கலை: வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் சோலை போல், உங்கள் எண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. க்ளீட்டஸ்: திருச்சிற்றம்பலம் அஞ்சல் என். முருகன் எழுதிய கடிதம். கடந்த ஒரு திங்கள் காலத்திற்கு மேலாக சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பை கேட்டு வருகிறேன். சீன வரலாற்றுச் சுவடுகள், அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு, தமிழ் மூலம் சீனம், விளையாட்டுச் செய்திகள், நட்புப்பாலம், நேருக்கு நேர் போன்ற நிகழ்ச்சிகள் என்னை கவர்ந்தவை. இவையனைத்தும் பொது அறிவுத்திறனை வளர்க்க ஏதுவாக உள்ளன. கலை: அடுத்து நேயர் விருப்பம் நிகழ்ச்சி பற்றி பாலக்காடு சி.வி. ராமசுவாமி எழுதிய கடிதம். மலர்ந்தும் மலராத என்ற அருமையான பாடல்கள் உட்பட இனிமையான பாடல்களை செல்வி சீதா வழங்கினார். இனிமையான, பழைய திரைப்பாடல்களை சீன வானொலியில் கேட்பது மேலும் இனிமையாக இருக்கிறது. க்ளீட்டஸ்: குருணிகுளத்துப்பட்டி சொ. முருகன் எழுதிய கடிதம். சீன தேசிய மக்கள் பேரவையின் அரசியல் கலந்தாய்வு மாநாடு பற்றிய செய்திகளை கேட்டேன். ஊழலின்றி சிறப்பாக ஆட்சி நடத்த கூட்டத்தொடரும், கலந்தாய்வும் மேற்கொள்வது, சீன அரசின் சிறப்பான பாங்கை வெளிப்படுத்துகிறது. மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன். கலை: கினிகத்தேனை எஸ். வி. துரைராஜா எழுதிய கடிதம். மே திங்கள் முதல் நாள் செய்திகளைத் தொடர்ந்து இடம்பெற்ற, "உலகத்தோர் அனைவரும் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டியின் எழுச்சி" என்ற செய்தித் தொகுப்பினை கேட்டேன். சிறப்பு. மேலும், இவ்வாண்டு ஆகஸ்ட் திங்களில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் சாராம்சங்களை நாளுக்கு நாள் செய்திகளூடாக ஒலிபரப்பி வரும் சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு என் பாராட்டுக்கள். க்ளீட்டஸ்: எஸ். கே. பாப்பம்பாளையம் பி.டி. சுரேஷ்குமார் எழுதிய கடிதம். சீனாவை பிளவுபடுத்த பல தீய சக்திகள் முயற்சி செய்து வருகின்றன என்றாலும் அவற்றால் ஒரே சீனா என்ற நிலையை மாற்றமுடியாது என்பது என் கருத்து. மேலும், நமது நிகழ்ச்சிகளில் செய்திகளின் மூலம் ஒலிம்பிக் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடிவதில் மகிழ்ச்சியடைகிறேன். கலை: அடுத்து கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். வாரத்தில் இரண்டு நாட்கள் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சிக்கு பதிலாக, அன்றாட வாழ்க்கையில் பேசப்படும் சீன மொழி வாக்கியங்களை அறிமுகப்படுத்துவதாக கலையரசி அவர்கள் அறிவித்தபோது மகிழ்ச்சியடைந்தேன். பேச்சு வழக்கை அறிந்துகொள்வது, நேயர்களுக்கு மிக எளிதாக இருக்கும். நேயராக இந்த நிகழ்ச்சியை பெரிதும் வரவேற்கிறேன். மின்னஞ்சல் பகுதி ......ஊட்டி; எஸ்.