழிகாட்டும் விதமாய் தனக்கு முன்பாக குதிரையில் செல்லும்படி கோரினான். ஆக இருவரும் புறப்பட்டனர்.
ஏற்கனவே வந்த வழியென்பதால் புதியவனுக்கு முன்பாக சென்றான் முதலாமவன். இருவரும் பேசியபடி சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரண்டாமவன், முதலாமவனை பார்த்து, " ஆமாம் அந்த பேய் எந்த உருவத்தில் இருந்தது, நீ அப்படி பயந்து நடுங்கி மயங்கி விழுந்தாய்?" என்று கேட்டான்.
அதற்கு முதலாமவன் "ஐயோ அதை ஏன் கேட்கிறாய். அது முயல் அளவில் இருந்தது. அதன் கண்கள் இரண்டு வட்டவடிவ கண்ணாடிகள் போல் மின்னின. பார்க்கவே பயங்கரமாக இருந்தது" என்றான். அதற்கு இரண்டாமவன் " ஓ. சரி என்னை கொஞ்சம் திரும்பிப்பார்" என்றான்.
முதலாமவன் திரும்பி பார்க்க, பயணியாய், புதுமகமாய் தனக்கு அறிமுகமானவன் தான் பயந்து நடுங்கிய பேய் உருவமாய், கண்கள் ஜொலித்த பயங்கர விலங்காய் மாறியிருந்தான். முன்பு செய்தது போலவே அந்த பயங்கர விலங்கின் தோற்றத்திலிருந்த பேய் அவனை நோக்கி பாய்ந்து பிடிக்க தாவியது. அஞ்சி நடுங்கி மீண்டும் மயங்கினான் அவன். எவ்வளவு நேரம் அப்படி மயங்கிக்கிடந்தான் என்பது அவனுக்கு தெரியாது. அவனது குதிரை தனியே வீடு திரும்பியதைக் கண்ட அவனது குடும்பத்தினர் அவனை தேடியலைந்து கண்டுபிடித்து வீட்டுக்கு கொண்டு வந்தனர். மறுநாள் வரை கண்விழிக்காத அவன், தன்னிலை மீண்ட பின், அச்சத்துடன் தனக்கு நேர்ந்ததையெல்லாம் குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொண்டானாம்.