• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-08 11:35:03    
வெடிமருந்து 2

cri

சீனர்கள் இப்படி தனிமங்களின் தன்மை பற்றிய அறிதலில் வெடிமருந்தை கண்டறிந்தது பற்றி குறிப்பிடுகையில், இன்னொரு முக்கிய தகவலையும் சுட்டிக்காட்டவேண்டும். இரசவாதம் எனப்படும், தனிம மாற்றங்களையும், வேதியல் ரீதியான அணுக்கரு மாற்றங்களையும் முதலில் செய்தவர்கள் சீனர்களே. அலெக்சாண்டிரியாவின் எகிப்தியர்கள் இரசவாதத்தின் முன்னோடிகளாக கூறப்பட்டாலும், அவர்களுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பேயே சீனாவில் இந்த தனிம மாற்றங்களை செய்யும் இரசவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவாம். கிமு 133அம் ஆண்டிலேயே இரசவாத வித்தைகளை சீனர்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆக, சீனர்களது நான்கு மாபெரும் கண்டுபிடிப்புகளாக திசைகாட்டி, காகிதம், அச்சுக்கலை மற்றும் வெடி மருந்து ஆகியவை போற்றப்படுகின்றன. ஆனால் அவை மட்டும்தானா சீனர்களது கண்டுபிடிப்புகள் என்றால் நிச்சயம் இல்லை.

பட்டுப்புழு வளர்ப்பு, பட்டு ஆகியவை சீனர்கள் உலகுக்கு அளித்த பரிசுகளே. அவர்களே பட்டை கண்டுபிடித்தவர்கள். இன்றைக்கு உலகில் பெரும்பாலானவர்கள் தேநீர் அருந்துகின்றனர். உலகிற்கு தேநீரை ஒரு பானமாக அறிமுகப்படுத்தியது சீனர்களே. தேயிலையை உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் சீனர்கள்தான்.

இன்றைக்குத்தானே தேநீர் அருந்தவும், வெளியே உணவு அருந்தவும் நெகிழிப் பொருட்களும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியும் நெகிழி சார் பொருட்களும் பயன்பாட்டில் உள்ளன. பல்லாண்டுகளாக, பரவலான பயன்பாட்டில் இருந்தது பீங்கான் பொருட்கள்தான். பல வண்ணப் பூவேலைப்பாடுகளுடன், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பீங்கான் பொருட்கள் இன்றளவும் உலகில் பெரிதும் விரும்பப்படுகின்றன. களிமண்ணையும் இன்ன பிற தாது வளங்களையும் சேர்த்து உருவாக்கப்படும் பீங்கான், சீனர்களின் கண்டுபிடிப்பே. தங் வம்சக்காலத்தில் கிபி 8ம் நூற்றாண்டு வாக்கில் பீங்கான் கண்டுபிடிக்கப்பட்டது. சீனக் களிமண், படிகம் மற்றும் களிக்கல் ஆகியவை கலந்து உருவாகும் பீங்கானை பற்றி பிறிதொரு நிகழ்ச்சியில் விபரமாக அறியத் தருகிறோம்.

சாலைகளை செப்பனிடும் பணியாளர்களை நாம் பார்த்திருப்போம். குறுஞ்சல்லி கற்களும், கீலும் கலந்த கலவையை ஒரு சிறிய தள்ளுவண்டியில் வைத்து கொண்டு வந்து சாலை போடும் இடத்தில் கொட்டி நிரவுவார்கள். இந்த தள்ளுவண்டிகள் பல இடங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. அதிக பளுவை சுமந்து செல்லாமல் எளிதாக தள்ளிக்கொண்டு செல்ல உதவும் இந்த தள்ளுவண்டிகளை கண்டுபிடித்தவர்களும் சீனர்கள் தான் என்று கூறுகிறார்கள். கிமு முதல் நூற்றாண்டிலேயே சீனாவில் தள்ளுவண்டிகள் பயன்பாட்டில் இருந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன.

உங்களது பணப்பையில் 1000 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 1000 ரூபாயும் எளிதாக ஒற்றைத் தாளாக, அல்லது இரண்டு 500 ரூபாய் தாள்களாக, அல்லது பத்து 100 ரூபாய் தாட்களாக இருக்கலாம், வசதிதான். 5 ரூபாய் அல்லது 1 ரூபாய் நாணயமாக 1000 ரூபாயை வைத்திருப்பது வசதியாக இருக்குமா. அவ்வளவு கனத்தோடு பணப்பையை சட்டைப்பையில் அல்லது கால்சட்டை பையில் வைத்துக்கொண்டு நடப்பதுதான் எளிதாக இருக்குமா. தாளாக இருந்தால் பணத்தை வசதியாக மடித்து, சட்டைப்பையில் கூட வைத்துக்கொள்ளலாம் அல்லவா. தாளாக நாணய பரிமாற்றத்தை அறிமுகப்படுத்தியவர்களும் சீனர்கள்தான். சீனாவில் 10ம் நூற்றாண்டு வாக்கிலேயே பரவலான பயன்பாட்டில் தாள் பணம் வந்தது.