நித்தியா...... அழகான குவாங்சி எனும் தலைப்பிலான பொது அறிவுப் போட்டி துவங்கியுள்ளதை பற்றி அறிந்தேன். இப்போட்டியின் மூலமாக குவாங்சியின் வரலாறு, பண்பாடு, வளர்ச்சி, பொருளாதாரம், சுற்றுலா இடங்கள்,போன்ற வற்றை பற்றி தெளிவாக அரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். மேலும் பெய்சிங் ஒலிம்பிக் எனும் பொது அறிவுப் போட்டியில் 7 லட்சத்து 20 ஆயிரம் விடைத்தாள்கள் சீன வானொலிக்கு வந்து சேர்ந்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். வானொலி வரலாற்றில் சீன வானொலி பல சாதனைகள் படைக்கப் போவது உறுதியே. நன்றி. ……முனுகப்பட்டு.பி.கண்ணன்சேகர்…… அழகான குவாங்சி எனும் பொது அறிவுப் போட்டி பற்றி இணையதளத்தில் பார்த்தேன். புதுமையான முறையில் வண்ணமயமாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டு மகிழ்ந்தேன். குவாங்சியின் அழகை நேரில் கண்டு களிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. வெண்கழுத்து குரங்கு போன்ற அதிசயமான விலங்குகள் வாழும் குவாங்சி மாநிலம் சுற்றுச்சூழலின் பிறப்பிடமாக திகழும் என்பதில் ஐயமில்லை. பொது அறிவுப் போட்டியில் பல ஆயிரம் நேயர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்பதே என் விருப்பமாகும். திருச்சி அண்ணா நகர், V. T. இரவிச்சந்திரன் ஜூன் 28 நாள் கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த சீன வானொலி மொழிப் பிரிவுகளிலும் தமிழ்ப்பிரிவுக்கு கிடைத்த இரண்டு முதலிடங்கள் குறித்து செவிமடுத்தேன். நண்பர் செல்வத்திற்கு தலைசிறந்த சிறப்பு நேயர் என்ற பொருத்தமான தகுதியை சீன வானொலி தந்து பெருமைப்படுத்தியுள்ளது. அவருடைய நேர்காணல் நிறைகுடம் என்றும் தளும்பாது என்பதை காட்டியது. மேலும் நண்பர் கூறியது போன்று தனியொரு எந்த நேயராலும் சீன வானொலியின் வளர்ச்சிக்கு தோளுயர்த்திச் சொந்தம் கொண்டாட முடியாது. பல்வேறு காலக்கட்டங்களில் பல நேயர்களால் வளர்ச்சி செய்யப்பட்டது. சீன வானொலி என்பது விழுதுவிட்ட ஆலமரம். பல விழுதுகளால் தாங்கப்படும் மரம். இதில் எல்லா விழுதுகளுமே மரத்தை தாங்கி நிற்கின்றன என்பதை தனக்கே உரிய தன்னடக்கத்துடன் கூறினார் நண்பர் செல்வம். மீண்டுமொரு முறை அவருக்கும், தமிழ்ப்பிரிவின் தலைவருக்கும் வாழ்த்துக்கள். வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம் சூன் திங்கள் 3 ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டேன். •அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வுப் பாதுகாப்பு• நிகழ்ச்சியில், •பள்ளியில் பீகிங் இசை நாடகப் பாடம்• என்ற கட்டுரையை வழங்கினார் வாணி. பீகிங் இசை நாடகம் என்பது, உலகத்தில் சீனாவைத் தவிர வேறு எங்கும் காண முடியாத ஓர் அரிய பண்பாட்டுச் செல்வமாகும். நவநாகரீக யுகத்தை நோக்கி பயணிக்கும் இக்காலக்கட்டத்தில், பீகிங் இசை நாடகம் என்பது முதிய தலைமுறையோடு முடிந்துபோகக் கூடும். இவற்றை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்ல, பள்ளியில் பாடமாகக் கற்பிப்பது மிகவும் இன்றியமையாத கடமையாகும். இதை புரிந்து கொண்டு, துவக்க மட்டும் இடைநிலைப் பள்ளிகளில் பீகிங் இசை நாடகத்தை பாடமாக வைத்து இளம்பிஞ்சுகளின் மனதில் இதன் மீதான ஆர்வத்தை தட்டி எழுப்பும் முயற்சிக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
|