சீனச் சமூகத்தில், 1980ஆம் ஆண்டுக்கும் 1990ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலத்தில் பிறந்தவர்கள், பசுங்கூடத்தில் வளரும் தலைமுறையினராக அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பொறுப்புணர்வு இல்லாத தலைமுறையினராக கருதப்படுகின்றனர். ஆனால் இக்கட்டுரையில் நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் இளம் பெண்கள் விதிவிலக்குகளாக இருக்கின்றனர்.
வட சீனாவின் உள்மங்கோலியாவைச் சேர்ந்த QI MING YU, 1982ஆம் ஆண்டில் பிறந்தார். பல்கலைக்கழகத்தில் விளையாட்டு கல்வியை அவர் கற்றுக் கொண்டார். சிச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பாதிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று தன்னார்வத் தொண்டராக சேவை புரிய அவர் உறுதி பூண்டார். இணையதளத்தின் மூலம் ஒரே வயதளவிலான 5 இளைஞர்கள் அவருக்கு தெரிந்தவர்களாயினர். ஒரு நாள் பொருட்களை வாங்கிய பின் இந்த 6 இளைஞர்கள் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் பாதையில் நடந்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில், போதிய நீர், உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் கூடாரங்களை அவர்கள் தாங்களாகவே கொண்டு சென்றனர். 6 பேர் இடம்பெறும் இந்தக் குழுவைப் பற்றி குறிப்பிடுகையில் QI MING YUவின் முகத்தில் பெருமையுடன் கூடிய புன்னகை மலர்ந்தது. அவர் கூறியதாவது—
"அவசியப் பொருட்களைக் கொண்டு வந்த எங்கள் குழு சிறு கிளையாக காணப்படலாம். எங்கள் குழுவில் பொது மருத்துவரும் உளவியல் மருத்துவரும் இருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து நல்ல உடல் நிலை கொண்ட இளைஞர்கள் இருவர் உள்ளனர். ராணுவச் சேவையிலிருந்து விலகிய படைவீரர் ஒருவர் இடம்பெறுகிறார். என்னையும் சேர்த்து, நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஓரளவில் பங்காற்ற முடியும்" என்றார் அவர்.
1980ஆம் ஆண்டுகளில் பிறந்த 6 இளைஞர்கள் உருவாகிய இந்தப் பேரிடர் நீக்க மற்றும் மீட்புதவிக் குழு, பாதிக்கப்பட்ட இடங்களில் 9 நாட்கள் சேவை புரிந்தது. இக்காலத்தில் பெற்ற பயன்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், தாம் பக்குவம் அடைந்து, மக்களுக்கிடையிலான அன்புணர்வை எவ்வாறு பேணிமதிப்பது என்பதை புரிந்துக் கொண்டுள்ளதாக QI MING YU கூறினார்.

QI MING YU போன்று, ஷாங்காய் மாநகரில் பணிபுரியும் இளம் பெண் CAI CAI 1980ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தார். வென் ச்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்ததும் அவர் பாதிக்கப்பட்ட இடத்துக்கு விரைந்துச் சென்று தன்னார்வத் தொண்டராக சேவை புரிந்தார்.
"1983ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் பிறந்தேன். நான் சிச்சுவான் மாநிலத்தின் தே யாங் நகரைச் சேர்ந்தவள். நிலநடுக்கம் நிகழ்ந்தது பற்றிய செய்தியை அறிந்த போது என்னால் நம்ப முடியவில்லை. நான் விமானச் சீட்டை வாங்கி நேரடியாக வீடு திரும்பினேன். வீட்டைச் சென்றடைந்த நான் மேலும் அதிர்ச்சி அடைந்தேன். வீடுகள் அனைத்தும் இடிந்து விழுந்திருந்தன. வீட்டுக்குத் தேவையானவற்றை ஏற்பாடு செய்த பின், மியன் யாங் நகரிலுள்ள ஜு சோ விளையாட்டு அரங்கிற்குச் சென்று, மருந்துகளை ஏற்றுச்செல்வது, தொற்று நோய் தடுப்பு பற்றிய துண்டுப்பிரசுரங்களை வினியோகிப்பது போன்ற வேலைகளைச் செய்தேன். வெளிநாட்டினர் சிலர் அங்கே இருந்தனர். வெளிநாட்டு மொழியைக் கற்றுக் கொண்ட நான், மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டேன். அவர்களுடன் இணைந்து கூடாரங்களிலுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளை வழங்கினேன்" என்றார் CAI CAI.

தற்போது ஷாங்காய் மாநகருக்குத் திரும்பிய CAI CAI தனது பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலநடுக்கத்தினால், எவ்வாறு அனைத்தையும் பேணிமதிக்க வேண்டுமென கற்றுக் கொண்டது மட்டுமல்ல, 1980ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பையும் தெரிந்து கொண்டதாக அவர் கூறினார்.
|