பாஞ்சி பாயுற பட்டம், பட்டைய கிளப்புற பட்டம்...என்று கோடையில் சிறுவர்கள் பாடிக்கொண்டே பறக்கவிடும், பட்டங்கள் அல்லது காற்றாடிகளும், சீனர்களது கண்டுபிடிப்பே. கிமு 3ம், 4ம் நூற்றாண்டுகளில் சீனாவில் பட்டங்கள் பொழுபோக்காகவும், போர்க்கால ராணுவ செய்தி பரிமாற்ற வழியாகவும் பயன்படுத்தப்பட்டன.

ஓவியர், சிற்பி, அறிவியலாளர், பொறியியலாளர், வடிவமைப்பாளர் என்று பலகலை வல்லுனராக போற்றப்பட்ட லியானார்டோ டாவின்சி 15ம் நூற்றாண்டில் பாராசூட் எனப்படும் வான்குடையை வடிமைத்ததாக பலரும் குறிப்பிடுவதுண்டு. ஆனால் அவரது வான்குடை வடிவமைப்பு, தாளில் வரைந்த ஓவியமாக மட்டுமே இருந்தது, அதை அவர் பயன்பாட்டில் விட முயற்சிக்கவில்லை. ஆனால் அதற்கு முந்திய மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பேயே அதாவது 12ம் நூற்றாண்டு வாக்கிலேயே சீனர்கள் வான்குடையை பயன்படுத்தியதாக ஜோசப் நீதம் என்ற பிரிட்டன் நாட்டு அறிவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயு அடுப்பு இல்லாத வீடுகளில் அடுப்பு பற்ற வைக்க பயன்படுத்தப்படுவது தீப்பெட்டிகள்தான்.

இரண்டும் உரசிக்கொண்டாலும்

எரிந்து மடிவது தீக்குச்சிதான், பெட்டியல்ல...காரணம் தலைக்கணமா என்ற கருத்தில் நாம் கவிதை கூட கேட்டிருப்போம். தலையில் கந்தகத்தை கணமாக சுமந்த தீக்குச்சிகள் 6ம் நூற்றாண்டு வாக்கில் சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாம். 577ம் ஆண்டில் ராணுவ சுற்றிவளைப்பு ஒன்றின் போது, அரண்மனைக்குள் அகப்பட்டு கிடந்த சில மங்கையர், சமையல் செய்யவும், குளிரை போக்க வெப்பமேற்படுத்தவும் நெருப்பு மூட்ட வேண்டிய நிலையில், கந்தகத்தை தேவதாரு மரக்குச்சிகளில் பூசி, உரசி தீயுண்டாக்கினராம்.

அவ்வளவு ஏன், சிச்சுவான் மாநில நிலநடுக்கத்தை அடுத்த பேரிடர் நீக்க மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் சீனாவின் சீரிய நடவடிக்கைகளை உலகம் வியந்து பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், நிலநடுக்கத்தை பதிவு செய்யும் கருவிகள் ஏறக்குறைய 1800 சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பேயே சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தகவலும் நம்மை அசர வைக்கிறது. 2ம் நூற்றாண்டு வாக்கில் ச்சாங் ஹெங் என்ற சீன அறிவியலாளர், கணித மேதை நிலநடுக்கப் பதிவு கருவியை வடிவமைத்து உருவாக்கியதாக கூறப்படுகிறது. ஹான் வம்சக்காலப் பதிவுகளில் 132ம் ஆண்டில் அவரது இந்த நிலநடுக்கப் பதிவு கருவி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

குதிரையேற்றத்தில் கால்களை வைக்கப் பயன்படும் அங்கவடி எனும் வளையம் போன்ற மிதியடி கருவி, அரசுப்பணிகளுக்கான தேர்வுகள், அக்குபஞ்சர் என இன்னும் பலவற்றை சீனர்களின் அறிவாற்றலுக்கும், முன்னோடியாக அவர்கள் கண்டுபிடித்தவற்றுக்கும் எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். அவற்றையெல்லாம், வேறொரு தலைப்பில், மற்றொரு சமயத்தில், இன்னும் பல வியப்பான தகவல்களோடு சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் அறியத் தருகிறோம்.